கர்நாடாக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவை ‘குவெம்பு’ என்று அழைப்பர். கர்நாடகாவின் அரசவை கவிஞராக திகழ்ந்த குவெம்பு, கன்னட மொழியின் சிறந்த கவிஞராகவும், எழுத்தாளராகவும் கொண்டாடப்படுகிறார்.
கர்நாடக மாநிலத்தின் தேசிய கீதமான ‘ஜெய் பாரத ஜனனிய தனுஜாதே’ என தொடங்கும் பாடல் இவர் இயற்றியது. குவெம்பு-வின் மறைவுக்கு பிறகு அவரது நினைவு அறக்கட்டளை சார்பாக, 2013 ஆம் அண்டு முதல் குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது தமிழ் மொழிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்பட உள்ளது. விருதுடன் பரிசாக வெள்ளிப்பதக்கமும் ரூ. 5 லட்சமும் வழங்கப்பட உள்ளது. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் இமையம் என விருதுக்குழுவினர் பாராட்டியுள்ளனர். மறைந்த குவெம்பு பிறந்தநாளான டிசம்பர் 29ஆம் தேதி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. இவர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இமையம் யதார்த்தவாத எழுத்தின் முக்கிய படைப்பாளியாக கருதப்படுபவர். இவரது முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ 1994-ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Beasts Of Burden’ என்ற தலைப்பில் வெளியாகி பல்வேறு விருதுகளை பெற்றிருந்தது. இவர் எழுத்தில் இதுவரை 11 நாவல்கள், 2 சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்து தடம் பதித்தவர் எழுத்தாளர் இமையம். தனது நாவல்களை கதை மாந்தர்கள் போக்குடன் அணுகி, மிகக் காத்திரமாக பதிவு செய்தவர். இவர் எழுதிய பெத்தவன் நாவல் சாதி மறுப்பு திருமணம் தொடர்பான முக்கியமான உரையாடலைத் தொடங்கிவைத்தது. வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் குறித்து இவர் எழுதிய செல்லாத பணம், அழுத்தமான ரணங்களை பதிவு செய்திருந்தது. இப்படியாக பல முக்கிய படைப்புகளை தமிழுக்கு தந்துள்ளார்.
செல்லாத பணம் நாவலுக்காக 2020ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது இமையத்திற்கு வழங்கப்பட்டது. இலக்கியம் தொடர்பாக பல முக்கிய விருதுகளை பெற்றுள்ள இவர், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம் விருதுக்கும் தேர்வானார். இந்த நிலையில் குவேம்பு விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதைப் பெற்றவர்கள் விவரம்:
2013 – சச்சிதானந்தன் – மலையாளம்
2014 – நாமவர சிங் – ஹிந்தி
2015 – ஷியாம் மனோஹர் – மராத்தி
2016 – தேவனூரு மகாதேவா – கன்னடம்
2017 – ஹோமென் போர்கோஹைன் மற்றும் நீலமணி ஃபுகான் – அசாமி
2018 – ஜீலானி பானு மற்றும் ரத்தன் சிங் – உருது
2019 – குருபஜன் சிங் மற்றும் அஜீத் கௌர் – பஞ்சாபி
2020 – ராஜேந்திர் கிஷோர் பாண்டா – ஒடியா
2021 – சத்யவதி – தெலுங்கு
செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
மொன்றியல், கனடா