செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டு, சென்றமாதம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பன்னாட்டு ஓக ஆராய்ச்சி மையத்திற்குத் திருமூலர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோருகிறோம்.
தமிழ் சித்தர்கள் உருவாக்கிய சித்த மருத்துவத்தின் ஓர் இன்றியமையா அங்கம்தான் சித்தர் ஓகக்கலை. பன்னெடுங்காலமாக மக்கள் பயன்படுத்திய நம் ஓகக் கலையை ஐந்தாம் நூற்றாண்டு காலத்திலேயே திருமூலர் பதிவு செய்ததாக நாம் அறிகிறோம். ஓகக் கலையின் அடிப்படை மற்றும் அதன் உள்பிரிவுகளை 3,000 பாடல்கள் கொண்ட திருமந்திரத்தில் திருமூலர் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட “பன்னாட்டு ஓகக்கலை மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மைய”த்திற்கு மூத்த சித்தர் திருமூலரின் பெயரைச் சூட்டிட வேண்டுமென்றும், அம்மையத்தில் திருமூலர் ஆய்வு இருக்கை தொடங்கப்பட்டு, திருமந்திர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் தேவையான உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றை நம் மக்களுக்குத் தெரிவிக்க ஆவன செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.
—
திரு. சுப. உதயகுமரன்,
பச்சைத் தமிழகம் கட்சி நிறுவனர்,
மே 5, 2022.