Home>>திரை விமர்சனம்>>Silenced (கொரியன்)விமர்சனம்

Silenced ( கொரியன் )

கலை என்பதன் உண்மை அர்த்தம் என்ன??

வெறும் பொழுதுபோக்கா, சமூகத்தின் பிரதிபலிப்பா,உண்மைக்கு நெருக்கமா என அனைத்தையும் தாண்டி ஒரு மாபெரும் சமூகப்புரட்சியை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்பதை தென் கொரியா மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ளது இந்த silenced படம்.

2000 ம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் காது கேட்க முடியாத வாய் பேச முடியாத சிறுவர்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை அடிப்படையாக வைத்து 2009 ல் ,

காங் ஜி யங் என்பவர் the crucible என்ற ஒரு நாவலை எழுதினார்.

அதாவது மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என்பது கொடும்பாவம். ஆனால் அந்த பாவத்தை செய்தவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையே கிடைத்தது. அந்த ஆதங்கத்தில் அவர் படைத்த நாவல் தான் “the crucible”.

பின் 2011 ம் ஆண்டு இயக்குனர் கவாங் டோங்யுக் அந்த நாவலை தழுவி

“தொகானி “என்ற பெயரில் படமாக எடுத்தார்.அதுதான் silenced என்ற பெயரில் உலகம் முழுதும் வெளியானது.

தென்கொரியாவில் காது கேட்க முடியாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் சிறுவர்கள் பள்ளிக்கு ஓவிய ஆசிரியர் ஒருவர் வேலைக்கு போகிறார். அங்கே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் அங்குள்ள சிறுவர்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கண்டறிகிறார். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் கிடைக்க இறுதிவரை சட்ட ரீதியாக போராடுகிறார்.
இறுதியில் சமூகத்தில் வலியவர்கள் செல்வாக்காலும், பண பலத்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்ற உண்மை சம்பவத்தோடு இந்த படம் முடிகிறது.

இது போன்ற கதைகள் பல படங்கள் நான் பார்த்திருந்தாலும் இந்த படம் கொடுத்த அனுபவம் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.

இந்த அளவுக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் எந்த படத்திலும் பார்த்ததில்லை எனலாம். இளகிய மனம் கொண்டவர்கள், இதய பலகீனமானவர்கள் இந்த படத்தை தவிர்ப்பதே நல்லது. உங்கள் பல இரவுகளை தூங்கவிடாமல் பாடாய்படுத்தக்கூடிய படம். இந்த படம் கொடுக்கக்கூடிய பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வருவதே மிகவும் கடினம்.

அந்த மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு நடக்கும் அந்த வன்கொடுமைகளை காட்சிப்படுத்திருப்பது நம்மால் ஜீரணிக்க முடியாதபடி இருக்கும்.

முதல் ஒரு மணி நேரம் அதை சுற்றியே கதை நிகழ்கிறது. நம்மால் கண்ணீரை அடக்காமல் பார்க்கவே முடியாது. தாங்க முடியாத ஒரு மன வேதனையை நமக்குள் கடத்துகிறது.

படத்தின் இரண்டாம் பகுதியில் நடக்கும் நீதிமன்ற காட்சிகள் அற்புதம் .. அந்த பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நீதிபதி முன் சைகை மூலம் எடுத்துரைக்கும் அந்த காட்சிகள் ..யப்பா யப்பா.. நம்மால் நம் துக்கத்தை கட்டுப்படுத்தவே முடியாது.

அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் அந்த பள்ளி நிர்வாகி இருவரும் இரட்டையர்கள். எனவே அந்த இருவரில் யார் பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற கேள்வியை முன்வைக்கும் பொழுது அதை கண்டறியும் அந்த சிறுமியின் நுண்ணறிவு நம்மை அறியாமல் கைதட்ட வைக்கும். தமிழில் மாஸ் காட்சிகள் என்று சொல்லப்படும் ஆயிரம் அபத்தமான காட்சிகளை விட மிக உயர்வானது அந்த காட்சி

ஆண் பெண் பேதம் இன்றி இருவருமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றன அந்த பள்ளியில். அதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு இருந்த வேலையில், அது தவறும் பொழுது கதறி அழும் அந்த சிறுவனின் நடிப்பு ,

சொல்லவே வார்த்தை இல்லை.

அந்த பாதிக்கப்பட்ட சிறுவர் , சிறுமிகளின் நடிப்பு அசாத்தியமானது. நம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அபாரமாக உள்ளது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது நாம் காண வேண்டிய ஒரு அற்புதமான காவியம் இந்த படம்.

இந்த படம் வந்த பிறகு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .வரவேற்பு என்றால் பெரும் வசூலைத்தாண்டி, மக்கள் மத்தியில் ஒரு பெரும் புரட்சியே ஏற்பட்டது என்று சொல்லலாம்.
எந்த அளவுக்கு என்றால், 2000 த்தில் முடிந்து போன அந்த வழக்கை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டிய நெருக்கடி நிலை தென்கொரிய அரசாங்கத்துக்கு ஏற்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது.
அதனால் மீண்டும் அந்த வழக்கு தோண்டி எடுக்கப்பட்டு நன்றாக விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அந்த பள்ளியும் இழுத்து மூடப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் ,
சிறுவர்களுக்கு எதிராகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராகவும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கான தண்டனைச் சட்டம் ஏழு வருட கடும் காவலில் இருந்து ஆயுட்கால தண்டனையாக மாற்றப்பட்டது.
அந்த புதிய சட்டத்தின் பெயர் என்னவென்றால்,

“தொகானி”.

ஒரு படத்தின் தலைப்பு ஒரு நாட்டின் சட்டத்திற்கான பேராக அமைவது ரொம்ப பெரிய விடயம்.

அப்படிப்பட்ட ஒரு சமூக புரட்சி ஏற்படுத்திய ஒரு அற்புதமான கலைப்படைப்பை அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது அவசியம் காண வேண்டும்..
கண்டிப்பாக படம் பார்த்த யாருமே பேச முடியாத silenced நிலைக்கு தான் செல்வார்கள்..

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply