பிரதமர் மோடி குசராத்தின் முதலமைச்சராக பதவி வகித்தபோது, அகமதாபாத்தின் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் நடந்த மதக்கலவரத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கி எடுத்தது. கலவரம் நடந்த பகுதியில் வசித்த காங்கிரஸ் எம்பியான எஹ்சான் ஜாப்ரி, கலவரக்காரர்கள் தங்களை சூழ்ந்து கொண்டுள்ளது குறித்து அன்றைய முதலமைச்சர் மோடி மற்றும் உயர் காவல் அதிகாரிகளிடம் மன்றாடியபோதும் கல்நெஞ்சம் படைத்தவர்களாக அமைதியாக இருந்து விட்டனர். இந்த கலவரத்தில் ஜாப்ரி எரித்துக் கொல்லப்பட்டார். இது அதிகார வர்க்கத்தின் ஆசியோடு நடத்தப்பட்ட படுகொலை என்பது அதன்பிறகு தான் உறுதியானது.
இந்த கொடூரப் படுகொலை சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரித்து அறிக்கை தந்துள்ளது. ஜாலியன்வாலாபாக் படுகொலையை மிஞ்சும் அளவுக்கு நடந்த குசராத் படுகொலையை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. அதன்பிறகும் இந்த பிரச்சினையில் நீதி கிடைக்கவில்லை.
குசராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது போது தான் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதல்கள் அதிகம் நிகழ்த்தப்பட்டன. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆறே மாதத்தில் மோடியை புனிதராக ஊடகங்கள் சித்தரித்தன. அதன்பின்னர் அவர் பிரதமரானார். கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு வழக்கிலிருந்தும் அவர் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டார். கடைசியாக குல்பர்க்கா சொசைட்டியில் நடந்த 68 பேர் படுகொலை மேல்முறையீட்டு வழக்கிலும் பிரதமர் நரேந்திர மோடியை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்தச் சூழலில் தான் குசராத்தில் மதக்கலவரங்களால் கொல்லப்பட்ட குடும்பங்களுக்காக களத்தில் இறங்கிப் போராடினார் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத். 19 ஆண்டுகள் அவர் நடத்திய போராட்டத்தில் சில எம்.எல்.ஏக்கள், அதிகார உச்சத்திலிருந்த சிலரும் கைது செய்யப்பட்டனர். எனினும், இந்த படுகொலைகளுக்கு எல்லாம் காரணமானவர் என்று தீஸ்தா செதல்வாத்தால் அடையாளம் காட்டப்பட்ட மோடியை மட்டும் தண்டிக்க முடியவில்லை.
தீஸ்தா திரட்டித் தந்த தகவல்கள் அடிப்படையில், படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பியாக இருந்த எஹ்சான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி குசராத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா மேல்முறையீடு செய்தார். அங்கும் அவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
வன்முறை தன்னிச்சையாக நடந்தது என்றும் பின்னணியில் அரசு சதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. வன்முறைக்குப் பிறகு அப்போதைய குசராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி நடத்திய கவுரவ் யாத்திரையை உச்ச நீதிமன்றம் எத்தகைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறது என்று புரியவில்லை.
நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது. தன்னந்தனியே குசராத் மதக்கலவர படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய தீஸ்தாவை நாடே பாராட்டியது. அவருக்கு எதிராக பழிவாங்கும் வகையில், நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஆதரவு தருகிறது.
நீதி கேட்பவர்களுக்கு எதிராக பழிவாங்கும் போக்கை நீதிமன்றங்களே ஆதரித்தால், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள் எப்படிச் செயல்பட முடியும்? அதிகாரிகளைக் கேள்வி கேட்பவர்களைத் தண்டிக்க உச்ச நீதிமன்றம் விரும்புகிறது. சட்டப்போராட்டம் நடத்திய தீசுதா, குசராத்தின் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா ஆசியோடு குசராத் காவல் துறை கைது செய்திருக்கிறது. இதனை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
நாடு சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது, ஆட்சியாளர்களின் அழிவின் ஆரம்பத்தையே வெளிப்படுத்துகிறது.
—
திரு. கே. எஸ், அழகிரி,
தமிழ்நாடு காங்கிரசு கட்சி தலைவர்.