Home>>அரசியல்>>திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து 6 பேர் பலி!
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதேர்தல்மருத்துவம்

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து 6 பேர் பலி!

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து 6 பேர் பலி! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 12ந் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் வெளியே வரமுடியால் திணறியுள்ளனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே இந்தியாவில் பல மாநிலங்களில் இதுபோன்ற தீ விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

திண்டுக்கல்லில் நான்கு மாடி கொண்ட இந்த தனியார் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதை தமிழக அரசு உரிய முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், விதிமுறைகளை மீறும் மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 3 லட்சம் நிவாரண நிதியினை உயர்த்தி தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்).

Leave a Reply