Home>>கல்வி>>மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உருவாக்கி கொள்ள வேண்டும்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
கல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உருவாக்கி கொள்ள வேண்டும்.

மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உருவாக்கி கொள்ள வேண்டும் – திருத்துறைப்பூண்டி கல்லூரி மாணவர்களிடையே திரு. க.மாரிமுத்து சட்டமன்ற உறுப்பினர் பேச்சு.


திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரியில் இக்கல்வியாண்டில் சேர்க்கையுற்ற முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் துவங்கும் விழா கல்லூரி கருத்தரங்க கூட்டத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ. சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையமங்கலம் பாலு ஆகியோர் கலந்துகொண்டு மாணாவர்களுக்கு நல்ல பல அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தோழர் க.மாரிமுத்து எம்எல்ஏ பேசும் போது “பள்ளி படிப்பினை முடித்து உயர் கல்வியினை பயில இருக்கும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எனது இதய பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்கள் தங்கள் குடும்பத்திலும் சமூக சூழலிலும் எதிர்கொள்ளும் சவால்களை மனவலிமையோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்ள தங்களை தாங்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு பொது அறிவை வளர்த்துகொண்டு போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு அரசு அதிகாரியாகவோ, மாவட்ட ஆட்சியராகவோ, சட்ட வல்லுனராகவோ வரவேண்டும். அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அதிகாரம் மிக்க பதவிகளுக்கு வரவேண்டும்.” என்று பேசினார்.

மேலும் நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலாளர் திரு.பிரகாஷ், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ப. ஓம்பிரகாஷ், வணிகவியல் துறை தலைவர் வெ. தனிகைராஜன் ஆகியோரும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக கணிதத் துறை தலைவர் முனைவர் ஆர்.நந்தினி வரவேற்புரையும் இறுதியாக தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் ந. பன்னீர்செல்வம் நன்றியுரையும் கூறினார்கள். விழாவில் அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தோழர். கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply