Home>>அரசியல்>>வட தமிழ்நாட்டில் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த வன்முறையும் வன்மமும் நீடிக்கும்?
அரசியல்காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

வட தமிழ்நாட்டில் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த வன்முறையும் வன்மமும் நீடிக்கும்?

மஞ்சக் கொல்லையை சேர்ந்த செல்லத்துரை (26) என்கிற இளைஞனை 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடிபோதையில் ஒன்று கூடி அடித்து இரத்த சகதியிலாழ்த்தியதோடு சுயநினைவற்ற நிலையிலும் அவரது நெஞ்சில் மிதிப்பதென்பது மனம் சகித்துக் கொள்ள முடியாத மாபெரும் வன்முறை. இக்கொடும் செயலை நிகழ்த்தியவர்களை அரசும் கடலூர் மாவட்ட நிர்வாகமும் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதோடு மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்குத் தொடுத்து பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லத்துரை தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்த பொழுது தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார். தனது தம்பியோடு பத்திரிக்கை வைத்துவிட்டு உடையூர் வழியாக தனது ஊருக்கு வந்து கொண்டிருந்த பொழுது ஆறு இளைஞர்கள் வழித்தடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் போக வேண்டும் எங்களுக்கு வழிவிடுங்கள் என்று செல்லதுரை கேட்ட நிலையில் வேண்டுமானால் வயலில் இறங்கி நடந்து போங்கள் என்று ஏளனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் வழி கேட்கவே அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து செல்லத்துரையை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

அடித்தவர்களில் ஒருவன் அலைபேசியில் செய்தி சொல்லி பத்துக்கும் மேற்பட்டவர்களை அழைத்து, அவர்களும் சேர்ந்து நின்று தாக்க பலத்த காயங்களோடு முகத்திலும் உடலிலும் ரத்தம் வழிய செல்லத்துரை மூர்ச்சையாகியிருக்கிறார். அவர் அசைவற்று கிடக்கும் நிலையில் கூட இரக்கமற்ற அவர்கள் ஆபாசமாக திட்டியபடியே செல்லத்துரை முகத்திலும் அவரது மார்பிலும் கால்களால் மாறி மாறி எட்டி உதைக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் பகிரியிலும் வேகவேகமாக பரவிக் கொண்டிருக்கும் அந்த காணொலியை காணும் பொழுது மனித நேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. இதில் ஆகப்பெரும் கொடுமை என்னவென்றால் அந்தக் காணொலியை அவர்களே எடுத்து அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டாடியதால் வெளிப்பட்டதுதான். இது எத்தகைய வன்மம் என்பதை போதை தெளிந்த புத்தியோடு குடித்தவர்களும், அவர்களை குடிக்க வைப்பவர்களும் சுய பரிசீலனை செய்ய வேண்டும்.

இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் இந்த வன்முறையும் வன்மமும் நீடிக்கப் போகிறது? வட தமிழ்நாட்டில் வாழும் இரண்டு பெரும்பான்மை சமூகங்கள் ஒற்றுமையோடும் அமைதியோடும் வாழ வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிற எங்களைப் போன்றவர்களுக்கு இது எவ்வளவு பெரிய பேரிடியான நிகழ்வு. இந்த மண்ணையும் இவ்விரு சமூகங்களையும் பிரித்தாளும் கூட்டங்கள் எப்பொழுது தங்களின் குரூரங்களை நிறுத்திக் கொள்ளப் போகிறது? சூழ்ச்சியும், குடியும் இந்த மண்ணின் வரலாற்றைக் குடித்துக் கொண்டே இருப்பதற்கு எப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்கள்? அடுத்தடுத்த படித்த தலைமுறையாவது சிந்திக்க வேண்டாமா? பதிலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இன்னொரு கூட்டம் புறப்பட்டால் அந்த மண்ணின் அமைதி என்னாவது? இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி விரும்புகிறதா?

சம்பவம் நடந்த செய்தியறிந்து மாவட்ட டிஎஸ்பி திரு.லாமேக் அவர்களிடம் பேசியபோது ஆறு நபர்களை கைது செய்துவிட்டதாகவும் ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாகவும் என்னிடம் பதிலுரைத்தார். காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட அந்த ஒருவரை மட்டுமல்ல சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை நபர்களையும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கடலூர் மாவட்ட நிர்வாகமும் கைது செய்வதோடு மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவது ஒன்றுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்பதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மாறாக கடமை தவறினால் நடக்கப் போகின்ற அனைத்து அசம்பாவிதங்களுக்கும் அரசே பொறுப்பேற்க நேரிடும் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
04.11.2024

Leave a Reply