Home>>செய்திகள்>>மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு பொய்யான தகவலை அளிக்கும் அதிகாரிகள்.
செய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு பொய்யான தகவலை அளிக்கும் அதிகாரிகள்.

மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு பொய்யான தகவலை அளிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாத காரணத்தால் இங்கு சிகிச்சைக்கு வரும் அனைவரும் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள் எனவே, உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சாய்வுதளம் அமைத்து கொடுக்க வேண்டும் என கடந்த 15.11.21 அன்று மாவட்ட ஆட்சியரிடம் TARATDAC சங்கத்தின் சார்பில் மனு அளித்திருந்தோம்.

மனுவிற்கான பதிலை கடந்த 15.11.21 அன்று வெளியிட்டுள்ளார்கள். அதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, உங்களது மனு நிராகரிக்கபடுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். நாங்கள், தகுந்த ஆதாரத்துடன்தான் மனு செய்திருந்தோம்.

குறிப்பாக பழனி தாலுகா பாலசமுத்திரம், திண்டுக்கல் மேற்கு தாலுகா ஸ்ரீ ராமபுரம், திண்டுக்கல் கிழக்கு தாலுகா சிலுவத்தூர் என மூன்றையும் ஆதாரத்திற்காக குறிப்பிட்டிருந்தோம். தற்போது மேலும் ஓர் ஆதாரத்தை புகைப்படத்துடன் வெளியிடுகிறோம். பழனி தாலுகா அமரபூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாய்வுதளம் இன்றுவரை அமைக்கப்படவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க வேண்டுமென்றே பொய்யான தகவலை அளித்து மாற்றுத்திறனாளிகளை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஏமாற்றி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவிற்கு பொய்யான தகவலை அளித்த அரசு அதிகாரிகள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பாகவும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு மாற்றுத்திறனாளிகள் தள்ளப்படுவார்கள் என்பதையும் இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்.


செய்தி உதவி:
திரு. P. செல்வநாயகம்,
மாவட்ட தலைவர்

திரு. S. பகத்சிங்,
மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு.
தொடர்பு இலக்கங்கள்: 9360804000, 9994873253

Leave a Reply