Home>>இந்தியா>>தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகள் இன்றளவும் நிலுவையிலுள்ளதுதான் வேடிக்கை.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகள் இன்றளவும் நிலுவையிலுள்ளதுதான் வேடிக்கை.

திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை (NH81) விரிவாக்கத்திற்குப் பிறகு அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சிமென்ட் தொழிற்சாலைகளுக்காக இயங்கும் கனரக வாகனங்களின் வேகம் தினம்தினம் பல அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியொரு சம்பவத்தில் அண்மையில் எங்கள் கிராமத்தில் தம்பி ஒருவர் வாகனத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

எங்கள் கிராமத்தில் சாலையோரத்தின் இருபுறமும் அரசு தொடக்கப்பள்ளிமுதல் அரசு மேல்நிலைப்பள்ளிவரை இயங்கி வருகிறது, அதில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினம்தினம் சாலையை கடக்க வேண்டியுள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தானியங்கி பணப் பரிவர்த்தனை இயந்திரங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் என எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மேலும் வெளியூர்களுக்கு சென்றுவரும் உட்கிராமத்திலுள்ள மக்கள் எங்கள் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தையே அதிகம் பயன்படுத்துவர்.

எனவே மக்களின் பாதுகாப்புகருதி மக்கள் அதிகம் நடமாடும் எங்கள் கிராமத்தில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும்விதமாக கிராம மக்கள் சார்பாக எங்கள் ஜெமீன் தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் நெடுஞ்சாலையின் குறுக்கே வேகக் கட்டுப்பாட்டு தடுப்பரண் (Barricade/பேரிகேட்) அமைக்க வேண்டி இணையம் மூலமாக கடந்த 30/08/2022 அன்று பிரதமர் தனிப்பிரிவிற்கும் முதல்வர் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை அனுப்பியிருந்தேன்.

முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை 17/10/2022 இன்றுவரை நிலுவையில் இருக்கும் அதே வேளையில், பிரதமர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு அதுசம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக்கூறி எமது கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பி உத்தரவிட்டிருந்ததன் பேரில் இன்று 17/10/2022 அன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் திருமதி. ஷஹ்ரீனா பானு மற்றும் ஏனைய துணை போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து எங்கள் கிராமத்தில் தடுப்பரண் அமைத்த கையேடு அந்த படங்களை எனக்கு அனுப்பி பிரதமர் தனிப்பிரிவுக்கு அனுப்பியிருந்த உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. தாமாக முன்வந்து தடுப்பரண் அமைக்க விருப்பம் தெரிவித்த தங்களுக்கு நன்றி என்று திருமதி. ஷஹ்ரீனா பானு அவர்கள் செய்தி அனுப்பியுள்ளார்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய மத்திய அரசின் கீழ் இயங்கும் திருச்சி சர்வதேச விமான நிலையம் சம்மந்தமாக சில நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்த புகாருக்கு அதிகாரிகள் காட்டிய வேகமும், அதேபோல் தற்போது அதே மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை சம்மந்தமாக அனுப்பிய கோரிக்கைக்கு அதிகாரிகள் காட்டிய வேகவும் வியப்பாக உள்ளது. ஆனால் ஒரேயொரு மாநிலத்தை மட்டுமே ஆட்சி செய்யும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைகள் இன்றளவும் நிலுவையிலுள்ளதுதான் வேடிக்கை. அப்படியெனில் உங்கள் தொகுதியில் முதல்வர் எனும் திட்டமெல்லாம்…?

எதுவாகினும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் கிராமத்தில் தடுப்பரண் அமைத்துக்கொடுத்த சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்களுக்கு எங்கள் ஜெமீன் தத்தனூர் பொட்டக்கொல்லை கிராம மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் நலன் சார்ந்த மகத்தான பணிகள் நாளும் தொடர மனதார வாழ்த்துகிறோம்!


செய்தி உதவி:
திரு. தமிழ்மகன்.

Leave a Reply