Home>>அரசியல்>>கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமைப் பல்கலைக்கழகம் (Green University) அமைப்போம்!
அரசியல்இந்தியாகல்விசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமைப் பல்கலைக்கழகம் (Green University) அமைப்போம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கைந்து இடங்கள் ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கல்குவாரிகளை, அரியவகை மணல் ஆலைகளை, இவை தொடர்பான புதிய திட்டங்களை குமரி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிக்கப் போகிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் அண்மையில் தெரிவித்திருக்கிறார்.

இந்த பின்னணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பசுமைப் பல்கலைக்கழகம் (Green University) நிறுவிட தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

குமரி மாவட்டத்தில் படித்தவர்கள் அதிகம் என்றாலும் இங்கே இதுவரை ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவில்லை.

காலநிலை மாற்றம் (சிதைப்பு!) உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்து, உலகெங்கும் பலரும் காலநிலை அறிவியல் (Climate Science) எனும் புதிய துறையை உருவாக்கி, வானிலை, புவி வெப்பம், கடல்மட்ட உயர்வு, மக்கள் இடப்பெயர்ச்சி, காலநிலைத் தொடர்புடைய பேரிடர்கள் என பல்வேறு விடயங்கள் பற்றி படித்துக் கொண்டிருக்கும்போது, ஆய்வுகள் செய்யும்போது, நம்முடைய நாட்டிலும் இது குறித்த ஒரு முன்முயற்சி எடுப்பது சாலப் பொருத்தமானதாக இருக்கும்.

முக்கடலும் சங்கமிக்கும், மேற்குத் தொடர்ச்சி மலை முடிவுறும், காடுகள் செழித்து வளரும், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டம் காலநிலை அறிவியல் (Climate Science) பற்றி படிக்க ஓர் அற்புதமான இடமாக இருக்கும்.

இந்தியாவுக்கு மட்டுமல்ல, தெற்காசியாவுக்கே இது ஒரு முன்மாதிரித் திட்டமாக அமையும். தமிழ்நாடு அரசும், முதல்வர் அவர்களும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


சுப. உதயகுமாரன்,
நிறுவனர் – பச்சைத் தமிழகம் கட்சி
நாகர்கோவில்,
ஆகத்து 15, 2022.

Leave a Reply