Home>>அரசியல்>>1921ல் மறைமலையடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் கூடி தைப் புத்தாண்டை அறிவிக்கவில்லை.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

1921ல் மறைமலையடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் கூடி தைப் புத்தாண்டை அறிவிக்கவில்லை.

அறிஞர் கூட்டம் – நடந்தது என்ன?

1921ல் மறைமலையடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் கூடி தைப் புத்தாண்டை அறிவித்தார்கள் – என்று சொல்பவர்கள் காட்டும் ஆதாரம் இந்த படம்தான். ஆனால் இந்த படம் அவர்கள் சொல்வதற்கு ஆதரவானது அல்ல, எதிரானது.

இந்த படம் 1935 மே 18 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திருவள்ளுவர் திருநாளில் (பிறந்தநாளில்) நடந்த கூட்டத்தின் புகைப்படம். படத்திலேயே அந்தக் காலக் குறிப்பு உள்ளது, அடிக்கோடிட்டு உள்ளோம். இதில் மே 18 என்பது தை அல்ல, அது வைகாசி அனுசம் (பனை).
இந்தப் படத்தில் உள்ள அனைவரும் வள்ளுவர் பிறந்தது வைகாசியில் என நம்பியவர்கள். தமிழ் அறிஞர்கள் 1935ஆம் ஆண்டு மட்டுமல்ல, 1927ஆம் ஆண்டு முதல் 1970கள் வரையில் வைகாசி அனுசத்தில்தான் வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.

திருவள்ளுவர் கிறிஸ்துவுக்கு 30 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று சொன்ன மறைமலையடிகள்கூட திருவள்ளுவர் வைகாசி அனுசத்தில் பிறந்தவர் என நம்பியவர்தான். இதனை அவரது பேச்சும் எழுத்தும் அவர் மகனே எழுதிய வரலாற்று நூலும் உறுதி செய்கின்றன.

மறைமலையடிகளின் மகன் மறை.திருநாவுக்கரசு அவர்கள் தனது ‘தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் வரலாறு’ என்ற நூலில், “திருவள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் அனுஷ நட்சத்திரம் (பனை) என்றே மறைமலை அடிகளார் குறித்தார். வைகாசித் திங்கள் அனுஷம் கி.மு.31 என்று தீர்மானித்தாரே அன்றி, தைத் திங்களைத் தீர்மானிக்கவில்லை. திருநாட் கழகம் நடத்திய விழாக்களும் வைகாசியில் நடத்தப்பட்டதே இதற்குச் சான்றாம்” – என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனவே தையில் திருவள்ளுவர் ஆண்டு என்பது இந்த அனைத்து அறிஞர்களையும் மதிப்பது அல்ல, அவமதிப்பது மட்டுமே.

தையில் திருவள்ளுவர் பிறந்தார் என நம்பியவர்கள்தான் வைகாசியில் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடினார்கள் என்பது தமிழுக்கு எதிரானவர்கள் பரப்பிய வதந்தியே.


செய்தி உதவி,
திரு. மன்னர் மன்னன்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.

Leave a Reply