முத்துப்பேட்டை தனி தாலுக்கா அறிவிப்பை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் அரசு முதன்மைச் செயலாளரை சந்தித்து சட்டபேரவை அறிவிப்பை சுட்டிகாட்டி நினைவூட்டல் கடிதம் அளித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் முத்துப்பேட்டை தனி தாலுக்கா கோரிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் திரு.குமார் ஜெயந்த (இந்திய ஒன்றிய ஆட்சி பணியாளர்) அவர்களை இன்று (08/02/22) தலைமைச் செயலகத்தில் சந்தித்து சட்டப்பேரவை அறிவிப்பை விரைந்து நடைமுறைபடுத்திட நினைவூட்டல் கடிதம் அளித்து வலியுருத்தினார்.
தோழர் க.மாரிமுத்து அவர்கள் அரசு முதன்மை செயலாளருக்கு அளித்துத்துள்ள கோரிக்கை மனு விபரம் பின்வருமாறு:
“திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுக்கா உருவாக்கப்படும் என 2011 ஆம் ஆண்டு முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஐயா. கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது, இதில் எந்தெந்த கிராமங்கள் சேர்க்க வேண்டும் என வரைவு பட்டியலும் தயார் செய்யப்பட்டது இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 10 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆட்சி மாறியவுடன் முத்தமிழறிஞர் முனைவர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டார்கள் முத்துப்பேட்டை தாலுக்கா அறிவிப்புக்குப் பிறகு புதிய தாலுகாக்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கும் வந்துவிட்டன. ஆனால் முத்துப்பேட்டையை மட்டும் கடந்த அதிமுக அரசு புறந்தள்ளியே வைத்துள்ளது. இதனால் முத்துப்பேட்டை நகர வளர்ச்சி, சுற்றுப்புற கிராமங்கள் வளர்ச்சி, புதிய திட்டங்கள் செயல்படுத்துதல் உள்ளிட்ட பலவும் பின்தங்கிய உள்ளது.
இதுகுறித்து கடந்த ஆகஸ்டு 2022ல் நடந்த நிதிநிலை கூட்டத் தொடரில் மாண்புமிகு அமைச்சரின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்த போது “இது முத்தமிழறிஞர் ஐயா கருணாநிதி அவர்கள் அறிவித்த திட்டம் என்பதால் நானே வருகை தந்து தனி தாலுக்கா அறிவிப்பை நடைமுறைபடுத்தி துவங்கி வைப்பேன் என்று சட்டப்பேரவையில் கூறியதை நினைவூட்டுவதோடு முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்த முத்துப்பேட்டை தனி தாலுக்கா திட்டத்தை விரைவில் தாங்கள் நடைமுறைப்படுத்தி ஆவண செய்திட கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளார்.
—
செய்தி உதவி:
தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.