Home>>அரசியல்>>வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
சீமான்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் அலகு ஒன்றுக்கு 21 பைசா வரை உயர்த்தி தொழில் முடக்கத்தை ஏற்படுத்தியுள்ள திமுக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடுமையான மின்கட்டண உயர்வு மூலம் தமிழ்நாட்டிலுள்ள 10 இலட்சம் தொழில் முனைவோர்கள் மற்றும் அதில் பணியாற்றும் 1 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை திமுக அரசு இருளாக்கியுள்ளது பெருங்கொடுமையாகும்.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தொழில் நிறுவனங்களும், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் குடிமக்களும் பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒருவித கட்டணமும், இரவில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 25% வரை அதிக கட்டணமும் செலுத்த வேண்டுமென இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசக அரசு ‘மின்நுகர்வோர் விதிமுறைகளில்’ புதிய திருத்தங்களைக் கொண்டுவந்து வரி என்ற பெயரில் மக்களை வாட்டிவதைக்க முடிவெடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் தன் பங்கிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது எதேச்சதிகாரப்போக்காகும்.

ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு் வாழ்வா? சாவா? நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், மக்களை மேலும் மேலும் கசக்கிப்பிழியும் விதமாக தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்துவது என்பது கொடுங்கோன்மையாகும்.

குடிமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகப்படுத்தி வழங்க வேண்டியது ஆளும் அரசுகளின் அடிப்படை கடமையாகும். அதனைவிடுத்து, வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டுப் பெருநிறுவனங்களை சிவப்புக் கம்பளம் விரித்து நாட்டிற்குள் அனுமதித்துவிட்டு அவற்றின் மின்தேவையை நிறைவு செய்வதற்காக, குடிமக்களும் சிறு, குறு நிறுவனங்களும. தங்களுடைய மின்பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள, நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையை நடைமுறைப்படுத்தத் துடிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Reply