Home>>திரை விமர்சனம்>>காலா பாணி-இணையத்தொடர் விமர்சனம்
திரை விமர்சனம்

காலா பாணி-இணையத்தொடர் விமர்சனம்

காலா பாணி:.(Netflix web series).

இந்தியாவில் வெளியாகும் இணைய தொடர்கள் பெரும்பாலும் வெளி நாட்டு இணைய தொடர்களின் தரத்தை எட்டுவதில்லை.குறிப்பாக கொரியன் ,ஸ்பெயின் மொழிகளைப் போன்று .

அந்தக் குறையை தீர்க்க வந்தது தான் இந்த “காலாபாணி” இணையத் தொடர். இந்தியில் வெளியான இந்த தொடர் தமிழ் மொழி மாற்றத்திலும் உள்ளது.

என்னை பொறுத்தவரை இதுவரை இந்தியாவில் வெளிவந்த இணைய தொடர்களில் இதுவே ஆகச் சிறந்தது என்பேன்.

இப்படி ஒரு அற்புதமான உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆக்கத்தை இதுவரை நான் பார்த்ததில்லை.

சூழலியல், பழங்குடி மக்கள்,மனித உயிர்கள், உரிமைகள், உணர்வுகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அரசு மற்றும் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை மையப்படுத்திய சர்வைவல் த்ரில்லர் கதைதான் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘காலா பாணி’ வெப்சீரிஸ்.

Survival thriller என்ற வகைமையில் கிட்ட தட்ட 7 பாகங்களாக 7 மணி நேரம் ஓடுகிறது.

ஆனா கொஞ்சம் கூட நம்மை சலிப்படைய வைக்காமல் ஆரம்பம் முதல் இறுதி வரை படு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதையை நகர்த்தியதோடு மட்டுமல்லாமல் பல இடங்களில் நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைத்திருக்கிறார்கள் .

முழுக்க முழுக்க அந்தமான் தீவில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய வளர்ச்சித் திட்டம், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி என்கிற முகமூடிகளுடன் ஒரு சில மல்டிநேஷனல் கம்பெனிகள் எப்படியெல்லாம் இயற்கையை அழித்து, நோயை உருவாக்குகின்றன என்ற சமகால அரசியலைப் பேசுகிறது.

போட்டி நிறைந்த சூழலில் உயிர்வாழ, வெற்றிபெற மனிதர்களுக்குள்ளேயே நடக்கும் ஈவு இரக்கமற்ற வேட்டைதான் இந்தத் தொடர். இதில், யார் வேட்டைக்காரர்களாக வேட்டையாடுகிறார்கள், யார் விலங்காக இரையாகிறார்கள் என்பதுதான் ’காலா பாணி’ பேசும் அரசியல்.

இயற்கையோடு விளையாடுவது,சுற்றுப்புற சூழலுக்கு எதிராக செயல்படுவது எல்லாம் என்றைக்குமே மனித இனத்திற்கு பேராபத்தில் முடியும் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்கிறது இந்த தொடர்.

அந்தமான் தீவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உயிரை குடிக்கும் ஒரு கொள்ளை நோய் பரவுகிறது. ஆனால் அதற்கான மருந்தாக ஒரு செடியை ஒராக்கா எனப்படும் அந்த பழங்குடி மக்கள் கண்டறிகிறார்கள். அதன் மூலம் அந்த நோயிலிருந்து விடுபடுகிறார்கள்.

மீண்டும் 1943 இல் இரண்டாம் உலகப் போரின் போது , அந்த நோய் மீண்டும் பரவுகிறது. அப்போதும் அந்த ஒராக்கா பழங்குடியின மக்கள் அந்த செடியின் துணை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

மீண்டும் 1989 ஆம் ஆண்டும் அதேபோல அந்த நோய் பரவுகிறது. சில உயிர்கள் போகின்றன.

இப்படி இருக்க 2027 ஆம் ஆண்டு,

அந்தமான் தீவில் அங்குள்ள ஒரு பெரிய ஏரியில் இருந்து தலை நகருக்கு நீர்ப்பாசன திட்டம் செய்வதற்காக ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ATOM அங்கு வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் அந்தமான் தீவில் ஒரு மிகப்பெரிய ஒரு விழா கொண்டாட்டத்தையும் தங்கள் சொந்த செலவில் நடத்துகிறார்கள். அதை காண்பதற்காக ஏகப்பட்ட சுற்றுலாப் பயணிகளும் அந்தமான் நோக்கி செல்கிறார்கள்.

ஆனால் அந்த ATOM நிறுவனம் தங்கள் சுயநலத்திற்காக செய்த ஒரு காரியம் மீண்டும் அந்த கொள்ளை நோயை கடுமையாக மக்கள் மத்தியில் கடுமையாக பரவும் படி செய்கிறது.

இந்தக் கொள்ளை நோயிலிருந்து எப்படி அந்த மக்கள் மீண்டார்கள் எப்படி அனைவரையும் அந்த அரசாங்கம் காப்பாற்றியது, பழங்குடியின மக்கள் எப்படி அவர்கள் தங்களை காத்துக் கொண்டார்கள், நோயை குணமாக்க பழங்குடி மக்கள் உயிர்களை எப்படி இந்த அரசாங்கம் பணயம் வைக்கிறது என்பதையெல்லாம் பரபரப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் மிக அற்புதமாக சொல்லி இருக்கிறது “காலா பாணி”

அப்பப்பா அற்புதமான திரைக்கதையை தாண்டி என்ன மாதிரி விஷயங்களை நமக்கு சொல்கிறார்கள்..
டார்வின் தியரி முதல் ஒட்டகச்சிவிங்கிக்கு எப்படி கழுத்து நீண்டது வரை ஒரு மிகப்பெரிய அறிவியல் பாடத்தையே நமக்கு எடுத்திருக்கிறார்கள்.

எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள இயற்கை நமக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும். அப்படி அந்த இயற்கை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர்கள் பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு போவார்கள்.

இங்கே வளர்ச்சி என்பது ஒருவர் போடும் உடைகளோ வசிக்கும் இடமோ அவரது பேசும் மொழியோ தகவல் தொழில்நுட்பமோ அல்ல..

அவரது உடல் தான் அந்த வளர்ச்சி. ஒவ்வொரு இயற்கை பேரழிவின் போதும் அந்த உடல் எப்படி தாங்குகிறது என்பதுதான் அந்த பரிணாம வளர்ச்சி.

அப்படி பார்க்கையில் அப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியில் நகர்ப்புற மக்களை விட பழங்குடி மக்கள் பல கட்டங்கள் முன்னோக்கி இருக்கிறார்கள்..குறிப்பாக நோய் எதிர்ப்பு ஆற்றலில்..

பழங்குடி மக்களின் முக்கியத்துவம் அவர்கள் பின்பற்றப்படும் ஒவ்வொரு வழக்கத்திற்கும் பின்னாடி உள்ள ஒரு அறிவியல் பூர்வமான காரணம் என அற்புதமான ஒரு பாடத்தை நமக்கு வழங்கி இருக்கிறார்கள்..

இந்த கதையை ஒரே நேர்கோட்டில் எப்படி மக்கள் தங்களை அந்த கொள்ளை நோயில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்பதை சொல்லி இருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் இதை non linear முறையில் பலதரப்பட்ட வேறுபட்ட கதாபாத்திரங்களை வைத்து அவர்கள் மூலம் இந்த கதையை நகர்த்தியது அற்புதம்.இதை money heist போன்ற தொடர்களில் பார்த்துள்ளேன்.

மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ஒரு கணவன் அவனுக்கு மிகவும் தைரியமான ஒரு மனைவி இரு பிள்ளைகள்,

சாதியத் தீண்டாமையால் உயர் பதவியில் இருந்தும் பாதிக்கப்பட்டு தாழ்வு மனப்பான்மையில் உள்ள ஒருவரின் அறிவியல் விஞ்ஞானி மகள்,

தான் செய்த தவறால் தன் மருத்துவ க்காதலனை இழந்த ஒரு செவிலியப் பெண்,

இயற்கை சுத்தமாக வெறுக்கும் , பழங்குடி மக்களை வெறுக்கும், எப்படியாவது வாழ்வில் பெரிய ஆளாக வேண்டும் என்ற குறுக்கு புத்தி கொண்ட ஒருவன் , அவனுக்கு நேர் மாறான அவன் தம்பி இயற்கையும் வனத்தையும் பழங்குடி மக்களை நேசிக்கும் அவர்கள் தாய்,

எப்படியாவது அந்தமானில் இருந்து மாற்றமாகி போய் விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் ஒரு ஊழல்வாதி காவல் அதிகாரி,

தாங்கள் செய்த வினையால் தாங்களே பாதிக்கப்பட்ட நிலையில், எப்படியாவது அந்தமான் தீவை விட்டு வெளியேற நினைக்கும் ATOM நிறுவன முதலாளிகள்,

என்ன இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒரு பின் கதை சரியான நேரத்தில் அந்த பின் கதையை இணைப்பது என திரைக்கதையில் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

காலமும் சூழலும் ஒருவரை எப்படி மாற்றுகின்றது அல்லது கடந்த கால வலியில் இருந்து எப்படி அவர்களை மீட்கிறது, என்ற வாழ்க்கை தத்துவத்தை எல்லாம் படத்தில் மிகச்சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நெருக்கடியான காலகட்டத்தில் தங்கள் சுயநலத்திற்காக எவர் உயிரையும் எடுக்கும் நிலையில் உள்ள survival of the fittest என்ற நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்கள்,

என்ன இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

கண்டிப்பாக வாழ்வில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய ஒரு தொடர்..

அற்புதமான இயக்கம், அபாரமான திரைக்கதை, உலகத் தரம் வாய்ந்த இசை நடிப்பு என ஒரு முழுமையான ஒரு இணையத்தொடராக வந்துள்ளது. இப்படி ஒரு தொடரை காண ஏழு மணி நேரம் என்ன 70 மணி நேரம் கூட உட்கார்ந்து பார்க்கலாம்.

அவசியம் குடும்பத்தோடு பாருங்கள்.

அதி உன்னதமான ஒரு படைப்பு..

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

 

Leave a Reply