Home>>கட்டுரைகள்>>ஆசிரியர்களை அச்சுறுத்தும் மண்டல அளவிலான பள்ளி ஆய்வு
கட்டுரைகள்கல்விசெய்திகள்தமிழ்நாடு

ஆசிரியர்களை அச்சுறுத்தும் மண்டல அளவிலான பள்ளி ஆய்வு

ஆசிரியர்களை அச்சுறுத்தும் மண்டல அளவிலான பள்ளி ஆய்வு
கடந்த இரண்டு கல்வியாண்டுகளை மாணவர்களிடமிருந்து கொரோனா நோய்ப் பெருந்தொற்றுக் காலம் முழுதாக விழுங்கிக் கொண்டு விட்டது. கற்றல் கற்பித்தல் நடைபெறாத இக்காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் அடைவுகளில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆறாம் வகுப்பு மாணவனுக்கு எண்ணும் தெரியவில்லை. எழுத்தும் புரியவில்லை. தம் பெயரைக் கூட முழுமையாக ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழில் எழுதவும் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை நிலவுகிறது. பத்து வாய்ப்பாடு முழுமையாகச் சொல்லத் தெரியவில்லை. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் எளிய அடிப்படைக் கணக்குகளைப் பிழையில்லாமல் தீர்வு காண முடியவில்லை.
இத்தகுச் சூழலில், நடப்புக் கல்வியாண்டில் பள்ளித் திறக்கப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் பள்ளிக் கல்வித்துறை கடந்த காலங்களில் முன்னெடுத்த மாநில மையத்திலிருந்து இயக்குநர் தலைமையில் மண்டல அளவிலான முன்னறிவிப்பில்லா திடீர் பள்ளி ஆய்வுகள் எதிர்வரும் ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இருப்பது வியப்பாகவும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற உயர்மட்டக் குழு ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்து மண்டல அளவில் ஏதேனும் ஒரு தலைமையிடத்தில் மேற்கொள்ளப்படும் மீளாய்வுக் கூட்டங்களும் குறைதீர் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் ஒரு கல்வியாண்டின் இறுதியில் மேற்கொள்வதே நல்ல எதிர்பார்க்கப்படும் விளைவை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தான் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருவரையொருவர் மீளவும் மெல்ல புரிந்து கொள்ளத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக, மாணவர்களை மீண்டும் பள்ளிச் சூழலுக்கு ஆயத்தப்படுத்துவதில் எண்ணற்ற சிரமங்கள் இருப்பதாகக் களத்தில் இருக்கும் ஆசிரியர் பெருமக்கள் பலரின் கூற்றாகக் காணப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்திருந்தாலும் அவை முழுவதுமாக பலனளிக்கவில்லை. கல்வித் தொலைக்காட்சி வழியாக நல்ல பயனுள்ள தரமான வகையில் வழங்கப்பட்ட வகுப்புகள் பல்வேறு காரணங்களால் அவர்களைக் கவராதது வருந்தத்தக்க நிகழ்வாகும். அஃது ஈடுசெய்ய முடியாத கற்றல் இழப்பு!
இத்தகைய நிலையில், மேலோட்டமாக மாணவர் நலத்திட்டங்கள் வழங்கல் குறித்தான பார்வை என்று செயல்முறையில் காரணம் சொல்லப்பட்டாலும் கற்றல் கற்பித்தல் சார்ந்த பதிவேடுகளும் நிகழ்வுகளும் பாடக் குறிப்புகளும் மாதிரி வகுப்புகளும் கற்றல் அடைவுகளும் கட்டாயம் முன்பு சோதித்தது போல் ஆசிரியர்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது வாய்மொழி ஆணையாக அறியப்படுகிறது. மேலும், பல்வேறு ஒன்றியங்களைச் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் இவற்றை சிரமேற்கொண்டு செய்து முடிக்கப்பட வேண்டிய இன்றியமையாத அறிவுறுத்தல்களாகச் சமூக ஊடகங்களில் நாளும் தம் கீழ் பணிபுரியும் இருபால் ஆசிரியர் பெருமக்களுக்குப் பரப்புரை செய்வதும் நடந்தேறி வருகிறது.
இதுபோன்ற உயர்மட்ட பள்ளி ஆய்வுகள் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டும் இன்பியல் நிகழ்வாக அமைய வேண்டுமேயன்றி பயமும் பதட்டமும் ஒருங்கே நிறைந்த துன்பியல் நிகழ்வாக ஆகிவிடக் கூடாது. எப்போதுமே ஆசிரியர் பணியிலிருந்து வழுவி, போதை பழக்கத்திற்கும் குடிக்கும் அடிமையாகி முறையாகப் பள்ளிக்கு வராத, பாடம் எடுக்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொள்வோருக்கு எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் ஒரு கவலையும் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு ஏதோவொரு விதத்தில் ஊதியத்தில் ஒரு இழப்புகளும் இல்லாமல் மொத்தமாக சுளையாகக் கிடைத்து விடுகிறது.
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு பள்ளி, மாணவர் மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு இயங்கி வரும் நல்லோரே அதிகம் மனத்தளவில் இதுபோன்ற திடீர் பயமுறுத்தல்களால் பாதிக்கப்படுகின்றனர்.
ஏனெனில், கற்றல் இழப்புகளாலும் ஊரடங்கு கால கவனச் சிதறல்களாலும் இயல்பான மறதியினாலும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் மிகவும் பின்னோக்கிச் சென்று விட்ட மாணவர்களை ஓரிரவில் தம் மாயவித்தைகளால் யாராலும் ஒரேயடியாக முன்னோக்கித் தள்ளிவிட இயலாது என்பது கசப்பான உண்மையாகும்.
இந்த நெருக்கடி நிலையை மாநில அளவிலான ஆய்வுக் குழுவினர் காலம் கருதி உணருதல் நல்லது. மேலும், தம் திடீர் பள்ளி ஆய்வுகளின் போது ஏதோ பெரிய குற்றவாளிகளைக் கையும் களவுமாக பிடித்து விடுவது போல் ஆக்கிக் கொள்வதை முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற மாநில அளவிலான மண்டல பள்ளி ஆய்வுகள் சிறப்பாக அமைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்த சற்று கால அவகாசம் இருப்பது நல்லது. அதற்கான உரிய உகந்த உன்னத காலமும் இதுவல்ல. தமிழக அரசு இதுகுறித்து நல்ல முடிவெடுக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாகும்.
– முனைவர் மணி கணேசன்

Leave a Reply