Home>>இந்தியா>>அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, சவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் தொடுப்பதா?
செந்தமிழன் சீமான்
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, சவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் தொடுப்பதா?

டெல்லி, சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற பாசகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிசத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச் செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. இவையாவும் இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும்.

பாசகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப் பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழானச் செயல்களாகும்.

ஆகவே, டெல்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்ட அகில பாரதிய வித்யார்தி பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரியின் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Reply