திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் இருந்து சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்று தொழில் செய்து வருவதுமின்றி அங்கு பல சமூக பணிகளை தொடர்ந்து செய்து வரும் நண்பர்கள் “கப்பகலர் ஹாரிஸ்” மற்றும் “செய்குமீராலம் சிராஜுதீன்” இருவருக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் உரிய விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. அதன் கூடுதல் தகவல்களை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதல் பிரிவு தளபதி Col பைரோஸ் ரம்ஜான் இருந்து 31/03/2023 அன்று விருதைப் பெற்றுக் கொண்ட கேரி ஹாரிஸ். நெருக்கடி நேரத்தில் உதவிக்கு முதலில் விரைவோரை அங்கீகரிக்கும் விருதை மேலும் ஏழு இந்தியர்களான முகமது அன்சாரி, முகமது அலி, முகமது அசீம், திரு. முஹம்மது அஸ்ஃபாக், மற்றும் திரு. ஹாஜா நவ்சாத் அலி, அப்துல் காதர் நாசர் மற்றும் சிராஜூதீன், மேலுமொரு Royal Kings Consultancy பணியாளர், நூர் அலீசா ஜாய் உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
நெருக்கடிச் சூழலில் சிக்கிக்கொண்டோருக்கு உதவிக்கரம் நீட்டியவர்களை அங்கீகரிக்கும் விதமாக, சமூகத்தில் உதவிக்கு முதலில் விரைவோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களில் ஒருவர் 48 வயது கேரி ஹாரிஸ். கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி மூன்று விருதுகளைப் பெற்றுக்கொண்டார். ராயல் கிங்ஸ் ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநரான கேரி, மூன்று வெவ்வேறு விபத்துகளின் போது, பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கினார்.
கேரியுடன், சுல்தான் பள்ளிவாசலைச் சேர்ந்த மேலும் ஏழு தொண்டு ஊழியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சமூகத்தில் உதவிக்கு முதலில் விரைவோர்க்கான விருதுகளை வழங்கும் விழாவிற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதல் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
இவ்விழா, 31/03/2023 பிற்பகல் குவீன்ஸ்டவுனில் அமைந்துள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதல் பிரிவில் இடம்பெற்றது. அப்பிரிவின் தளபதி Col பைரோஸ் ரம்ஜான் கேரி உள்ளிட்ட தொண்டூழியர்களுக்கு விருதுகளை கொடுத்து பாராட்டினார்.
“முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதே சிறந்த பண்பு! மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்க இதுபோன்ற விருதுகள் உதவும்” என்றார் கேரி.
பொதுமக்களுக்கு உதவ முன்வருவதில் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக விளங்குவதாக இவர் பாராட்டப்பட்டார். மேலும் நெருக்கடியான சூழலில் அவர் மற்றவர்களுக்கு உதவிய சில நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நிகழ்வு 1: கடந்த 25 மார்ச் 2023 அன்று, இரவு திரு. முகமது அன்சாரி மற்றும் திரு. கேரி ஹாரிஸ் இருவரும் நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டு இருந்த பொழுது அருகில் உள்ள அரபு தெருவில் நடைபாதையில் சென்று கொண்டு இருந்த ஓர் பெண்மணி தடுமாறி விழுந்துவிட்டார் என்று சுல்தான் மசூதி தன்னார்வலர் ஒருவர், அன்சாரி மற்றும் கேரி இருவரிடமும் தெரிவித்தார்.
இருவரும் உடனடியாக அங்கு சென்ற பொழுது அந்த பெண்மணி வலியுடன் இருந்தார். உடனிருந்த அவரின் கணவர், மகளையும் நடைபாதையில் பாதுகாப்பாக அமர செய்து, கூடுதல் உதவி வேண்டி சக சுல்தான் மசூதி தன்னார்வலர்கள் திரு. முகமது அலி மற்றும் திரு. முகமது அசீம் போன்றவர்களை அழைத்து முதலுதவிக்கான பொருட்களுடன் வருமாறு தெரியப்படுத்தினார்.
முகமது அலி அவர்கள் முதலுதவி பெட்டியுடன் விரைந்து வந்து அந்த பெண்மணியின் காயத்தை பரிசோதித்து, அவருக்கு எலும்பு முறிவு இருக்கலாம் என்றும் அவரின் காலை அதிகம் அசைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி அவசர ஊர்திக்கும் தெரிவித்தார்கள்.
முகமது அசீம் அவர்களும் அங்கு வந்து கூட்டத்தை விலக்கி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உதவினார். கேரி கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தங்களுக்கு உதவ அவசர ஊர்தியை அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
அங்கிருந்த கட்டிட பாதுகாவலர் வந்து, நடந்த விபத்து பற்றி அன்சாரி மற்றும் முகமது அலியிடம் தெரிவித்தார். மேலும் விபத்துகள் நடக்காமல் இருக்க தவிர்க்க அப்பகுதியை சுற்றி வளைக்குமாறு இவரும் கட்டிட பாதுகாவலரிடம் கேட்டுக்கொண்டனர். கேரி அவர்கள் அங்கு வருகை தந்த மருத்துவ உதவியாளரிடம் அப்பெண்மணியின் காயங்கள் பற்றி விளக்கினார்.
அவசர ஊர்தி வந்தவுடன், அன்சாரி, முகமது அலி, அசீம் மற்றும் கேரி போன்றவர்கள் அங்கு வந்த மருத்துவ குழுவினருக்கும், பாதிக்கப்பட்ட பெண்மணி மற்றும் அவரின் மகளும் டான் டோக் செங் மருத்துவனையில் உள்ள அவசர பிரிவிற்கு செல்ல உதவினர். கேரி அவர்கள் பாதிப்படைந்தவரின் கணவர் திரு. மைதீன் அவர்கள் மிகவும் பதட்டத்துடன் இருந்ததால் அவர்கள் அமைதிப்படுத்திய பின்னர், தானே அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
நள்ளிரவு கேரி அவர்கள், மைதீன் அவர்களை அழைத்த பொழுது, அவரின் மனைவிக்கு எலும்பு முறிவு இருப்பதாக மருத்துவர் கூறினார் என்று தெரிவித்தார். மற்றும் தங்களை வந்து அழைத்து செல்லுமாறும் மைதீன் அவர்கள் கேரியிடம் கேட்டு கொண்டார்.
அவரும் மருத்துவமனைக்கு வந்து மைதீன், அவரின் மனைவி, மகள் மூவரையும் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்று அவர்களின் வீட்டில் இறக்கிவிட்டார்.
நிகழ்வு 2: 24 நவம்பர் 2022 அன்று, திரு. கேரி ஹரிஷ் காலை கிளைவ் தெரு நோக்கி நடந்துக் கொண்டு இருந்த பொழுது திடீரென அலறல் சத்தம் கேட்டார். அப்பொழுது ஒரு வாகனம் கிளைவ் சாலையில் இருந்து டிக்சன் சாலை நோக்கி வரும் பொழுது, சாலையை கடந்து சென்ற பெண் ஒருவர் மீது மோதியது.
கேரி அவர்கள் சத்தம் கேட்டு விபத்துக்குள்ளான பெண்மணி நோக்கி ஓடி சென்று அவரை சாலையின் ஓரத்தில் அமர செய்தார். உடனடியாக உரிய கட்டுப்பாடு அறைகளுக்கு தொடர்புக் கொண்டு சாலையில் நடந்த விபத்து பற்றியும், பாதிப்படைந்தவரின் காயம் பற்றியும் தெரிவித்தார். அதன் பின்னர் கேரி அவர்கள் கூடுதல் உதவியை பெற Royal Kings Consultancy நிர்வாக இயக்குனர் திரு. சிராஜுதீன் அவர்களை அழைத்து அருகில் இருந்தால் வர கோரினார். அவரும் தான் வருவதாகவும், சக பணிபுரிபவர்களையும் அழைத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கேரி அவர்கள் பாதுகாப்பு பயிற்சியாளர் திரு. அப்துல் காதர் நாசர் அவர்களையும் (அருகில் இருந்த பயிற்சி பள்ளி உரிமையாளர்) தொடர்புக் கொண்டு உதவிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கு இடையில் திரு. சிராஜ், சக பணியாளர்களுடன் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து திரு. முஹம்மது அஸ்ஃபாக், திரு. ஹாஜா நவ்சாத் அலிபோன்றவர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த உதவினர். திரு. நாசர் அவர்களும் அங்கு வந்து அடைந்தார். செவிலியர் நூர் அலீசா ஜாய் அவர்கள் பாதிப்படைந்த பெண்மணியுடன் பேச முற்பட்டார், ஆனால் பாதிப்படைந்த பெண்மணி (மியான்மார் நாட்டு வீட்டு பணியாளர்) ஆங்கிலத்தில் பேச சிரமப்பட்டார்.
பாதிப்படைந்த பெண் தமிழில் உரையாட இயன்றதால், சிராஜ் மற்றும் நாசர் இருவரும் அவர் கூறுவதை மொழிபெயர்த்து செவிலியர் நூர் அலீசா ஜாய் அவர்களிடம் தெரிவித்தனர். இதற்கிடையில் அவசர ஊர்தியும் வர, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நிகழ்வு 3: 19 பிப்ரவரி 2023 அன்று, சுமார் காலை 10:46 மணி அளவில் திரு. கேரி ஹாரிஸ் அவர்கள் உட்லண்ட்ஸ் நோக்கி வழி 2ல் சென்று கொண்டு இருந்த பொழுது சாலையில் நடுவில் இருந்த பிரிப்பானில் திடீரென ஓர் இருசக்கர வாகனம் மோதி வழி 2 நோக்கி சுழன்று வந்ததை பார்த்தார். ஆபத்தை உணர்ந்து, அடுத்து வரும் பிற வாகன ஓட்டிகளை எச்சரித்து மேலும் விபத்து நடைபெறாமல் இருக்க கேரி அவர்கள் தன்னுடைய வாகனத்தில் அபாய விளக்கை எரிய செய்து, தன் வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.
போக்குவரத்து நெரிசல் அந்த நேரத்தில் அதிகம் இருந்ததால், அவற்றை சமாளிக்க பின்னால் தூரத்தில் வாகனம் ஓட்டி கொண்டு வந்த தன்னுடைய சக பணியாளர்களின் உதவியை நாடினார் கேரி. அங்கு வந்த Royal Kings Consultancy நிர்வாக இயக்குனர் திரு. சிராஜுதீன், திரு. முஹம்மது அஸ்ஃபாக், மற்றும் திரு. ஹாஜா நவ்சாத் அலி மூவரும் தங்கள் வாகனங்களை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டு, அவர்கள் சாலையின் நடுவில் புல்தரையில் கிடந்த பாதிக்கப்பட்டவருக்கு கேரி உதவ அனைத்து வாகனங்களை தற்காலிமாக நிறுத்தினர்.
பாதிக்கப்பட்டவர் எவ்வித அசைவும் இல்லாமல் கடுமையான காயங்களுடன் இருந்ததை பார்த்த கேரி, உடனடியாக உரிய கட்டுப்பாட்டு அறைகளுக்கு தொடர்புக் கொண்டு விபத்து பற்றி தெரிவித்தார்.
மேலும் செவிலியர் நூர் அலீசா ஜாய் அவர்களுக்கு தெரிவித்தார். அவரும் கேரியிடம் காயமடைந்தவருக்கு தொடர்ந்து தட்டிக் கொடுக்கும்படியும், உதவியை வருவதை உறுதி செய்து நினைவுடன் வைத்து இருக்கும் படியும், மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்கவும் அறிவுறுத்தினார். கேரி கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் அழைத்து அச்சூழலையும் விளக்கினார். உடனடியாக மருத்துவ குழுவிடம் இருந்து கேரிக்கு அழைப்பு வந்தது, அவரும் தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதாக செவிலியர் நூர் அலீசா ஜாய் அவர்களிடம் கூறினார்.
அதே நேரம் அவசர ஊர்தியும் அங்கு வந்து சேர்ந்தது. தன்னார்வலர்களும் காயமடைந்த வாகன ஓட்டியின் காலணி, தலைக்கவசம், அவர் வைத்திருந்த பிற பொருட்களை அவசர ஊர்தியின் உள்ளே வைக்கவும், மருத்துவ குழுவிற்கு காயமடைந்தவரை அவசர ஊர்திக்குள் கொண்டு செல்ல உதவினர்.
இதில் கவனிக்க தக்க ஒன்று திரு. கேரி மற்றும் அவரின் சக பணியாளர்கள் இந்த 3 நிகழ்வுகளின் பொழுது 999, 995 கட்டுப்பாட்டு அறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவசர ஊர்தி, மருத்துவக் குழுவிற்கு தெரிவித்தது மட்டுமின்றி நிலப்போக்குவரத்து ஆணையம், விரைவுச்சாலை கண்காணிப்பு ஆலோசனை அமைப்பு, காவல்நிலையம், தேசிய பூங்கா வாரியத்திற்கும் தெரிவித்தது அனைத்து கோணங்களிலும் நிலைமையை கட்டுப்படுத்த உதவியது. பாதிப்பட்டவர்கள் பதட்டமாக இருந்தாலும், அதற்கு உதவ செல்பவர்கள் பதட்டமின்றி அந்த சூழலை கையாள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கரம் கொடுப்போம்! கரை சேருவோம்!!
—
செய்தி சேகரிப்பு:
திரு. மாணிக்கம்,
மன்னார்குடி.