Home>>கல்வி>>பெண் பத்திரிக்கையாளர் மிரட்டப்படுவதை அரசு பார்த்துக் கொண்டிருப்பதா?
தமிழ்நாடு சட்டமன்றம்
கல்விசெய்திகள்தமிழ்நாடு

பெண் பத்திரிக்கையாளர் மிரட்டப்படுவதை அரசு பார்த்துக் கொண்டிருப்பதா?

தலைமைச் செயலகத்தில் பெண் செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வெற்றிச்செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவிகள் விடுதிகளின் அவல நிலை குறித்து விளக்கம் அளிப்பதாக அத்துறையின் செயலாளர் லட்சுமிப் பிரியா அழைத்ததன் பேரில் அவரை சந்தித்து நேர்காணல் எடுத்த நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் லதா என்பவரை ஆதிதிராவிடர் நலத்துறையின் மாவட்ட அலுவலர் வெற்றிச் செல்வன் என்பவர் மிரட்டி வெளியேற்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் நேற்று முதல் (12/9/2024) பரவி வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகள் பராமரிப்பில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை அம்பலப்படுத்த வேண்டியது செய்தியாளர்களின் கடமைதானே; அதைத் தான் பெண் செய்தியாளர் செய்திருக்கிறார்.

அதற்காக அவரை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடர்ந்து கைது செய்வோம் என்று மாவட்ட அலுவலர் மிரட்டுவது அவரது அதிகார அத்துமீறலைத்தான் காட்டுகிறது. அதுவும் ஒரு துறையின் செயலாளர் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே குறுக்கே புகுந்து இத்தகைய மிரட்டலை விடுக்கிறார்.

பெண் செய்தியாளரை மிரட்டி அலுவலகத்திலிருந்து வெளியேற்றிய அதிகாரி வெற்றிச் செல்வனை பணி நீக்கம் செய்ய வேண்டும். பெண் செய்தியாளர் மிரட்டப்படுவதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த துறை செயலாளர் லட்சுமிப் பிரியாவிடம் இது குறித்து அரசு விளக்கம் பெற வேண்டும். செய்தியாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளை உடனடியாக, முறையாக பராமரிக்க அரசு முன் வர வேண்டும். அரசு, பத்திரிகையாளர் பாதுகாப்பை மிகுந்த கவனத்தோடு உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம்.

-–
கீதப்பிரியன்,
பொறுப்புத் தலைவர்,
சென்னை பத்திரிகையாளர் மன்றம்.


செய்தி உதவி:
திரு. வளர்மெய்யறிவான் தமிழியல்

Leave a Reply