மகனுக்கு சாதிச் சான்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முன்பு தீக்குளித்த வேல்முருகன் உயிரிழப்பு! இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!
சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த மலைக்குறவன் சமூகத்தைச் சார்ந்த வேல்முருகனுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்தி இழுத்தடிப்பு செய்துள்ள காரணத்தினால் இன்று (12.10.2022) சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து மாண்டுள்ளார். சாதிச்சான்று மறுக்கப்பட்டதால் தனது மகனுக்கு வேலை கிடைக்காததால் இந்த முடிவை மேற்கொண்டதாக தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் இதுபோன்று சில சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு பழங்குடி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தேவையற்ற கால தாமதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பலர் உயர் படிப்புகளுக்கு செல்ல முடியாமலும், வேலைவாய்ப்பு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். ஏற்கனவே இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிலர் தற்கொலையில் மாண்டுள்ளனர். பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் இப்பிரச்சனையை கண்டுகொள்ளாதப் போக்கு நீடித்து வருகிறது.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மேற்கண்ட பழங்குடி மக்களுக்கு சான்றிதழ் வழங்காத அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட மக்களுக்கு சாதிச்சான்றிதழ் உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மரணமடைந்த வேல்முருகன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
—
திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.