Home>>திரை விமர்சனம்>>அவதார் 2-திரையில் ஒரு தொழில்நுட்ப அதிசயம்.
திரை விமர்சனம்

அவதார் 2-திரையில் ஒரு தொழில்நுட்ப அதிசயம்.


ஜேம்ஸ் கேமரூன் என்னும் சினிமா அவதாரம்..

சர் வில்லியம் ஜோன்ஸ் உருவாக்கிய இந்து மதத்தின்படி படைப்புக்கென்று ஒரு கடவுளாக கற்பனையாக பிரம்மனைக் குறிப்பிடுவார்கள்.
ஆனால் நிஜத்தில் நிச்சயமாக ஜேம்ஸ் கேமரூனை தான் ஒரு “படைப்புக் கடவுள்” எனலாம்.
காரணம் அவர் இயக்கிய அவதார் படங்களை பார்த்தவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.
வருடத்திற்கு ஒரு படம் என்று எடுப்போர் மத்தியில் வாழ்க்கைக்கு ஒரு படம் என்று எடுப்பவர் ஜேம்ஸ் கேமரூன்.
அப்படி அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் வாழ்நாள் முழுக்க மக்கள் மனதை விட்டு அகலாமல் உள்ளது.
2009 ல வெளியான அவதார் படத்தின் தாக்கம் இன்றளவு மக்கள் மத்தியில் இருப்பது அதற்கு பேருதாரணம்.
ஒரு திரைப்படத்திற்கு நல்ல கதை, திரைக்கதை எழுதிவிடலாம். அதை பலர் செய்கிறார்கள். ஆனால் கற்பனைக்கும் எட்டாத ,நிகழ் காலத்தில் சாத்தியமே இல்லாத உலகத்தை படைப்பது என்பது முடியாத காரியம்.
ஜேம்ஸ் அதை மீண்டும் மீண்டும் செய்து காட்டுகிறார். ஒரு உலகம் என்றால் அதில் வாழும் மக்கள் ஜீவராசிகள் உயிரினங்கள் ,மரங்கள், நிலம் ,நீர், காற்று ,ஆகாயம் என அனைத்தையும் உருவாக்கி ஒவ்வொன்றுக்கும் ஒரு குணாதிசயங்களை உருவாக்குவது என்பதெல்லாம் நிச்சயமாக ஒரு படைப்புக் கடவுளால் தான் முடியும்.
அப்படி ஒரு அசாத்தியமான ஒரு படைப்பாளி தான் ஜேம்ஸ் கேமரூன்.
இவர் மற்ற ஹாலிவுட் இயக்குனர்களிடமிருந்து எந்த வகையில் இவர் வேறுபடுகிறார் என்றால்,
வேற்றுகிரகவாசிகளால் மனிதனுக்கு ஆபத்து, திமிங்கலத்தால் மனிதனுக்கு ஆபத்து ,சுறா மீனால் மனிதனுக்கு ஆபத்து ,என்னைக்கோ அழிந்து போன டைனோசரால் மனிதனுக்கு ஆபத்து, பறவைகளால் மனிதனுக்கு ஆபத்து, மிருகங்களால் மனிதனுக்கு ஆபத்து என்று சொல்லி அவர்களை அழித்தால் தான் மனிதன் நிம்மதியாக வாழ முடியும் என்ற கொடூரமான ஒரு கருத்தை முன் வைத்து அங்கங்க மசாலாவை அள்ளித் தூவி நன்றாக கல்லா கட்டுவார்கள் ஹாலிவுட்காரர்கள். இல்லேன்னா இல்லாத உலகத்தை காப்பாத்த சம்பந்தமே இல்லாம பல பேர் ஒண்ணு சேர்ந்து avengers ங்கற பேர்ல உலகத்தை காப்பாற்றுவார்கள்.
இப்படியே sterio type போல மற்ற ஹாலிவுட் இயக்குனர்கள் யோசிக்க, ஜேம்ஸ் கேமரூன் அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபடுவார். மனிதர்களால் தான் மற்ற கிரகவாசிகளுக்கு ஆபத்து, ஜீவராசிகளுக்கு ஆபத்து, பறவைகளுக்கு ஆபத்து ,விலங்குகளுக்கு ஆபத்து ,கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து என்ற அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்தி படமெடுப்பார்.

அவர் படங்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். டைட்டானிக் மாதிரி ஒரு உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான படத்தில் கூட காதலில் ஏழை பணக்கார வித்தியாசம், உயிர் போகும் வேளையிலும் கடைபிடிக்கப்படும் ஏற்றத்தாழ்வு என அற்புதமான ஒரு கருத்தை முன் வைத்திருப்பார்.
அதே போல தான் அவதார் படத்திலும். தான் உண்டு தன் உலகம் ஒன்று என்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பண்டோரா கிரகவாசி மக்களை, பூமியில் வாழும் மனிதன் தன் பேராசைக்காக அந்த பூர்வ குடி மக்களை அழித்து அந்த கிரகத்தை கைப்பற்ற துடிக்கிறான். அதிலிருந்து அந்த பண்டோரா பூர்வக்குடி மக்கள் ஒன்று சேர்ந்து போரிட்டு அவர்களை வென்று தன் இனத்தையும் தன் நிலத்தையும் எவ்வாறு காக்கிறார்கள் என்பதுதான் அவதார் 1 ன் மூலக்கதை.
அவர் படத்தின் கதை மட்டுமல்ல கதாபாத்திரங்களும் காட்சி அமைப்புகளும் நம் தமிழகர்கள் உணர்வை வெகுவாக பிரதிபலிக்கும். படம் பார்க்கும்போது ஒரு ஆங்கில படத்தை பார்ப்பது போன்றே நமக்குத் தோணாது. ஒரு தமிழ்ப் படத்தை பார்ப்பது போன்று இருக்கும். ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு ,பூர்வக்குடி மக்களின் நில அரசியல், மனிதனோடு ஒன்றிணைந்து வாழும் சக உயிரினங்கள் மீது உண்டாகும் பிணைப்பு என மிக மென்மையான உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார்.
அந்த அளவுக்கு வெறும் தொழில் நுட்பங்கள் மட்டுமின்றி,உணர்வுப் பூர்வமான விடயங்களை படத்தின் மையக்கருத்தாக வைத்திருப்பார் இதனால் தான் ஜேம்ஸ் கேமரூன் அவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குனராக இருக்கிறார்.

இந்த அவதார் 2 படம் முழுக்க முழுக்க கடல் வாழ்வியலை பற்றி எடுத்துரைக்கிறது. ஒரு கடலும் அதை நம்பி வாழும் மக்களும், அங்கே உள்ள உயிரினங்களும், அந்த உயிரினங்களுக்கும் அந்த மனிதர்களுக்கும் இடையேயான பிணைப்பு மற்றும் அங்குள்ள மனிதர்களின் கலாச்சாரம் இவற்றை பற்றி விளக்குவது தான் அவதார் 2. குறிப்பாக திமிங்கலங்கள் பற்றியும் திமிங்கலங்கள் ஏன் வேட்டையாடப்படுகின்றன என்பதை பற்றியும் ஒரு அருமையான கருத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்த உலகத்தில் யார் நன்றாக அமைதியாக வாழ்ந்தாலும் பூமியில் வாழும் மனிதருக்கு பொறுக்கவே பொறுக்காது. அந்த அமைதியான உலகத்தின் சென்று பூமி வாழ் மனிதர்கள் ஏற்படுத்தும் அழிவுகள், பின் அதில் இருந்து அந்த கிரக மக்கள் எப்படி மீண்டார்கள் என்பதை பற்றி சொல்லும் படம் தான் அவதார் 2.
கதை என்று பார்த்தால் எப்போதும் போல ஜேம்ஸ் கேமரூன் படத்தில் வரும் தமிழ்ப்படங்களின் கதை தான் . அவதார் 1 ல வியட்நாம் காலனி படத்தின் தாக்கம் இருக்கும். டைட்டானிக்ல காதல் மன்னன் தாக்கம் இருக்கும்.
கதை திரைக்கதை இரண்டுமே ரொம்ப சாதாரணமான ஒரு தமிழ்ப் பட பாணியில் உள்ளப்படம் தான்.

ஆனால் அதை காட்சிப்படுத்திய விதம் நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிசயமாக உள்ளது. மூன்று மணி நேரம் கடலுக்குள்ளே நாம் வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. இனிமேல் இப்படி ஒரு படம் தொழில்நுட்பத்தில் உச்சத்தை எட்டுமா என்பது சந்தேகம் தான்.
அந்த அளவுக்கு மூன்று மணி நேரமும் கண்களுக்கு முப்பரிமாணத்தில் விருந்தளித்துருக்கிறார்கள்.
இது ஒரு பரவச அனுபவம்.வெளிநாடுகளில் theme park களில் வெறும் 10 நிமிஷம் அல்லது 20 நிமிஷம் காட்டப்படும் இந்த 3d தொழில் நுட்பதிற்கே 500,1000 ன்னு வாங்குகிறார்கள்.வெறும் 160 ரூ க்கு 3 மணி நேரம் மூச்சு மூச்சு திணற திணற நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள்..❤️❤️

இப்படி ஒரு படத்தை எடுக்க அவர் இருபது வருடங்கள் கூட கால இடைவெளி எடுத்துக் கொள்ளலாம் அப்படி அந்த அளவுக்கு படத்துல அற்புதங்கள் இருக்கு.
பலருக்கு படத்தின் நீளம் பெரிய அயர்ச்சியை கொடுக்கலாம். முதல் 1.30 மணி நேரம் டெஸ்ட் கிரிக்கெட் போல மெதுவாக நகர்கிறது படம். ஆனாலும் படத்தின் முப்பரிமான காட்சிகள் அந்த கடல் வாழ் உலகத்தை பற்றிய காட்சிகள் நம்மை இருக்கையில் உட்கார வைத்து விடுகிறது.
ஆனால் கடைசி 1.30 மணி நேரம் t 20 ஆட்டம் போல விறுவிறுப்பாக உள்ளது. முப்பரிமாண காட்சிகள் மற்றும் திரைக்கதையின் வேகம் இரண்டுமே நம்மை ஆட்கொள்கிறது.
ஜேம்ஸ் கேமரூனை ஒரு படைப்புக் கடவுளாகவே நான் பார்க்கிறேன்.ஆகவே இந்த படத்தை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எல்லாம் எனக்கு worth இல்ல. என்னதான் அவர் படங்கள் தொழில்நுட்ப ரீதியில் உச்சத்தை தொட்டாலும், அவர் படத்தில் அவர் முன் வைக்கும் அரசியல் தான் என்னை மிகவும் கவர்ந்தது. உலகத்தை நேசிப்பவர், சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர், ஏழை பணக்காரன் வித்தியாசத்தை ஏற்றுக் கொள்ளாதவர், சக உயிரினங்கள் மீது அக்கறை கொள்பவர் என இவை அனைத்துமே அவர் படங்களில் கருத்தாக வைக்கப்படும். இதனால்தான் அவரை மிக உயர்வாக மதிக்கவேண்டிய அவசியம் உள்ளது.
விமர்சனங்களைத் தாண்டி ஒரு வாழ்நாள் அனுபவத்தை நாம் பெறுவதற்காகவே அவர் படம் எடுக்கிறார்.
இதுவும் வாழ்க்கையில் எப்போதாவது அரிதாக நமக்கு கிடைக்கும் ஒரு வாழ்நாள் அனுபவம் தான்.
படம் மெதுவாக நகர்கிறது, எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, ரொம்ப மொக்கையா இருக்கு, தூக்கம்தான் வருது என்ற விமர்சனங்களை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் உங்கள் குடும்பத்தோடு குறிப்பாக குழந்தைகளோடு சென்று கண்டு களியுங்கள். குழந்தைகள் கொண்டாடுவார்கள்.

Imax ல பார்க்கும் வாய்ப்பைப்பெற்றவர்கள் பாக்யசாலிகள்.

அவதார் 2- அரிதாக பூக்கும் ஒரு குறிஞ்சிப் பூ .ஒரு தொழில்நுட்ப அதிசயம்.

தலை வணங்குகிறேன் ஜேம்ஸ் கேமரூன் அவர்களுக்கு ..🙏🙏🙏🙏

மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply