Home>>அரசியல்>>காந்தியைக் கண்டெடுப்போம்! – சுப. உதயகுமாரன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

காந்தியைக் கண்டெடுப்போம்! – சுப. உதயகுமாரன்

இந்திய/தமிழ்நாடு புரட்சியாளர்களுக்கு, முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு மூன்று, நான்கு தலைவர்களை மட்டும்தான் தெரியும்: காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், தியாகி பகத்சிங்.

அவர்களைப் பொறுத்தவரை, மகாத்மா காந்தி என்றொருவர் பிறக்கவுமில்லை, போராடவுமில்லை, எழுதவுமில்லை, இயங்கவுமில்லை. அவர் பழமைவாதி, பிற்போக்குவாதி, புரட்சி, வர்க்கப் போர், வெட்டு, குத்து, கொளுத்து என்றெல்லாம் முழங்கவில்லை.
எந்தவொரு தலைவரையும் எடுத்துக் கொள்வோம். அவரை கடைந்தெடுத்தப் பிற்போக்குவாதியாகவும், அற்புதமான முற்போக்குவாதியாகவும் சித்தரிக்க முடியும். பார்க்கும் பார்வையும், முன்னிறுத்தும் முறையும், கதையாடல் வகையுமே தீர்மானிக்கின்றன. இதற்கு இன்றைய தமிழ்நாட்டில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் தந்தை பெரியார் அவர்கள்.

காந்தி என்றொருவர் நம்மிடையே பிறந்ததையே மறந்தால், அவர் தேர்ந்த தலைவரல்ல என்று மறுத்தால், அவரது அறவழி எனும் பேராயுதத்தை மறைத்தால், இலங்கையும், கள்ளக்குறிச்சியுமே இனிவரும் காலங்களில் பொதுவாழ்வு முறைகளாகும்.

ஊழல் பெருச்சாளிகள் ஒழிகிறார்கள், லஞ்சப் பேர்வழிகள் அழிகிறார்கள், நயவஞ்சகர்கள் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள், பணவெறியர்களின், காமவெறியர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன, கொளுத்தப்படுகின்றன என்றெல்லாம் நாம் அனைவரும் குதூகலிப்போம். இந்த ‘உடனடி நியாயத்தீர்ப்பு’ நம்மைப் பரவசப்படுத்தும்.

ஆனால் இதே பாசிச வன்முறை நாளடைவில் நம் அனைவரையும் அழித்தொழிக்கும். இந்த வன்முறையை, அக்கிரமத்தை, சமூகத் தகர்ப்பையே வேண்டி விரும்பி அரசியல் செய்யும் சில பாசிச அராஜகவாதிகளின் கைகளுக்குள் நாம் சென்று சிக்கிக் கொள்வோம்.
புத்தன், இயேசு, நபிகளையே குறை சொல்கிறார்கள் என்றால், காந்தியிடம் குற்றம் கண்டுபிடிக்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த உண்மையான, நேர்மையான, எளிமையானத் தலைவன் நமக்கு கையளித்துச் சென்றிருக்கும் ‘அறவழிப் போராட்டம்’ எனும் பேராயுதமே நாம் அனைவரும் உய்வடைய உகந்த வழி, ஒரே வழி!

வள்ளுவருக்கு, வள்ளலாருக்கு, அண்ணலுக்கு அவர்களால் காவியடிக்க முடியுமென்றால், காந்திக்கு நம்மால் சிவப்படிக்க முடியும். சமூக அநீதிகளை, பொருளாதார அநியாயங்களை, அரசியல் அக்கிரமங்களைத் தட்டிக்கேட்போம். அறவழியில் போராடுவோம், அதனை காலத்திற்கேற்ப செழுமைப்படுத்துவோம், ஆக்கத்திறனோடு மாற்றியமைப்போம்.

காந்தியை மறுவாசிப்புச் செய்வோம். நம் பிள்ளைகளுக்கு ஒரு சிவப்பு காந்தியைச் சொல்லிக் கொடுப்போம். நாம் இதனைச் செய்யவில்லை என்றால், காந்தி காலியாவதோ, காவியாவதோ தவிர்க்கப்பட முடியாதது. நாம் ஓர் அற்புதமான புரட்சிப் பேராயுதத்தை இழப்பது தடுக்கப்பட முடியாதது.


சுப. உதயகுமாரன்,
நிறுவனர்,
பச்சைத் தமிழகம் கட்சி,
நாகர்கோவில்,
யூலை 19, 2022.

Leave a Reply