திருப்பூர் அருகே தோட்ட இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியர் படுகொலை – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலை, கொள்ளைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள தோட்ட இல்லத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இதே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் மற்றொரு படுகொலைச் சம்பவம் தமிழக காவல்துறையின் தோல்வியையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
திருப்பூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தனியாக வசித்துவரும் முதியவர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும், அவர்களின் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதும் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த முதியவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய வேண்டிய காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழக மக்களை திசை திருப்புவதிலும் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றுவதிலும், கவனம் செலுத்தி வருவதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, திருப்பூர் வயதான தம்பதியர் கொலைவழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
—
திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.