Home>>அரசியல்>>கூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு: மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி!
திரு. தி.வேல்முருகன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

கூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு: மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி!

கூட்டுறவுத்துறைக்கு தேசிய கொள்கை உருவாக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைத்து ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களை சேர்ந்த 47 உறுப்பினர்களை கொண்ட குழு புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை உருவாக்கும் என்றும் தமிழ்நாட்டில் இருந்து காந்திகிராம ஊரக நிறுவனத்தின் கூட்டுறவு துறை தலைவரான டாக்டர் பிச்னை உள்பட 3 பேர் குழுவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைச்சகம் என்ற பெயரில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, கடந்த 2021-இல் புதிய அமைச்சகத்தை உருவாக்கியிருந்தது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைச்சகம் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மாநில அரசுகளின் நிர்வாகத்திலும் கூட்டுறவு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுகிறது. இச்சூழலில், ஒன்றிய அரசு தனியாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியிருப்பது, மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடும் முயற்சி என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளும், சனநாயக முற்போக்கு சக்திகளும் குற்றம்சாட்டியிருந்தன.

இக்குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தாத ஒன்றிய அரசு, கூட்டுறவுத்துறைக்கு தேசிய கொள்கை உருவாக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைத்திருப்பது கண்டனத்துக்குரியது.

ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட நிலுவைத்தொகைகளை வழங்காமல் மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயை குறைத்து வரும் ஒன்றிய அரசு, அதிகாரம் அனைத்தும் தன்னிடமே குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான், கூட்டுறவு அமைச்சகமும், அதற்கான கொள்கை உருவாக்கமும்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், அனைத்து துறைகளிலும் கூட்டுறவின் பங்கு மகத்தானதாக உள்ளது. வேளாண்மை, கட்டுமானம், மருத்துவமனைகள், மருந்தகங் கள், உணவகங்கள், காய்கறி விற்பனை, பண்டக சாலைகள், பொது விநியோகம் என பன்முக பணிகளில் கூட்டுறவு அமைப்புகள் ஈடுபட்டு மக்களுக்கான இயக்கமாக மாறி உள்ளது.

முக்கியமாக, கூட்டுறவு வரலாற்றில் தமிழகத்திற்கு பெரும் பங்கு உண்டு. இந்தியாவிலேயே முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில்தான் விவசாயிகளுக்கு என முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904இல் ஏற்படுத்தப்பட்டது.

நாட்டின் விடுதலைக்கு பிறகு, கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக தான், வறுமை ஒழிப்பு, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, சிறுதொழில் விரிவாக்கம், சமூகநலத்திட்டங்கள் அமலாக்கம், ஐந்தாண்டு திட்டப் பணிகள், கைத்தறி, வீட்டுவசதி, பொது விநியோகம் என பன்முகத்தன்மையுடன் கூட்டுறவு அமைப்புகளின் பணி விரிவுபடுத்தப்பட்டது.

ஆனால், ஒன்றிய அரசின் கூட்டுறவு அமைச்சகமும், அதற்கான கொள்கை உருவாக்கமும், அனைவருக்குமான பொதுவிநியோக திட்டத்தை சிதைக்குமே தவிர, மக்களின் சேவைக்கு வழிவகுக்காது என உறுதியாக கூறலாம். அதுமட்டுமின்றி மாநில அரசுகளின் அதிகாரம் முற்றிலும் பறிக்கப்பட்டு, அனைத்து அதிகாரமும் ஒன்றிய அரசின் வசம் செல்லும்.

குறிப்பாக, ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, தங்களது கட்சியின் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக, கூட்டுறவு நிறுவனங்களை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான ஏற்பாடே, இந்த கூட்டுறவு அமைச்சகமும், அதன் கொள்கை உருவாக்கமும்.

எனவே, மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று உறுதியாக செயல்படும் தமிழ்நாடு அரசு, கூட்டுறவு அமைச்சகத்தையும், கொள்கை உருவாக்கத்தையும் ஏற்க மறுப்பதோடு, அந்த அமைச்சகத்தையே கலைக்க வேண்டும் என குரல் எழுப்ப வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில், கூட்டுறவு நிறுவனங்களில் அரங்கேறிய நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்வதோடு, கூட்டுறவு அமைப்பின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைத் தன்மையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply