தோழர் க. செந்திறல் மாரடைப்பால் திடீர் மறைவு – பெரும் துயரம்! என – தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!
தஞ்சை வடக்குவாசல் இளந்தோழர் க. செந்திறல் அவர்கள் நேற்று (20.03.2022) மாரடைப்பால் காலமான செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது. பெருந்துயரம்!
மிக இளமையிலேயே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சமத்துவக் கொள்கை, தமிழ்த்தேசியக் கொள்கை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு, இளைஞர் பிரிவான தமிழக இளைஞர் முன்னணியில் சேர்ந்து களப் பணிகள் ஆற்றி செயல்வீரர் ஆனார். அவர்கள் குடும்பமே நம் இயக்கத்தில் – தொழிற்சங்கத்தில் இருந்தது.
செய்திகளை உள்வாங்கிக் கொள்ளும் அறிவுத் திறனும், போர்க்குணமும் மிக்க தோழர் செந்திறல்! புதிய ஆத்திச்சூடியில் “முனைமுகத்து நில்” என்பார் பாரதியார்! அவ்வாறு போராட்டங்களில் முன்னணியில் நிற்பார்; கைதாவார் தோழர் செந்திறல்.
தமிழக இளைஞர் முன்னணியின் தஞ்சை நகரச் செயலாளராகத் துடிப்புடன் செயல்பட்டார்.
வெளிமாநிலத்தார் நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தின் கீழ் மலையாள ஆலுக்காஸ் நகை வணிக நிறுவனங்கள் முன் தமிழ்நாட்டின் பல நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. தஞ்சைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் செந்திறலும் ஒருவர்.
“தமிழர் கண்ணோட்டம்” மாத இதழ் விற்பனையிலும் ஈடுபட்டார். அவ்வாறு சென்றபோது தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் சொல்லாய்வு அறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அருளி ஐயா அவர்களுடன் செந்திறலுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. அருளி ஐயா அவர்கள்தாம் வெங்கடேசன் என்ற பெயரை செந்திறல் என்று மாற்றினார்.
நேற்று திருச்சியில் ஊர்தி ஓட்டிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு வண்டியை நிறுத்திவிட்டு சாலை நடைமேடையில் உட்கார்ந்துள்ளார். அப்போதே இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சிச் செய்தி துன்பம் தருகிறது. கருவுற்றுள்ள இளம் மனைவி, கைக்குழந்தை இவர்களை விட்டுப் பிரிந்துவிட்டார் தோழர் செந்திறல். தோழர் க. செந்திறல் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் துயரத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
—
செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
—
செய்தி சேகரிப்பு:
திரு. கலைச்செல்வன்,
திருவாரூர்.