“அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 5லட்சம் லிட்டர் பால் கெட்டுப் போனதாக தகவல். விநியோகம் செய்யப்படாத ஆவின் பால் பவுடர்” குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
– தமிழ்நாடு அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.
மிக்ஜாம் புயல் தாக்கத்திற்குப் பிறகு சென்னை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பால் விநியோகம் முற்றிலுமாக முடங்கியதற்கு சென்னையில் மட்டும் சுமார் 40% பால் விநியோகத்தை கொண்டுள்ள ஆவின் பாதிக்கப்பட்டது தான் மிக முக்கியமான காரணமாகும்.
மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து நகர்ந்து, அண்டை மாநிலமான ஆந்திராவில் கரையை கடந்த போது அங்கு ஏற்பட்ட பாதிப்பினால் தனியார் பால் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றாலும் அவை தற்போது அதில் இருந்து முழுமையாக மீண்டு வழக்கமான விநியோகத்தை விட கூடுதலாகவே பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆவின் தரப்பிலோ சென்னையில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டுகளை கொண்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலைக்கு காரணம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே கணித்து, ஆவின் அதிகாரிகளும், பால்வளத்துறை அமைச்சரும் மற்றும் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், எந்த ஒரு தொலைநோக்கு சிந்தனையும் இல்லாமல் போனதும், ஆவினை சுரண்டி தங்களின் கஜானாவை நிரப்பி கொள்ளும் எண்ணம் மட்டுமே தற்போதைய இக்கட்டான சூழலுக்கு மூலக்காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இந்த நிலையில் வியாழக்கிழமை (07.12.2023) மாலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது X வலைதளப் பக்கத்தில் “சென்னையில் வழக்கமாக வினியோகம் செய்யும் பால் வினியோகம் செய்யப்பட்டு கூடுதலாக நேற்று (06.12.2023) 12.5 டன் பால் பவுடரும் இன்று (07.12.2023) 11 டன் பால் பவுடரும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வினியோகம் செய்ய போதுமான அளவு பால் பவுடர் கையிருப்பு உள்ளது. மேலும் பால் பவுடர் தேவைபடுபவர்கள் ஆவின் விற்பனை நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என மிகப்பெரிய பொய்யை உண்மை போல பதிவு செய்துள்ளதோடு,” சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் முற்றிலுமாக கிடைக்கவில்லை என்கிற பொதுமக்களின் மனக்குமுறல்களை ஆளுங்கட்சி ஆதரவு ஊடகத்தை தவிர அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வரும் நிலையில், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து விட்டு முழுமையாக (15லட்சம் லிட்டர்) ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறி வருவது என்பது ஒரு தட்டு சோற்றில் பூசணிக்காயை விட மிகப்பெரிய அளவிலான டைனோசரையும், அனகோண்டாவையும் மறைக்க முயற்சி செய்து வருவதாகும்.
ஏனெனில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் விநியோகம் புதன்கிழமையிலிருந்தே சீரடைந்து விட்ட நிலையில் 40%பங்களிப்பு கொண்ட ஆவின் பால் விநியோகம் மட்டுமே முழுமையாக சீரடையாததால் தான் தொடர் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்பதும், இதனை பயன்படுத்தி கொண்டு ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை நிறுத்தி விட்டு, டிலைட் பால் பாக்கெட் விநியோகத்தை திணித்து வருகிறது என்பதையும் அத்துறையில் மக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் லட்சக்கணக்கான பால் முகவர்களின் பிரதிநிதிகளான எங்களைத் தவிர வேறு யாரால் உண்மையை ஒளிவு மறைவின்றி, உள்ளதை உள்ளவாறு உடைத்துப் பேச முடியும்..?
மேலும் ஆவினில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆவினுக்கான பால் கொள்முதல் கடுமையாக சரிவடைந்ததால் பால் பவுடர் உற்பத்தி என்பது முற்றிலுமாக இல்லாத சூழலில் அண்டை மாநிலங்களில் இருந்து தான் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி்க்காக மூட்டை, மூட்டையாக மாதந்தோறும் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் பால் பவுடர் வாங்கும் நிலை நீடித்து வருகிறது.
தற்போதைய சூழலில் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்வதற்கே மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளில் போதிய பணியாளர்கள் இல்லாத போது 25கிலோ மூட்டையாக வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் பவுடரை எந்த பால் பண்ணையில் வைத்து சிறிய அளவிலான பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்யப்பட்டது என்பது யாருக்குமே தெரியாத பரம ரகசியமாகும்.
அதுமட்டுமின்றி ஆவின் பால் பாக்கெட்டுகள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்திட பால் முகவர்களுக்கு தட்டுப்பாடின்றி சரிவர வழங்கிடாத நிலையில் பால் பவுடர் விநியோகம் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள எந்த பால் முகவர்களுக்கும், ஆவின் பாலகங்களுக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பது 100%உண்மையான கள யதார்த்தமாகும்.
அப்படியானால் உண்மையான களநிலவரங்களை மறைத்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் இரண்டு நாட்களில் விநியோகம் செய்ததாக கூறிய (12+11.5டன்) 23.5டன் பால் பவுடர் மொத்தமும் எத்தனை கிராம் பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்யப்பட்டு..?, எந்தெந்த பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு, ஆவின் பாலகங்களுக்கு எந்தெந்த வழித்தட வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது..? அல்லது எந்தெந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது..? என்பதற்கான ஆதாரங்களை வெள்ளை அறிக்கையாக பொதுவெளியில் வெளியிட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தயாரா..? என்பதை தமிழக மக்கள் சார்பில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேள்வியாக முன் வைக்கிறது.
மேலும் மிக்ஜாம் புயல் தாக்குதல் மற்றும் கனமழை பெய்து அம்பத்தூர் பால் பண்ணை முற்றிலுமாக முடங்கிய முதல் நாளில் பால் பண்ணையில் இருந்த சுமார் 5லட்சம் லிட்டர் பால் கெட்டுப் போனதாகவும், அது ரகசியமாக அகற்றப்பட்டதாகவும், அதனால் ஆவினுக்கு சுமார் 2கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆவின் ஊழியர்கள் மத்தியில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கும் சூழலில் அதனை மறைப்பதற்கு தான் கடந்த இரண்டு நாட்களில் 23.5டன் பால் பவுடர் விநியோகம் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறுகிறாரா…? என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.
அத்துடன் தற்போதைய ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கும், கள்ளச் சந்தையில் ஒரு லிட்டர் ஆவின் பால் 150.00ரூபாய் முதல் 200.00ரூபாய் வரை விற்பனை செய்ததற்கும் காரணம் ஆவின் பால் விநியோகத்தை வழக்கமான நேரத்தில் மேற்கொள்ளாமல், ஆவின் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு பால் பண்ணைகளில் இருந்து தினசரி பால் பாக்கெட்டுகள் கொள்முதல் அளவினை விட அதிகமான அளவு பாக்கெட்டுகளையும், குறைந்த விலை பாலுக்குப் பதிலாக அதிக விலையுள்ள பால் பாக்கெட்டுகளை மாற்றியும் விநியோக வாகனங்களில் ஏற்றி சென்று ஆவினை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட மொத்த விநியோகஸ்தர்கள் சிலருக்கு மட்டும் மிக்ஜாம் புயல் இயற்கை பேரிடர் காலமான தற்போது அவர்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் லாரி, லாரியாக ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் வழங்கியது தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
அதனால் தான் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்த விநியோகஸ்தர்கள் முறையை ரத்து செய்து விட்டு மற்ற மாவட்டங்களில் இருப்பதைப் போன்று பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்பு முறையை ஏற்படுத்தி இருந்தால், அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சொல்வது போல் தற்போது பால் விநியோகத்தில் சப்ளை செயின் பாதிக்கப்படாமல் சரியாக இருந்திருக்கும்.
ஆனால் அவ்வாறு இல்லாததால் தான் தற்போதைய இயற்கை பேரிடரை பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட ஆவின் மொத்த விநியோகஸ்தர்கள் கள்ளச் சந்தை பேர்வழிகளை உருவாக்கி மிகப்பெரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு மூலம் விநியோகம் செய்ய உத்தரவிட்ட பாலும் குறிப்பிட்ட ஆவின் மொத்த விநியோகஸ்தர் மூலம் அனுப்பப்பட்டதால் அதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதே சமயம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்களின் கண்காணிப்பில், பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறைச் செயலாளர், ஆவின் நிர்வாக இயக்குநர் இருவரும், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் விநியோகம் செய்த ஆவின் பால் பாக்கெட்டுகள் மட்டுமே ஓரளவு மக்களை சென்று சேர்ந்தது என்றும் ஆவின் அலுவலர்கள் கூறுகின்றனர்.
எனவே மேற்கண்ட விசயங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
—
நன்றி,
சு.ஆ. பொன்னுசாமி,
நிறுவனத் தலைவர்,
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 96001313725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
08.12.2023 / காலை 11.58மணி.