Home>>அரசியல்>>‘வணிகம்’ எனும் ஆயுதம் ஏந்திய வ.உ.சி.
வ.உ.சிதம்பரம் பிள்ளை

‘வணிகம்’ எனும் ஆயுதம் ஏந்திதான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினர். நம் மண்ணின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர்.  அவர்களை எதிர்த்துப் போராடிய நம்மவர்கள் கையில் அகிம்சை, புரட்சி என்ற இரு ஆயுதங்களே முதன்மையாக இருந்தது.  ஆனால், விதிவிலக்காக வேறொரு ஆயுதத்தை கையிலெடுத்தான் ஒரு வீரன்.

இன்றைய நவீனமய உலகம் `படைபலத்தைக்காட்டிலும் வணிகபலத்தில் நிறைந்த நாடுகளையே’ வல்லமை பொருந்திய நாடு என்கிறது. ஒருவருக்கொருவர் தங்களை எதிரியாக கருதிக்கொண்டிருக்கும் அமெரிக்கா சீனா போன்ற பெருநாடுகளும் `வணிகம்’ எனும் பேராயுதத்தை எடுத்துக்கொண்டுதான் களம் காண்கின்றன.

ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஒரு தமிழன் ‘வணிகம்’ தான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு வேட்டுவைக்கும் வெடிமருந்து என்பதைக் கண்டுணர்ந்தான். நம்மைத் தளைப்படுத்த எதிரி என்ன ஆயுதம் கொண்டுவந்தானோ, அதே ஆயுதத்தைக் கொண்டுதான் அவனை வீழ்த்தவும், நம்மை விடுதலைப்படுத்திக் கொள்ளவும் முடியும் என தீர்க்கமான எண்ணினார் அந்த மனிதன்.

எங்கு அடித்தால் வெள்ளைக்காரர்களுக்கு வலிக்குமோ அங்கே குறி பார்த்து அடித்தார். அதுவரை வெள்ளைக்காரர் கையில் இருந்த கப்பல் போக்குவரத்தை தன் கையில் கொண்டு வந்தார்.

வ.உ.சி.யின் “சுதேசி கப்பல்” வந்ததும் அது மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்று வளர்ந்தது. வ.உ.சி. ஆங்கியேலர்களை எதிர்த்து கப்பல் விட்ட தகவல் நாடு முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதனால் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது.

இதனால்தான் தன்னை எதிர்த்து காலம் முழுக்க போராடிய காந்தியை விட வ.உ.சி. மீது வெள்ளைக்காரர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. அதனால்தான் மற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் அனைவருக்கும் சிறையில் புத்தகத்தை கொடுத்து படிக்க வைத்தவர்கள் வ.உ.சியை செக்கிழுக்க வைத்து கொடுமைப்படுத்தினார்கள்.

வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம்! வ.உ.சி-க்கு இன்று பிறந்தநாள்.

தற்சார்பு பொருளாதாரத்தின் தந்தை. கப்பலோட்டிய தமிழன் அவர்களை இந்த தினத்தில் நினைவு கூர்வது நம் கடமை..


மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply