Home>>அரசியல்>>மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது! விடிவு காலம் எப்போது?
செந்தமிழன் சீமான்
அரசியல்இந்தியாஉலகம்காவல்துறைசிறிலங்காசெய்திகள்தமிழ்நாடு

மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது! விடிவு காலம் எப்போது?

மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது! மீண்டும் மீண்டும் கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர்? விடிவு காலம் எப்போது?

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 06.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது சிறையில் அடைத்துள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வழக்கம் போலத் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 74 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு 143 மீனவர்களும், 2022 ஆம் ஆண்டு 229 மீனவர்களும், 2023 ஆம் ஆண்டு 220 மீனவர்களும், 2024 ஆம் ஆண்டு 528 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். நடப்பு 2025 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை மட்டும் 75 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1250க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.

நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் தற்போது இலங்கை சிறையில் வாடும் 107 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 227 படகுகளையும் எப்போது மீட்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்கள் இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்?

அகண்ட பாரதம் பேசும் பாஜக, காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்துள்ள திமுக கூட்டணி, நாடாளுமன்றத்திற்கு உள்ளே போராடாமல் வெளியே வந்து குரல் எழுப்புவதால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பிற்காக பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?

தமிழ்நாட்டு மீனவர் நலனைப் பாதுகாக்கவும், இலங்கை இனவெறி கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பேரவலத்துக்கு கட்சத்தீவை மீட்டு நிலைத்த தீர்வை காணவும் இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி வருகின்ற பங்குனி 8ஆம் நாள் (22.03.2025) அன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் – தங்கச்சி மடத்தில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Reply