Home>>அரசியல்>>தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. காவல் துறையினர் மீது நடவடிக்கை தேவை- அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை
அரசியல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. காவல் துறையினர் மீது நடவடிக்கை தேவை- அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை

2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! 17 போலீசார் மீது நடவடிக்கை தேவை.. அருணா ஜெகதீசன் அதிரடி அறிக்கை.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த விசாரணை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18ந் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது..அந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெறவும், போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்க கூறப்பட்டிருந்தது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும்..

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக எஞ்சியத் தொகையை வழங்க பரிந்துரை.
கலவரத்தின்போது நிகழ்ந்த ஜஸ்டின் செல்வமிதிஷின் இறப்பை இந்த தூப்பாக்கிச்சூட்டில் இறந்துபோன 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவரது குடும்பத்தாருக்கு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை.
பலத்த காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு மருத்துவ வசதிகளுக்கான நிவாரணம் வழங்க பரிந்துரை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டனர். குண்டு வருவது தெரியாமல் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். பூங்காவில் ஒளிந்து கொண்டும், வாகனங்களின் மேல் படுத்துக் கொண்டும் போலீசார் சுட்டனர். கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் இல்லை.
போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல். போலீசார் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்
காவல் துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என்பதோடு, போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார். பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் ஆட்சியர். ஆட்சியர் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.
வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார். ஒரு போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே போலீசாரை 4 இடங்களில் சுட வைத்துள்ளனர். தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், துணை எஸ்.பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரென்னெஸ், முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமை காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த கொலை பாதகத்திற்கு துணை புரிந்த அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இறந்து போனவர்களுக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும்.

Leave a Reply