திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.க.மாரிமுத்து அவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுளள்து.
தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தமிழகத்தில் மிக பெரிய சதுப்புநில பகுதியாக உள்ள முத்துப்பேட்டை அலையாத்திகாடு பகுதிகளை சர்வதேச தரத்தில் சுற்றுலா தளமாக மேம்படுத்திட கோரிக்கை வைத்தார்.
இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் முனைவர் மா.மதிவேந்தன் அவர்கள் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை எண் 29ன் படி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் பகுதியை ரூ 4 கோடி மதிப்பீட்டில் நவீன சுற்றுலா தளமாக மேம்படுத்திட அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்த வண்ணம் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் படகு சவாரி, நடைபாதைகள், பறவைகளை காண பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகளுக்காகவும் வசதிகளுடன் கூடிய நவீன சுற்றுலா தளமாக மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
—
படம் மற்றும் செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.