Home>>அரசியல்>>அரியலூர் – சோழர் பாசனத் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாசு நடைபயணம்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறுவேலைவாய்ப்புவேளாண்மை

அரியலூர் – சோழர் பாசனத் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாசு நடைபயணம்.

பாதை: கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில்
நாள்: 29, 30 அக்டோபர், 2022


ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தையும், அரியலூர் மாவட்டத்தையும் பிரிப்பது கொள்ளிடம் ஆறு தான். ஆனால், தஞ்சை மாவட்டம் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்… அரியலூர் மாவட்டமோ வறண்ட பூமி.

கொள்ளிடம் ஆற்று நீரைக் கொண்டு அரியலூர் போன்று 10 மாவட்டங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தித் தர முடியும். அதுமட்டுமல்ல… அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 97 ஏரிகள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 482 ஏரிகள், ஊரக உள்ளாட்சிகளில் 49 ஏரிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 4 ஏரிகள் என மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கொள்ளிடம், மருதையாறு என இரு ஆறுகள் பாய்கின்றன.

ஆனாலும், கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்களைப் போல, இவ்வளவு நீர் வளத்தை வைத்துக் கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் வேலை தேடி அலையும் நிலை தான் நிலவுகிறது. இத்தனைக்கும் காரணம் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன கட்டமைப்புகள் பாதுகாக்கப்படாமல் சீரழிக்கப்பட்டது தான். அப்போது சீரழிக்கப்பட்டதை இப்போது மீட்டெடுப்பதன் மூலம் தான் அரியலூர் மாவட்டத்தை மீண்டும் வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும்.

சோழர் கால பாசன கட்டமைப்புகள் எவை?

* சோழர் காலத்து சாதனைகளில் ஒன்று சோழகங்கம் எனப்படும் பொன்னேரி . கங்கை கொண்ட சோழபுரத்தை சோழ நாட்டின் தலைநகரமாக உருவாக்கிய இராஜேந்திர சோழன், கி.பி 11-ஆம் நூற்றாண்டில் அப்பகுதியின் பாசனத் தேவைக்காக அமைத்தார். சோழகங்கம் ஏரி 16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது. 0.114 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி 2,000 ஏக்கருக்கு பாசன ஆதாரமாகும். கொள்ளிடம், வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளில் இருந்தும் இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.
* சோழர் காலத்து முதல் பெருமை வீராணம் என்றழைக்கப்படும் வீர நாராயணன் ஏரி. பொன்னியின் செல்வன் நாவல் இந்த ஏரியிலிருந்து தான் தொடங்குகிறது. இராஜாதித்த சோழனால் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீராணம் ஏரி 1.44 டி.எம்.சி கொள்ளளவு கொண்டது. 15 கிமீ நீளம், 5 கி.மீ அகலம் கொண்ட இந்த ஏரி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
* செம்பியன் மாதேவி என்றழைக்கப்படும் கண்டராதித்தம் ஏரி 415 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கொள்ளிடத்தில் இருந்து நந்தியாறு, கூழையாறு ஆகியவற்றின் மூலம் இந்த ஏரிக்கு நீர் வருகிறது.
* வேட்டக்குடி பண்மாகேஸ்வரி ஏரி, காமராசவள்ளி நரதுங்க ஏரி, கீழப்பலூர் மலையவிச்சாதிர ஏரி, சுத்தமல்லி பவுத்திரமாணிக்கம் ஏரி, அயன்சுத்தமல்லி மனதான ஏரி, ஸ்ரீபுரந்தான் பராந்தக ஏரி, காரக்குறிச்சி கோவத்தட்ட ஏரி, தழுதாழைமேடு வளவன் ஏரி, காட்டகரம் பாண்டியன் ஏரி என சோழர்கள் உருவாக்கி வைத்த பாசன கட்டமைப்புகளின் பட்டியல் மிக மிக நீண்டதாகும்.


அரியலூர் – சோழர் பாசனத் திட்டம் என்றால் என்ன?

* சோழ மன்னர்களின் தொலைநோக்கு மிக நீண்டதாகும். கொள்ளிடம் ஆற்றின் நீரை அரியலூர் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் நிரப்ப கால்வாய் அமைத்திருந்தனர். பெரிய ஏரிகளின் உபரி நீர் சிறிய ஏரிகளுக்கு சென்று நிரம்பவும் இணைப்பு பாதைகளை அவர்கள் உருவாக்கியிருந்தனர்.
* பொன்னேரியும், வீராணம் ஏரியும் வெவ்வேறு காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும் பொன்னேரியின் உபரி நீர் வீராணம் ஏரிக்கு செல்ல இணைப்புப் பாதையை அமைத்திருந்தார் இராஜேந்திரசோழன்.
* ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை சரியாக பராமரிக்கப்பட்ட இந்த பாசனக் கட்டமைப்புகள் பின்னர் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால் அவை பயனற்று போய்விட்டன.
* பாசனக் கால்வாய்கள் தூர்ந்து போனது, ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டது, ஏரிகளின் நீர்த்தேக்கப் பகுதிகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சோழர் கால பாசனக் கட்டமைப்பு ஏட்டளவில் சுருங்கி விட்டது.
* கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வரத்துக் கால்வாய்களை மீட்டெடுத்து தூர் வாருதல், ஏரிகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஏரிகளுக்கு இடையிலான இணைப்பு கால்வாய்களை மீட்டெடுத்தல், கொள்ளிடத்தில் இருந்து புதிய வரத்துக் கால்வாய்களை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பாசனக் கட்டமைப்புகளுக்கு புத்துயிரூட்டுவது தான் அரியலூர் – சோழர் பாசனத் திட்டம் ஆகும்.


அரியலூர் – சோழர் கால பாசனத் திட்டம் சாத்தியமா?

* சாத்தியம் தான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1922-ஆம் ஆண்டு வாக்கில் சோழர் கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நீர் கொண்டு செல்லும் கால்வாய்களின் பாதைகள் அடையாளம் காணப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. ஆனால், அம்முயற்சி கைவிடப்பட்டது.
* ஆங்கிலேயர் ஆட்சிக்கால திட்டத்தில் இன்றைய சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்க முடியும்.
* பாசன கட்டமைப்புகளை மீட்டெடுக்க சில நூறு கோடிகள் செலவாகக் கூடும். மத்திய அரசின் நிதி உதவி, பன்னாட்டு வங்கிக் கடன் ஆகியவற்றின் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
என்னென்ன பயன்கள்?
* அரியலூர் மாவட்டத்தின் மொத்த வேளாண் பரப்பு 2.36 லட்சம் ஏக்கர் ஆகும். 90,710 ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே பாசன வசதி உள்ளது. அரியலூர் – சோழர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கூடுதலாக 90,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
* அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய 6 ஒன்றியங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையும்.
* அரியலூர் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
* கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் பகுதிகளிலும் நீர்வளம் மேம்படும்.
* கரைவெட்டியில் பறவைகள் சரணாலயமாக திகழும் 134 ஏக்கர் பரப்பளவிலான வேட்டக்குடி ஏரிக்கு நீர் வரத்து அதிகமானால் அங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், அது வேடந்தாங்கல் ஏரிக்கு இணையான சுற்றுலாத்தலமாக மாறும்.
* சுற்றுலா மேம்பட்டால் புதிய ரயில் திட்டங்கள் அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்.


வேலைவாய்ப்பு

* வேளாண்மை சிறக்கும் என்பதால் வேலைவாய்ப்பு பெருகும். அதனால் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊரில் வேலை செய்யும் சூழல் உருவாகும்.
* கரைவெட்டி பறவைகள் சரணாலயம், கங்கை கொண்ட சோழபுரம், சோழகங்கம் பொன்னேரி ஆகியவை சுற்றுலா தலங்களாக மாறும் என்பதால், அப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளும், உள்ளூர் பொருளாதாரமும் மேம்படும்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுச்சி நடைபயணம்.
* அரியலூர் மாவட்ட மக்கள் நலனுக்கான அரியலூர் – சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அரியலூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
* கீழப்பழுவூரில் வரும் 29-ஆம் தேதி சனிக்கிழமை காலை தொடங்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் நடைபயணம் 30.10.2022 ஞாயிறு மாலை காட்டுமன்னார் கோயிலில் நிறைவடையும்.
அரியலூர் மாவட்டத்தின் மீது பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு எப்போது தனிப்பற்று உண்டு. அதன்காரணமாகவே அரியலூர் – சோழர் கால பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் இந்த எழுச்சி நடைபயணத்தை மேற்கொள்கிறார். இதில் அரசியல் நிலைகளை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் எனவும் பாமக கட்சியின் சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்கள்.


செய்தி உதவி:
பாமக தலைமை நிலையம்.

Leave a Reply