முதலுதவி என்றாலே, சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என்பதே பலருக்கும் நினைவிற்கு வரும். அல்லது பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது நினைவிற்கு வரலாம். இன்னும் தெளிவாக கூறினால் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ முதலுதவி நினைவிற்கு வரலாம்.
ஆனால் அதே அளவிற்கு மனதளவில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி வழங்கப்படுகிறதா என்று கேட்டால் நம்மில் பலரிடம் இருக்கும் பதில் இல்லையென்றே வரும். காரணம் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள பலரை கண்டறிவதே கடினம்.
அதைப்பற்றி தான் இன்றைய (15/04/2023) வகுப்பில் தன்னார்வலர்கள் பலருக்கும் பயிற்சி அளித்தார்கள் SG Assit அமைப்பு. இந்த பயிற்சி ஈசுன் பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
இதில் பல உதாரணங்களுடன் பயிற்சியாளர்கள், தன்னார்வலர்களுக்கு கற்பித்தார்கள். குறிப்பாக உளவியல் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கண்டறிவது? அவர்களின் தொடர் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது போன்றவற்றை முன்வைத்து அதை கையாளும் முறைகளையும் பகிர்ந்தார்கள்.
இதன்மூலம் அங்கு வந்திருந்த பலரும் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும், அதே நேரம் கொவிட் போன்ற பேரிடர் காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், இழப்புகள் பற்றியும் வகுப்பில் பகிர்ந்து கொண்டார்கள்.
அதில் ஒருவர் கோவிட் காலத்தில் தனது பணபரிமாற்ற வியாபாரத்தை தொடர் இயலாமல் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் இருந்து எப்படி மீள்வது என்ற தெரியாமல் இருந்ததாகவும் கூறினார். அதன் பின்னர் சிங்கப்பூர் அரசு வழங்கிய பல சலுகைகள் மீண்டு வர உதவியாகவும், அதே நேரம் மீண்டும் சுற்றுலா துறை இயல்பிற்கு வந்தப்பின்னர் முன்புப்போல் வியாபாரம் நடப்பதாகவும் கூறினார். இடைப்பட்ட காலத்தில் எதிர்கொண்ட உளவியல் பாதிப்பை சக தன்னார்வலர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
வகுப்பில் கலந்துகொண்ட மற்றொரு பெண்மணி அவரது உறவினர்கள் (தாய், தந்தை) ஊருக்கு சென்றபொழுது விபத்தில் இறந்துவிட்டதாகவும், அதே நேரம் அவர்களின் 7 வயது மகன் தற்பொழுது அவர்களை இழந்து வாடுவதை பார்க்கும் பொழுது தனக்கும் உளவியல் சார்ந்த சிக்கல்கள் உள்ளதாகவும் கூறினார். அதே நேரம் அதில் இருந்து மீண்டு வருவதற்கான நம்பிக்கை அவர் பேச்சில் தெரிந்தது.
உளவியல் முதலுதவி என்பது ஒருவரை முழுவதும் அதில் இருந்து மீட்டு கொண்டு வருவதில்லை, மேலும் அவர்கள் கூறும் கருத்துகளை உள்வாங்கி உரிய நபர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றார் பயிற்சியாளர். மறந்தும் தவறான வாக்குறுதிகளை உளவியல் பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு 100% வழங்கக்கூடாது என்றும் பயிற்சியாளர் தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் வகுப்பில் பலரும் கலந்துகொண்டாலும் Royal Kings Consultancy Group நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் திரு. சிராஜுதீன், இயக்குனர் திரு. கேரி ஹாரிஸ் மற்றும் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை சிறப்புற செய்தார்கள். காரணம் ஒரே நிறுவனத்தில் இருந்து பலர் கலந்துகொண்டது பலரின் கவனத்தை பெற்றது எனலாம்.
உளவியல் முதலுதவி என்பது வேலைவாய்ப்பை இழந்து நிற்பவர்களுக்கும், உறவுகளை இழந்து நிற்பவர்களுக்கும், மருத்துவ உதவியை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கும், பணத்தை இழந்து நிற்பவர்களுக்கும் என பலதரப்பில் தேவைப்படுகிறது. அதை வழங்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து சிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில் SG Assist போன்ற அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகிறது என்றால் அது மிகை அல்ல.
—
செய்தி உதவி:
கி. மாணிக்கம்,
சிங்கப்பூர்.