பல வாரங்களாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 16 முன்னணி நிறுவனங்களிடமிருந்து ரூ. 7,016 கோடி முதலீடு பெற்றிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர்.
ஏறத்தாழ 947 மில்லியன் டாலர் முதலீடு பெற்றிருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரத்தில் இது ஒரு பொருட்டே அல்ல.
இந்தியப் பொருளாதாரத்திலும் இது ஒரு குறிப்பிடத்தக்க தொகை அல்ல. கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை மட்டுமே அதானி குழுமம் ரூ. 15 ஆயிரம் கோடிக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
ஏன், தமிழ்நாட்டில்கூட ரூ. 7,016 கோடி ஒரு பெரும் தொகை அல்ல. திமுகவின் முன்னணித் தலைவர்களில் நிறைய பேருக்கு இதைவிட அதிகமான அளவு சொத்து சுகங்கள் இருக்கின்றன. உலகத்தை ரட்சிக்கும் ஒரு தலைவரின் முதன்மைக் குடும்பம், அதாவது மனைவி, மகன், மகள், மட்டுமே இலங்கையில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 1,887 மில்லியன் டாலர் பொருள் முதலீடு செய்திருப்பதாக அறிகிறோம்.
இயற்கைக்கும், மக்களுக்கும் எதிரான, உலகமயப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் தங்கவேட்டைக்குச் சென்று, “பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களைச் சந்தித்து இங்கே தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறோம்,” அன்புடன் கேட்டிருக்கிறோம் என்றெல்லாம் கதையளக்க வேண்டியத் தேவை என்ன?
தமிழ்நாடு முழுக்க (பரந்தூர், மேல்மா, காவிரிப் படுகை, கல்பாக்கம், கூடங்குளம், நியூட்ரினோ, எட்டு வழிச் சாலை என) பல்வேறு மாவட்டங்களில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுடைய, மீனவர்களுடைய, வணிகர்களுடைய, தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, மாற்றுப் பொருளாதாரம் குறித்து சிந்தியுங்கள் முதல்வர் அவர்களே.
உங்கள் வெள்ளைக்கார, உலகமய, “திராவிட முன்னேற்றம்” எங்களில் யாரையும் எங்கேயும், எந்த விதத்திலும் அழைத்துச் செல்லாது என்பதை தயவுசெய்து இனியாவது உணருங்கள்.
—
சுப. உதயகுமாரன்
பச்சைத் தமிழகம் கட்சி
நாகர்கோவில்,
செப். 13, 2024.