Home>>அரசியல்>>முதல்வர் தொகுதியில் தமிழ்வழிக் கல்வி சேர்க்கைக்கு கட்டாயத் தடை!
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடுமொழி

முதல்வர் தொகுதியில் தமிழ்வழிக் கல்வி சேர்க்கைக்கு கட்டாயத் தடை!

முதல்வர் தொகுதியில் தமிழ்வழிக் கல்வி சேர்க்கைக்கு கட்டாயத் தடை!
==================================
வன்மையாக கண்டிக்கிறோம்!
==================================

நேற்று (14. 06. 2022 ) எனது இளைய மகன் சான்றோனை முதல் வகுப்பில் சேர்க்கவும், மூத்த மகன் இனியனை ஆறாம் வகுப்பில் சேர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அரசுப்பள்ளிக்கு சென்றோம். பல அதிர்ச்சிகளை கையிலேந்தி வரவேற்றது அப்பள்ளி!

ஒன்றாம் வகுப்பில் தமிழ்வழிச் சேர்க்கை கட்டாயமாக இல்லை என்றார்கள். ஆங்கில வழியில் மட்டும் தான் சேர்க்க முடியும் என்றார்கள். அடுத்து ஆறாம் வகுப்பு சேர்க்கையை விசாரிக்க சென்றோம். அங்கு தமிழ் வழி சேர்க்கை உண்டாம், ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தான் அவர்களுக்கு வகுப்பு நடக்கும். மற்ற நாட்கள் அவர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை என்றார்கள். ஏன் என்றோம். ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை பற்றாகுறையால் ஆறு முதல் எட்டு வகுப்பு வரையிலான பிள்ளைகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தான் பள்ளி என்றார்கள்.

அங்கிருந்து இலட்சுமிபுரம் அரசுப் பள்ளிக்கு வந்தோம். அங்கே ஆறாம் வகுப்பு தமிழ் வழி சேர்க்கை உண்டாம். ஆனால் அரை நாள் மட்டும் தான் பள்ளியாம். ஷிப்ட் முறையாம். அதாவது ஆறாம் வகுப்புக்கு காலை 9. 30 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை மட்டும். ஏழாம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மட்டும். எட்டாம் வகுப்புக்கும் இதே முறை தான். தமிழ் வழி, ஆங்கில வழி இரண்டுக்கும் இதுதான் நிலை. அரை நாளில் எப்படி பாடங்களை நடத்தி முடிப்பார்கள் ?

புத்தகரம் தொடக்கப் பள்ளியும், மரங்களற்ற சூரப்பட்டு நடுநிலைப்பள்ளியும் முழுக்க தகர மேற்கூரைகளால் ஆனது. சின்னச்சிறு பிள்ளைகள் அமர்ந்து படிப்பதற்கான சூழல் அறவே கிடையாது.

சென்னையின் மற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போலவே கதிர்வேடு அரசுப்பள்ளி ஆசிரியரும் கேட்டார். ஆங்கில வழியிலேயே சேர்க்கலாமே என்றார். நல்லா படிக்கிற பையனை தமிழ் வழியில் சேர்த்து வீணடிக்க என்னோட மனசு இடம் கொடுக்கல சார். அதற்கு மேல் உங்கள் விருப்பம் என்றார். அவர் நம்புவதை அவர் வெளிப்படுத்தினார். அவர் மீது கோவப்படுவதற்கு ஒன்றுமில்லை. தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்க்கு, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை ஆண்ட திமுக – அதிமுக திராவிட அரசுகள்!

கொளத்தூர், மாதவரம் இரண்டு தொகுதிகளையுமே 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக தான் ஆட்சி செய்கிறது. ஏன் போதிய வகுப்பறைகள் உள்ள கட்டிடங்களைக் கட்டவில்லை? அல்லது மாற்று ஏற்பாடாக மண்டபங்களையோ, வீடுகளையோ வாடகைக்கு எடுத்து முழுநேரமாக வகுப்பறைகளை நடத்தவில்லை? இதுதான் சென்னை அரசுப்பள்ளிகளின் நிலைமை, சென்னையில் தமிழ்வழிக் கல்வியின் நிலைமை. தமிழ் வழிக் கல்விக்கெதிரான இத்தகைய செயல்பாடுகளை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வன்மையாக கண்டிக்கிறது!

தமிழ்நாடு அரசே!

1. சென்னை – கொளத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ்வழி சேர்க்கையை உடனே தொடங்கு!

2. தமிழ் வழி சேர்க்கைக்கு என தனியே ஆசிரியர்களை அமர்த்து! சேர்க்கைக்கு வருகிற எல்லா பெற்றோர்களிடமும் தாய் மொழிக்கல்வியின் அவசியம் குறித்து விளக்கு! முதலில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தாய் மொழிக்கல்வியின் அவசியம் குறித்தும், கல்வியில் சிறந்த நாடுகளில் தாய்மொழிக் கல்வித்திட்டம் எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் உரிய தரவுகளுடன் பயிற்சி கொடு! இதை தனியார் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்து!

3. போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பு!

4. போதுமான எண்ணிக்கையில் வகுப்பறைகள் உள்ள கட்டிடங்கள் கட்டுவதற்கான வேலையை உடனே தொடங்கு! அதுவரை மாற்று ஏற்பாடாக பள்ளிக்கு அருகாமையிலுள்ள கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து முழுநேரமாக எல்லா நிலை வகுப்பறைகளும் செயல்பட நடவடிக்கை எடு!

5. தமிழ் மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை செய்ய நிதி ஒதுக்கீடு செய்! அதற்கென தனித்துறையை உருவாக்கு!

=====================================
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www. fb. com/tamizhdesiyam
ஊடகம் : www. kannottam. com
இணையம் : www. tamizhdesiyam. com
சுட்டுரை : www. twitter. com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube. com/Tamizhdesiyam
=====================================

Leave a Reply