நாட்டின் விலைவாசி உயர்வு ஒன்றிய, மாநில அரசுகளின் தவறான, முதலாளித்துவ, வாக்கு அரசியல் எனும் குறுகிய பார்வை காரணமாக விண்ணை முட்டும் அளவுக்கு நாடோறும் ஏறிக் கொண்டிருக்கிறது யாவரும் அறிந்ததே. மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும் உணவுப் பொருட்கள், எரிபொருள், கல்வி, மருத்துவம் முதலானவற்றின் விலைப்புள்ளிகள் இதன் விளைவாக கிடுகிடுவென உயர்கின்றன. இது சராசரி மனித நுகர்வையும் பயன்பாட்டையும் பெருமளவில் பாதிப்படையச் செய்கிறது.
குறிப்பாக, மனித சமூகத்தில் பெரும்பான்மையாக வாழும் அடித்தட்டு மக்கள் மற்றும் மத்திய தர வர்க்கம் இந்த விலைவாசி உயர்வை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படும் அவலநிலை அதிகமுள்ளது. தவிர, அன்றாடம் உயரும் எரிபொருள் விலை உயர்வால் உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து நிதிச் சுமைகள் பொதுமக்கள் தலையில் பெரும் பாரமாக இருந்து வருவது கண்கூடு. அதாவது பட்டாம்பூச்சிகளின் தலையில் பாறாங்கல் சுமைகள். உயிரைக் கொடுத்துக் குடும்பம் நகர்த்திச் செல்ல வேண்டிய துயர நிலையில் குடும்பத் தலைமை ஆளாகியுள்ளது.
130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஓடாய் தேய்ந்து உழைத்து ஈட்டிக் கிடைக்கும் சொற்ப வருவாயிலிருந்தும் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் ஒரு ரூபாயாவது நேரடிகவோ, மறைமுகமாகவோ வரியாகப் பெற்றுவிட வேண்டும் என்பதில் இரு அரசுகளும் தெள்ளத் தெளிவாக இருக்கின்றன. அதாவது தொழிலாளர் வர்க்கத்தினருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதியத்தில் திட்டமிட்டுக் குறைத்துக் கொடுத்து நியாயமற்ற முறையில் வரிக்குவிப்பு செய்யும் நோக்கும் போக்கும் மலிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் நவீன பொருளாதார சுரண்டலாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடிப்படை மற்றும் நியாயமாகப் போராடிப் பெற்ற ஊதியப் பலன்களில் முதலில் கைவைக்கும் அநீதிகள் பெருகி வருவது நல்லதல்ல. அதாவது, வெற்றுக் கவர்ச்சித் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மிகைசெலவின வருவாய்க்கு முதல் பலியாடுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆக்கப்படுவது வேதனையான ஒன்று. இதற்காக ஊதியக் குறைப்பு மற்றும் இழப்பு, பணப்பலன்கள் ஒழிப்பு, ஒத்திவைப்பு, தள்ளிவைப்பு மற்றும் நிலுவைகள் அபகரிப்பு போன்ற ஊழியர்நலன் விரோத நடவடிக்கைகளைப் பகிரங்கமாகக் கட்டவிழ்த்து விடுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
நாட்டின் விலைவாசிக் குறியீட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ப ஆறு மாதத்திற்கு ஒரு முறை கணக்கிட்டு வழங்க அறிவுறுத்தும் அகவிலைப்படியையும் காலம் கடந்து ஓரிரு விழுக்காடுகள் குறைத்துக் கொடுப்பதே ஒன்றிய அரசின் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்ற குருதி சிந்திப் போராடிப் பெற்ற கொள்கை முடிவுகள் தற்போது பலவீனப்பட்டு வருவது அநீதியானது. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் கணக்கிடப்பட்டு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் காலம் கடந்து வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி உயர்வு தற்போது வரை அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
இங்கு எந்தக் கடைகளிலும் நிறுவனங்களிலும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கப்பெற்ற ஒன்றிய அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு விலையும் கடந்த பல ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வின் நிலுவைகளையும் புதிய ஊதியக் குழுவின் மூலம் கிடைக்கப்பெற வேண்டிய ஊதிய நிலுவைகளையும் இலட்சக்கணக்கில் இழந்து வாடும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அவலநிலை கருதி தள்ளுபடி விலையும் வைத்து யாரும் தர முன்வந்ததாக வரலாறில்லை. எப்போதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடிமடியில் கைவைப்பதையே வாடிக்கையாகக் கொள்வது ஒரு நல்ல மாநில அரசின் செம்மைப்பணியாகாது.
அதேபோல் இது ஒரு நல்ல பொருளாதார நடவடிக்கையும் ஆகாது. தட்டுத் தடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணைப் பறித்து பிறிதொரு தொழிலாளர் வர்க்கத்தினரின் அழுகையை நிறுத்த வண்ண வண்ண பலூன்கள் வாங்கித் தந்து சுரண்டிய பணத்தை வீணடிப்பது என்பது நல்ல அறிவுடைமைச் செயலாகாது.
அண்மைக்காலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மட்டுமே நிரந்தர வருமானமாக உள்ளது. வேறெந்த ஊதியப் பலன்களையும் கொரோனா கால பேரிடரைக் காரணம் காட்டி வழங்காமல் காலவரையின்றி அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஊக்க ஊதியம், விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஊதியக்குழு நிலுவை என்று எதுவுமில்லை. ஓர் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தம் ஆண்டு வருமானத்தில் ஒரு மாத வருமானத்திற்கும் மேற்பட்ட தொகையை ஆண்டுதோறும் வருமான வரியாகக் கட்டி அழவேண்டி இருக்கிறது. ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாம் பணிபுரியும் எல்லைக்குட்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திற்கு கட்டாய தொழில்வரி செலுத்துதல் என்பது வேறு. மேலும், மனித ஆக்க மற்றும் இயற்கைப் பேரிடர் காலங்களில் வலுக்கட்டாயமாக அரசால் பிடித்தம் செய்யப்படும் ஒரு நாள் ஊதியம் என்பது ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் தனி இழப்பாகும்.
இதுதவிர, கடமைகளைச் செவ்வனே செய்து இழந்த உரிமைகளுக்காகத் தொழிலாளர் விதிமுறைகளுக்குட்பட்டு நியாயமான முறையில் அமைதி வழியில் மேற்கொள்ளப்படும் அறவழியிலான போராட்டங்கள் மீது தொழிலாளர் நலன்களுக்கு எதிரான வகையில் பணியில் இல்லை; ஊதியம் இல்லை (No work; No pay) என்று கூறி இரும்புக்கரம் கொண்டு இரக்கமில்லாமல் மேற்கொள்ளப்படும் ஊதிய வெட்டுகள் என்பன பெரும் அநீதியான போக்குகள் ஆகும். பல நேரங்களில் அரசு ஊழியர்கள் தாம் ஊதியத்தில் ஒரு பகுதியாக சேமித்து வைக்கும் சேமநல நிதியைத் தற்காலிக முன்பணக்கடனாகப் பெற்று, தற்செயலாக நிகழும் அல்லது நிகழவிருக்கும் வீட்டு சுப, துக்க நிகழ்ச்சிகள், பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாத பேரவலநிலையினை என்னவென்பது?
சட்டை கசங்காத அரசுப் பணி(White Collar Job)யில் நிகழும் ஊழியர் விரோத போக்குகள் கணக்கிலடங்கா. அதிகார வர்க்கத்தால் உண்டுபண்ணும் மனப்புழுக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரசுப் பணியாளரும் ஆசிரியரும் வெந்து வெந்து தணிவது என்பது இதுவரை யாரும் கண்டிராத ஒன்று. அரசு நிர்வாகத்தின் அச்சாணிகளாக விளங்கும் இத்தகையோரின் பணியாளர்கள் குறைப்பு காரணமாகக் காணப்படும் காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து மாரடிக்கும் கூடுதல் உழைப்பும் வேர்வையும் மன நெருக்கடிகளும் உரிய, உகந்த ஊதிய இழப்புகளும் அதனால் ஏற்படும் வலிகளும் வேதனைகளும் மிகுதி. அமைதியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் பறிகொடுத்த பணிப் பாதுகாப்பு கிஞ்சித்தும் இல்லாத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் வாழ்வியலில் நித்தமும் வேலைப்பளு மற்றும் பணி நெருக்கடிகளுக்குள் உழல்வோரின் வயிற்றில் வேண்டுமென்றே சட்டத்தையும் நீதியையும் துணைக்கொண்டு மிருகத்தனமாக அடிப்பதென்பது சகிப்பதற்கில்லை.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குரலற்றவர்களாக மனித சமூகத்தில் ஆக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் பொதுமக்கள் தளத்தில் அவர்களைப் பொதுமக்களும் அரசும் ஒருபோதும் பார்க்க மறுக்கிறது. இவர்கள் தனி நபர்கள் அல்லர். இவர்களைச் சுற்றியும் ஒரு பெரிய, சிறிய குடும்பங்கள் இருக்கின்றன என்பதையும் அவர்களுக்கும் பல்வேறு இன்றியமையாத அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டி உள்ளன என்பதையும் அரசு உணருதல் அவசியமாகும். எல்லாவற்றிற்கும் கடன் பட்டு வாழும் கொடிய வாழ்க்கை. எல்லோரும் ஏதோவொரு வகையில் விருந்து சாப்பிட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் வெறும் வயிற்றில் ஈரத்துணிக் கட்டிக்கொண்டு வாழ்ந்தே ஆக வேண்டும் என்று ஏகோபித்த அதிகார வறண்ட குரல் கொடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
அதுபோல் இதுபோன்ற கொடுமை இவர்களைத் தவிர வேறெந்த மானுடருக்கும் நிகழ்த்தப்படுவதும் இல்லை. அரசின் ஓட்டரசியல் உலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட உழைப்பரிசி வேகுவது முதலில் நிறுத்தப்பட வேண்டும்.
இனியாவது, இரு அரசுகளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான உழைப்பைத் திருடியும் சுரண்டியும் வெறுமனே யார் யாருக்கோ வாரியிறைப்பதைக் கைவிடுதல் நல்லது. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இது உள்ளது. கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது தப்பில்லை. அதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்களைப் பலி கொடுப்பது சரியல்ல. இவர்களும் இந்நாட்டு மன்னர்களே ஆவார்கள்.
அதிக விளைச்சலில் தானம் கேட்பது தவறாகாது. விதைநெல்லையே கொள்ளையடிப்பது என்பது எவ்வாறு மானுட நீதியாகும்? அதுபோல், உழைப்பிற்கேற்ற ஊதியம் உள்ளிட்ட அகவிலைப்படி உயர்வு மற்றும் இதரப் படிகள் என்பன அரசின் சலுகையல்ல. ஒவ்வோர் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் அடிப்படை ஊதிய உரிமை ஆகும். அதை எப்பாடுபட்டாவது வழங்கித் தீர வேண்டியது ஆட்சியாளரின் முழுமுதற்கடமையாகும்.
—
முனைவர். மணி கணேசன்,
பள்ளி ஆசிரியர்,
மன்னார்குடி.