ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதல்வர் வெளிநாடுகள் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறேன் என்று சொல்லும் போது எனக்கு பகீர் என்று இருக்கும். கழக உடன் பிறப்புகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் எனக்கு அய்யோ எந்த விவசாய பகுதிகளை கைவைக்க போகிறார்களோ? என யோசிக்க தோன்றும். எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்கட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்
மருதகாசி எழுதிய பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
பல இயற்கை வளங்களை கொண்ட தமிழ்நாட்டில் உள்ளவற்றை தாதுப்பொருட்களை பயன்படுத்தி தொழில் ரீதியான முன்னெடுப்புகளை இந்த அரசு எடுக்காமல் ஒவ்வொரு முறையும் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதால் என்ன பயன்??
திராவிட மாடல் பேசும் திமுக அரசு விவசாயத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தது? கனிம வளங்களை வெட்டி எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது? மணல் குவாரிகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது?? ரிஷாட் என்ற பெயரில் அருவிகள், மலைகளை அழிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆக்கிரமிப்பை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது?
வெளிநாட்டில் இருந்து கம்பெனிகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து 99 வருஷ நிலத்தை இலவசமாகவும் , தண்ணீர் , மின்சாரத்தை இலவசமாகவும் கொடுப்பதால் யாருக்கு என்ன பயன்??எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை கொடுக்க முடியும்? அந்த வேலைவாய்ப்பு எத்தனை ஆண்டுகள் கொடுக்க முடியும்??
பல நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் சொல்கிறார். அந்த கம்பெனிகளை எல்லாம் தமிழ்நாட்டில் துவங்க இங்கு எங்கு இடம் இருக்கிறது? இறுதியில் கைவைக்கப் போகிறது விவசாய நிலங்களையும், பஞ்சமி நிலங்களையும் தான். சிப்காட் என்ற பெயரில் எவ்வளவு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
செய்யாறு மேல்மா சிப்காட், பரந்தூர் விமான நிலையம், திருவண்ணாமலை பாலியப்பட்டு சிப்காட் இவை எல்லாம் மூன்று போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களும், ஆறுகளும், குளங்களும் உள்ள பகுதிகள். மலைப்பகுதிகள் அழித்து சிப்காட் தேவையா?? சோற்றை விடக் நிறுவனங்கள் முக்கியமா?? இந்த நாட்டை விட முதலீடுகள் முக்கியமா?? மக்களை விட பணம் முக்கியமா? யாருக்கான வளர்ச்சி இது??
திருவள்ளுவர் மாவட்டத்தில் தேர்வாய் கண்டிகை கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மிச்சலின் டைர் கம்பெனி ஒன்றை ரூ 1500 கோடி முதலீட்டில் 1500 மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை அரசு கையகப்படுத்தி அந்த கம்பெனிக்கு கொடுத்தது..அதன் விளைவு இன்று அந்தப்பகுதியில் நிலத்தடி நீர் இல்லை. விவசாயம் இல்லை. காடுகள் இல்லை. வேலைவாய்ப்பு என்று மக்களை ஏமாற்றியது தான் மிச்சம்.
கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் விவசாய நிலங்கள் சிப்காட், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து கொடுத்து இருக்கிறது இரண்டு திராவிட கட்சிகளும். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் தான் லாபம் அடைந்தன தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் பல இலட்சக்கணக்கான விவசாயிகளும், நிலங்களும், நிலத்தடி நீரும், மின்சாரமும் பறிபோகும். இதைவிட அந்த கம்பெனிகள் வெளியிடும் புகை காற்று, நீர், நிலத்தை கடுமையாக பாதிக்க வைக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். பல நோய்க்களுக்கு வழிவகுக்கும்.
கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டில் தொழில் துவங்கிய கம்பெனிகள் எத்தனை? அந்த கம்பெனிகள் எத்தனை கோடியில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்தன? தமிழ்நாடு அரசு அந்த கம்பெனிகளுக்கு என்னென்ன சலுகைகளை அள்ளி கொடுத்தது? அந்த கம்பெனிகளால் எத்தனை இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது? தொழில் துவங்கிய கம்பெனிகளால் எவ்வளவு ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோனது? எத்தனை கம்பெனிகள் போதிய வருமானம் இல்லை என தொழிலை மூடிவிட்டு சென்றன? இந்த கம்பெனிகளால் இதுவரை வந்த சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளிடுமா??
கார்ப்பரேட் கம்பெனிகளை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் திமுக அரசு இங்குள்ள விவசாயிகள் பற்றியோ, தொழிலாளர்கள் பற்றியோ எந்த கவலையும் படவில்லை. ஏகாதிபத்திய கும்பலுக்கு சேவை செய்யத்தான் தொழிலாளர்கள் மீது 12 மணிநேர உழைப்பை திணித்தது. கடும் எதிர்ப்பு வந்தபின் அதை நிறுத்தியது. தொழிலாளர்கள் பற்றி துளியும் அக்கறை இல்லாத அரசு இது.
60 ஆண்டுகள் திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து இருக்கின்றன. தமிழ்நாடு என்ன தொழில் ரீதியான வளர்ச்சியை பெற்று இருக்கிறது? எத்தனை வேலைவாய்ப்புகளை கொடுத்து இருக்கிறது ? என கேட்டால் சுழியம் தான் என பதில் வரும். இந்த முதலீடுகளால் இழந்த விவசாய ஏக்கர் நிலங்கள் பல இலட்சங்கள். தமிழ்நாடு அரசின் கடன் சுமார் 6 லட்சம் கோடி. இத்தனை முதலீடுகளை ஈர்த்தால் ஏன் இந்த அரசு கடனில் இருக்க வேண்டும்? ஒரு தனி நபர் மீது மட்டும் ரூ 5 லட்சம் கடன் இருக்கு. இது தான் திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சியா?
எத்தனை வெளிநாட்டு கம்பெனிகளுடன் முதல்வர் ஒப்பந்தம் போட்டாலும் அத்தனை விவசாய நிலங்கள் தமிழ்நாட்டில் பறிபோக போகுது என்பது தான் உண்மை. விவசாயிகளை இந்த அரசு மேலும் கொல்ல போகிறது.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரை காக்க என்ன செயல்திட்டம் இந்த அரசிடம் உள்ளது?? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம என அறிவிக்கப்பட்ட இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணிகளை ஓ.என்.சி.எஸ் தொடர்ந்து செய்கிறது? அரசால் அதை தடுக்க முடிந்ததா??
வெளிநாட்டு முதலீடுகளால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. இடைத்தரகு வேலைக்கான தொகை வேண்டுமானால் கிடைக்கலாமே ஒழிய எந்த வேலைவாய்ப்பும் வராது. உழவு நிலங்களும், நிலத்தடி நீரும் பறிபோகலாமே தவிர எந்த முன்னேற்றமும் வராது. நிலம், நீர், காற்று மாசு அடையுமே தவிர ஒரு வளர்ச்சியும் இருக்காது. நோய்கள், சுற்றுச்சூழல் மாசு அடையும்.
இதற்கு ஏன் முதல்வர் வெளிநாடு போய் நேரத்தை வீணடிக்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இந்த அரசு யாருக்கானது என்று?? கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு சேவை செய்ய பாடுபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் பற்றி என்ன அக்கறை இருக்கிறது இந்த அரசுக்கு??
—
திரு. யா. அருள்,
எழுத்தாளர்,
சென்னை.