Home>>அரசியல்>>தமிழக ஆளுநருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வருக்கும் இடையேயான அதிகாரப் பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தமிழக ஆளுநருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வருக்கும் இடையேயான அதிகாரப் பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது

தமிழக ஆளுநருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வருக்கும் இடையேயான அதிகாரப் பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பல்வேறு கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் தாமதிப்பது, முக்கிய சிக்கல்களில் முடிவெடுக்காமல் தள்ளிப்போடுவது, சனாதன சிந்தனைகளோடு தமது கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்துவது, தமிழக நிர்வாக நடவடிக்கைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நேரடியாகத் தலையீடு செய்வது போன்ற தொடர் நடவடிக்கைகளால் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர சக்திகள் கொதித்துப் போயுள்ளனர். உடனடியாக அவரவர் தம் சக்திகளுக்கு ஏற்ப ஆளுநருக்கு எதிராக அறிக்கைகளையும், போராட்டங்களையும் அறிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

உண்மையில் இதற்காக போராட வேண்டிய திமுகவினர் கனத்த மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றனர். திமுக தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்யும் விதமாகத் தான் தமிழக ஆளுநர் செயல்படுகிறார் என்பது வெளிப்படை. இதற்கு எதிராக களமிறங்க வேண்டிய திமுக பம்முகிறது. “மேதகு அவர்களுக்கு” என்று பணிவான வேண்டுகோளை முரசொலி மூலம் முன் வைக்கிறது. ஆனால் திமுகவினருக்கு இல்லாத கோபம், வேகம் இங்கு உள்ள புரட்சிகர சக்திகளுக்கு பொத்துக் கொண்டு வருகிறது. இந்த ராஜ விசுவாசம் எதற்காக?

முதலில் இந்த அதிகாரப் போட்டி என்பது ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாகும். இந்த ஆளும் வர்க்க சக்திகள் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களுக்குள் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்களின் கடந்த கால வரலாறும் அப்படித்தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

இவை எல்லாம் நன்கு அறிந்திருந்தும் கூட நமது நேசத்துக்குரிய புரட்சியாளர்கள் ஒன்றுகூடி ஆளுநருக்கு எதிராக அதிரடியாக “ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை” அறிவித்துள்ளனர். இந்த முற்றுகைப் போர் முழக்கத்தால் ஆளுநரின் மாளிகையில் உள்ள ஒரு புல்லைக் கூட இவர்களால் புடுங்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும். ஆட்சியாளர்களுக்கும் புரியும். என்றபோதிலும் இந்த அவசரமான போராட்ட அறிவிப்புகள் எதை காட்டுகின்றன? திமுக அரசின் மீதான அதிதீவிர இராஜ விசுவாசத்தைத் தான் காட்டுகிறது.

ஆர் எஸ் எஸ் சிந்தனையை ஏற்றுக்கொண்ட தமிழக ஆளுநர் அவர்களை வெளியேற்ற, மக்கள் செல்வாக்குள்ள தமிழக முதல்வராலேயே முடியாதபோது நமது புரட்சியாளர்கள் இவரை எப்படி வெளியேற்றி விடுவார்கள்? நடைமுறைக்கு சிறிதும் பொருத்தமில்லாத கோரிக்கை. இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை, ஆளுநரின் வரம்பற்ற அதிகாரங்கள் இருக்கும் வரை வெற்று முழக்கங்களால், ஆரவார போராட்ட அறிவிப்புகளால் எதையும் சாதித்து விட முடியாது.

ஆளுநர் போட்டி அரசாங்கமே நடத்துகிறார். இதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வராலேய தடுக்க முடியவில்லை என்றால் சிக்கலின் முடிச்சு எங்கிருக்கிறது? சிக்கலின் மையம் இந்திய அரசமைப்புச்சட்டம்.
இந்திய அரசமைப்பு சட்டத்தைத் திருத்தாமல், அதற்கான கோரிக்கைகளை, போராட்டங்களை முன்னெடுக்காமல், ஆளுநரின் அதிகார வரம்பு மீறலைக் கட்டுப்படுத்த முடியாது. குறைந்த பட்சமாக இந்த சனநாயகக் கோரிக்கையை முற்போக்கு சக்திகள் முன்னெடுக்க வேண்டும். இந்த கருத்துகளை மக்கள் மயப்படுத்த வேண்டும். ஒன்றிய மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்த மறு விவாதத்தைத் தொடங்க வேண்டும். இதற்காக வெகுமக்களை அணி திரட்ட வேண்டும்.

தோழமையுடன்

மருதுபாண்டியன்
சோசலிச மையம்
7550256060

Leave a Reply