ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச்
சட்டத்திற்கு ஒப்புதல் வரவேற்கத்தக்கது!
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அப்பாவிகள் தற்கொலை செய்து கொள்வதையும், அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும் தடுக்கும் நோக்குடனான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது ஆகும்.
தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளில் சந்தித்த மிகப்பெரிய சாபக்கேடுகளில் முதன்மையானது ஆன்லைன் சூதாட்டம். உலக அளவில், குறிப்பாக இங்கிலாந்தில் 2009-ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின் 2014-ஆம் ஆண்டில் அவை இந்தியாவுக்குள் நுழைந்தன. 2020-ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் லட்சக்கணக்கானோர் இந்த தீமைக்கு அடிமையாயினர். 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு நவம்பர் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதையும், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முறைப்படியான சட்டம் இயற்றப்பட்டதையும் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வந்தன. 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது வரையிலான 10 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒருவர் கூட உயிரிழக்க வில்லை. ஆனால், அதற்கு பிந்தைய 10 மாதங்களில் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பா.ம.கவின் அழுத்தங்கள் காரணமாகத் தான் முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டில் அவசர சட்டமும், 2021-ஆம் ஆண்டில் சட்டமும் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட திருத்தப்பட்ட புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்தி வந்தது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 10-ஆம் தேதி எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும், அது குறித்து அரசுக்கு இரு வாரங்களில் பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான் இப்போது அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக என்னென்ன காரணங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்ததோ, அவை அனைத்தும் அவசர சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. ஆன்லைன் சூதாட்டங்கள் திறன் சார்ந்தவை அல்ல…. அவை திறனை வளர்க்கவில்லை; ஆன்லைன் சூதாட்டங்கள் அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலானவை; ஆன்லைன் சூதாட்டங்களால் உடல் நலன் பாதிக்கப்படுகிறது; ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்த இயலாது என்பதால் அவற்றை தடை செய்வது தான் தீர்வு என்று அவசர சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாக அறிகிறேன்.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட முன்னெடுப்புகளால், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் இரண்டாவது முறையாக தடை செய்யப்படவுள்ளது. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யும் ஒரு கட்சிக்கு இதை விட பெரிய மகிழ்ச்சியும், பெருமையும், பெருமிதமும் இருக்க முடியாது. அடுத்த இரு நாட்களுக்குள் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்க மாட்டார்கள்; ஆன்லைன் சூதாட்டத்தால் எவரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்; எந்த குடும்பமும் நடுத்தெருவுக்கு வராது என்பதை விட தமிழக மக்களுக்கு ஓர் அரசியல் கட்சியால் என்ன நன்மை செய்து விட முடியும்?
அடுத்தகட்டமாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவசர சட்டத்தை இன்றைக்குள் ஆளுனருக்கு அனுப்ப வேண்டும்; அவரது ஒப்புதலை உடனடியாக பெற்று அரசிதழில் வெளியிட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த மே 31-ஆம் தேதி தமிழக ஆளுனரை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசிய நான், ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்தும், அதனால் நிகழும் தற்கொலைகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினேன். ஆன்லைன் சூதாட்டங்களால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து ஆளுனரும் கவலை தெரிவித்தார்.
எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய சமூகத்தீமைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்; வெற்றி பெறும் என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.