Home>>அரசியல்>>பொது இடங்கள், நிகழ்ச்சிகளில் மது விற்பனைக்கு அனுமதி!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

பொது இடங்கள், நிகழ்ச்சிகளில் மது விற்பனைக்கு அனுமதி!

பொது இடங்கள், நிகழ்ச்சிகளில் மது விற்பனைக்கு அனுமதி! அரசாணையை கைவிட மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழ்நாடு மதுபான உரிம விதிகளை திருத்தி, பல்வேறு பொது இடங்களில் தங்குதடையின்றி மதுபானம் விநியோகிப்பதற்கு வழிவகை செய்யும் ஓர் அறிவிக்கை மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், குறிப்பாக, மாநாட்டு அரங்கங்கள், திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு அரங்கங்கள், மேலும் வணிகம் சாரா வளாகங்களில் வீடு சம்பந்தப்பட்ட விழாக்கள், நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் என அனைத்து நிகழ்வுகளிலும் உரிமம் பெற்றுக் கொண்டு மதுபானத்தை விநியோகிக்கலாம் என இந்த அறிவிக்கை அனுமதி வழங்குகிறது.

ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை மூடப் போவதாக அறிவித்துக் கொண்டே, மறுபக்கம் மதுபான விற்பனையையும் விநியோகத்தையும் அதிகரிப்பது முற்றிலும் பொருத்தமற்றது. தமிழக மக்களின், குறிப்பாக பெண்களின், உணர்வுகள், பாதிப்புகள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே போதை பழக்கம் பள்ளி வளாகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் அதிகரித்து வருவதை கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்களும் அதிகரித்து கொண்டுள்ளன.

இத்தகைய சூழலில் அனைத்துவித நிகழ்ச்சிகளிலும் மதுபானம் விநியோகிக்கப்படும் என்றால் அது பெரும் வன்முறைக்கு இட்டுச் செல்லும். சமூக எதார்த்தத்தை கணக்கில் எடுக்காமல், வருமானம் ஈட்டும் ஆதாரமாக மட்டுமே இதனை பார்ப்பது பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.
(24.4.2023)

Leave a Reply