வெளிநாட்டு வேலையும், கைநிறையக் காசும் இருந்ததால் விவசாயிகள் பிரச்சினை பற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப்பட்டதில்லை. இப்படிச் சொல்வதற்கு கேவலமாகவும், வருத்தமாகவும் இருக்கிறதுதான்.
இப்போது எனக்கு இருக்கும் ஒரே வருமானம் தோட்டத்தில் விளையும் தேங்காய் மட்டும்தான். ஒவ்வொரு முறையும் தேங்காய் வெட்டும்போது, மிகக் குறைந்த விலையில் தேங்காயை விற்றுவிட்டு, வெட்டுக் கூலி, சுமட்டுக் கூலி, பராமரிப்பாளர் சம்பளம், உரம், மருந்து போன்றவற்றுக்கான விலைகளை எல்லாம் கொடுத்துவிட்டு, வெறும் கையோடு வீட்டுக்கு வருகிறேன். பட்டால்தானே தெரிகிறது!
நம்மை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் கழகங்கள், அவர்களின் குறுநில மன்னர்கள் போன்ற அமைச்சர்கள், கோடீஸ்வர எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இம்மாதிரிப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. நாமாவது சேர்ந்து ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றுகிறது.
—
சுப. உதயகுமாரன்,
நிறுவனர்,
பச்சைத் தமிழகம் கட்சி.