Home>>அரசியல்>>ஏன் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தால் மட்டும் தவப்புதல்வன் திட்டம்?
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

ஏன் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தால் மட்டும் தவப்புதல்வன் திட்டம்?

(1-12) ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000/- வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று ஏன் அறிவிப்பை செய்யாமல் விடுகிறது அரசு?

ஏன் (6-12) ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தால் மட்டும் தவப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் எல்லாமே?

ஏனெனில், முதல் வகுப்பில் இருந்து என்று அறிவித்தால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விடும்.‌ முதலாம் வகுப்பிலிருந்து அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்று அறிவித்தால் 90% ஏழை நடுத்தர உயர் வர்க்க மக்கள் அனைவருமே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தான் சேர்க்க முன்வருவார்கள். தனியார் பள்ளிகள் அனைத்தும் ஒரே ஆண்டில் இழுத்து மூடப்படும் நிலைக்குப் போக வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் அதை நடத்தும் கல்வித் தந்தைகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.

ஆமாம், அரசுப் பள்ளிகளிலேயே இலவசக் கல்வி கொடுத்து எதிர்காலத்திற்கு மாதா மாதம் உயர்கல்வி பயில பணமும் தருவார்கள் என்றால் ஏன் தனியார் பள்ளிக்கு மக்கள் போகப் போகிறார்கள்? எலைட் பள்ளிகள் மட்டுமே இயங்கும் மற்ற பல ஆயிரம் தனியார் பள்ளிகள் இழுத்து மூடப்படும் வாய்ப்புகள் அதிகம்.

அடுத்து, அப்படி மக்கள் முதல் வகுப்பிலிருந்தே அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க ஆரம்பித்தால் இன்றுள்ள அரசுப் பள்ளிகளான ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் உயர்வர், அப்படி உயரும் போது கட்டாயம் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும். வகுப்புக்கு ஒரு ஆசிரியர் பாடத்துக்கு ஒரு ஆசிரியர் அவசியம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்ய முன்வரத் தயாராக இல்லாத அரசு இது போன்ற திட்டங்களை அறிவிப்பது குறித்து சமூகம் சிந்திக்க வேண்டும்.

ஏன் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்து சரியான ஊதியம் கொடுத்து கல்வித் தரத்தை உயர்த்த அறிவிப்பு இல்லையே…

அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கொடுத்தால் இந்த உதவித் தொகைக்கு அவசியமே இருக்காது.

தரமான கல்வியை ஒரு திட்டமாகக் கூட அறிவிக்க முன்வருவதில்லை.

பள்ளிக் கல்வி உயர்கல்வி இரண்டிலுமே ஆசிரியர்கள் பற்றாக்குறை அல்லது ஆசிரியர்களே இல்லை என்ற சூழலில் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்யாமல் மாணவர்களுக்கு உதவித் தொகை என்பது மட்டும் போதுமா என்பதற்கு சமூகம் தான் பதில் சொல்ல வேண்டும்.


சு.உமா மகேஸ்வரி
கல்விச் செயற்பாட்டாளர்.

Leave a Reply