Home>>அரசியல்>>தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழுவின் முற்றுகைப் போராட்டம்!
அரசியல்இந்தியாசெய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுமாவட்டங்கள்வேளாண்மை

தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழுவின் முற்றுகைப் போராட்டம்!

காவிரி நீரைப் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழுவின் முற்றுகைப் போராட்டம்!


காவிரி நிரைப் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூர் நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், நேற்று (16.07.2024) செவ்வாய் காலை எழுச்சியுடன் நடைபெற்றது.

போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தஞ்சாவூர் நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். நேரமாக நேரமாக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் உணர்வெழுச்சியுடன் முழக்கங்களையிட்டனர். இதனைத் தொடர்ந்து, நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வாயிலை அடைத்தக் காவல்துறையினர் அங்கு முள்வேலிகளை அமைத்து, அலுவலகத்தை மூடினர்.

முந்நூறுக்கும் மேற்பட்ட உழவர்களும், பொது மக்களும் திரண்ட நிலையில், அலுவலக வாயிலில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன், காவிரி உழவர் பாதுகாப்பு சங்கச் செயலாளர் திரு. சாமிமலை சுந்தரவிமலநாதன், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னதுரை, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திரு. த.சு. கார்த்திகேயன், காவிரி உரிமை மீட்புக் குழு திரு. சாமி. கரிகாலன், தமிழர் தேசியக் களம் அமைப்பாளர் திரு. ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு திரு. துரை. இரமேசு, பொறியாளர் செந்தில்வேலன், ஆழ்குழாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. இரெ. புண்ணியமூர்த்தி, காவிரி உரிமை மீட்பு குழு திரு. பழ. இராசேந்திரன், தமிழர் தேசியக் களம் மன்னை திரு. இரா. இராசசேகரன், காவிரி உரிமை மீட்புக் குழு திரு. க. விடுதலைச்சுடர், தமிழக விவசாயிகள் சங்கம் பூதலூர் திரு. பா. தட்சிணாமூர்த்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் பேரியக்கத் துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் திருச்சி வே.க. இலக்குவன், பூதலூர் ஒன்றியம் பி. தென்னவன், மூ.த. கவித்துவன், பெண்ணாடம் மா. மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் நா. இராசாரகுநாதன், க. தீந்தமிழன், மகளிர் ஆயம் துணைத் தலைவர் க. செம்மலர், ம. இலட்சுமி அம்மாள், கோவை பேராசிரியர் சௌ. காமராசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் திரு. நா. வைகறை அவர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பி ஒருங்கிணைத்தார்.

போராட்டத்தின் போது ஊடகவியாளர்களிடம் பேசிய ஐயா பெ. மணியரசன் அவர்கள், “கர்நாடகத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைக்கு எதிராகவும், முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, இனவெறியுடன் நமக்கு தண்ணீரை மறுக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திடவும், அதற்குத் தலைமை தாங்கிடவும் கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினார். “உரிமை நீரைப் பெறும் வரையில் போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் தொடரும்” என்றும் கூறினார்.

உழவர்களும், பொது மக்களும் “காவிரி மறுக்கும் கர்நாடகத்தின் மீது தமிழ்நாடு அரசே, பொருளாதாரத் தடை விதி!”, “காவிரி உரிமையைப் பெற்றத் தராத இந்திய அரசே, நரிமணம் பெட்ரோலை எடுக்காதே! நெய்வேலி மின்சாரத்தை அனுப்பாதே!” என்பன உள்ளிட்ட முழக்கங்களை, நீர்வளத்துறை அலுவலக வாயிலை முற்றுகையிட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு, சற்றொப்ப 2 மணி நேரமாக எழுப்பினர். அதன் பின் கலைந்து சென்றனர்.


செய்தி உதவி:
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு,
பேச: 98419 49462, 94432 74002

Leave a Reply