ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வட மாவட்டங்களில் தான்: மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 72.32% பணியிடங்கள் வட மாவட்டங்களில் இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் வடக்கு மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், அதை அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று முடிந்தது. அதன் பின்னர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் 5786 காலியாக உள்ளன. இவை தவிர இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2600&க்கும் கூடுதலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுவும் கூட உண்மையான கணக்கு இல்லை. தமிழக அரசு கடைபிடித்து வரும் சமூகநீதிக்கு எதிரான ஆசிரியர்; மாணவர் விகிதத்தின் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் மீதமுள்ள இடங்களில் தான் பத்தாயிரத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மிகவும் அதிகம்.
இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 72.32% வட மாவட்டங்களில் உள்ளன என்பது தான். அதிக காலியிடங்கள் உள்ள முதல் 10 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சேலம் ஆகிய 7 மாவட்டங்கள் வட தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும். கிருஷ்ணகிரி &892, திருவண்ணாமலை&720, தருமபுரி & 413, திருப்பத்தூர் & 364, கள்ளக்குறிச்சி & 325, செங்கல்பட்டு& 289, சேலம்& 289, கடலூர்&181, திருவள்ளூர்&165, இராணிப்பேட்டை & 146, விழுப்புரம் & 122, அரியலூர் & 120, வேலூர் & 94, காஞ்சிபுரம் & 65 ஆகிய 14 வட மாவட்டங்களில் மட்டும் 4185 காலிப்பணியிடங்கள் உள்ளன. இது ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் சென்னை, பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு பணியிடம் கூட காலியாக இல்லை. இவற்றில் சென்னை, பெரம்பலூர் தவிர மீதமுள்ள 8 மாவட்டங்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதும், இந்த மாவட்டங்கள் தான் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் முதன்மை இடங்களைப் பிடித்திருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும்.
அதற்கு மாறாக, ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கும் வட மாவட்டங்கள் தான் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடங்களில் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இடை நிலை ஆசிரியர் பணியிடங்களில் மட்டுமல்ல, பட்டதாரி ஆசிரியர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இப்போது தான் என்றில்லாமல், மாவட்ட அளவிலான பணி நியமன முறை கைவிடப்பட்டு, மாநில அளவிலான பணி நியமன முறை அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே வடமாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணி புரிவது இல்லை.
கடந்த காலங்களில் பல முறை நான் சுட்டிக்காட்டியவாறு, அனைத்து ஆசிரியர் நியமனங்களிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தொடக்கத்தில் அவர்கள் வட மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டாலும் கூட, காலப்போக்கில் பொதுக்கலந்தாய்வு மூலமும், ஆட்சியாளர்களின் விருப்பப்படி செய்யபடும் நிர்வாக பணியிட மாற்றங்களின் மூலமாகவும் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இட மாறுதல் பெற்றுச் செல்கின்றனர். அதனால் தான் வட மாவட்டங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; கல்வியின் தரமும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
கல்வியில் வட மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு தமிழக அரசும் மறைமுகமாக துணை போகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களும் அரசுக்கு பொதுவானவை. அனைத்து மாவட்டங்களையும் அரசு சமமாக நடத்த வேண்டும். ஆனால், தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் முழு அளவில் பணி புரிவதையும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு தடையின்றி கல்வி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் அரசு, அதே அக்கறையை வட மாவட்டங்கள் மீது காட்ட மறுப்பது ஏன்? என்பதே என் வினா.
பொதுக்கலந்தாய்வின் மூலமாகவே ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது என்று கூறி தமிழக அரசு ஒதுங்கிக் கொள்ள முடியாது. பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதற்கு முன்பாக மாநில அளவில் எத்தனை விழுக்காடு காலியிடங்கள் உள்ளனவோ, அதே அளவிலான காலியிடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் இடமாறுதல் கலந்தாய்வு விதிகள் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவில் காலி பணியிடங்கள் இருந்திருக்கும். அதைச் செய்யத் தவறியதால் தான் தென் மாவட்டங்களில் காலியிடமே இல்லாத நிலையில், வட மாவட்டங்களில் மிக அதிக காலியிடங்களும் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், தென் மாவட்டங்களில் மிக அதிகமாக இருப்பதும் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலை மாற்றப்படாத வரை கல்வியில் வட தமிழ்நாட்டை முன்னேற்ற முடியாது. தமிழகத்தில் ஆசிரியர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கூட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களில் பணிபுரியத் தயாராக இல்லை. வட மாவட்டங்களில் பணியாற்றத் தயாராக இருக்கும் உள்ளூர் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சமூக அநீதி காரணமாக ஆசிரியர் பணி கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்ற அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான ஒரே தீர்வு வட மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மண்டலமாக அறிவித்து, அந்த மண்டலத்திற்கான ஆசிரியர்கள் நியமனங்களில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்துவது தான். இந்த முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றுச் செல்ல மாட்டார்கள். சொந்த மாவட்டம் என்பதால் கூடுதல் அக்கறையுடன் பணி செய்வார்கள். எனவே, வட மாவட்ட ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
—
மருத்துவர் இராமதாசு,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்.