Home>>அரசியல்>>நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி
அரசியல்அறிக்கைகள்கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிவேளாண்மை

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

“இராஜராஜசோழன்” என்ற “சோழராஜன்” ஒரு “ராஜா”.

முற்காலச் சோழன் கரிகாலன் காவிரியில் கல்லணை கட்டியும் கரைகளை பலப்படுத்தியும் நதியை கட்டுப்படுத்தியும் விவசாயத்திற்கு நீர் பாயவிட்டான்.

பிற்காலச் சோழர்கள் ஏரிகளையும் குளங்களையும் வெட்டி காவிரி நீரை சேமித்து, நெல்லுக்கு நீர் பாய்ச்சிய செய்தி அன்றைய பள்ளிப் பாடத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் சோழர்கள் கட்டிய கோவில்கள், வென்ற போர்கள், ஆட்சி முறைகள் சொல்லப்பட்டது. இன்றும் பேசப்படுகின்றன புகழப்படுகின்றன. போரில் கவரப்பட்ட செல்வம் கோவிலானது. மன்னனின் கருவூலம் நிரம்பியது. போரின் பலன் மன்னனுக்கு. போர் இல்லாத காலங்களில் வீரர்களின் உயிர்ச் சேதமில்லா உழைப்பு, ஏரி குளங்கள் ஆனாது. பலன் மக்களுக்கு.

பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில் 48 ஆண்டுகள் ஆட்சி செய்த வீரநாராயணன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழன் அன்று விவசாயத்திற்காக வெட்டிய வீரநாராயணம் ஏரி இன்று சென்னைக்கு குடிநீர் கொடுப்பது போல மன்னைக்கு குடிநீர் வழங்க, நகர்மன்ற தலைவர் சோழராஜனுக்கும் அமைச்சர் ராஜாவுக்கும் ஓர் யோசனை. “மன்னையின் மைந்தர்கள்” என்ற அமைப்பு, ஏழு ஆண்டுகளுக்கு முன் தூரெடுத்த நம்மாழ்வார் குளத்தை மாபெரும் ஏரியாக உருவாக்கி, “ராஜா” என்ற அவர்களது பெயருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இந்த நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு மட்டும் (தெருவுக்கு ஒன்று) குடிநீர் வழங்கியது. அந்த குளத்தின் கரையில் நடந்து செல்வது அப்போதய பொழுது போக்கு. அந்த காட்சியை தஞ்சைக்கு பேருந்தில் செல்லும் போது பார்த்து ரசித்துள்ளேன். தண்ணீர் பல நிலைகளில் வடிகட்டப்பட்டு மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு காலை 6 முதல் 7 வரை ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. தினமும் காலையில் தெரு குழாயடியில் வரிசையில் நின்று, தகரக் குடத்தில் நீர் பிடித்துவந்து வீட்டில் உள்ள அண்டாவில் நிரப்ப வேண்டியது எங்கள் பணி. அதன்பின்தான் படிப்பு. தேசிய பள்ளியில் படித்தபோது அங்கு கல்விச் சுற்றுலா சென்று பார்த்துள்ளோம். மேல் நிலைத் தொட்டி கிடையாது.

இந்த நம்மாழ்வார் குளத்திற்கு பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களையும், தனியார் நிலங்களை உரிய விலை கொடுத்து கையகப்படுத்தி நம்மாழ்வார் குளத்தை ஏரியாக விரிவாக்கலாம். நகருக்கு அருகில் உள்ள ஒரு சில ஏரிகளை ஆழப்படுத்தி மழை நீரை சேமித்து, அதில் பகுதி நீரை மன்னை நகருக்கு பயன்படுத்தலாம்.

மன்னைக்கு நிலத்தடி நீர் தேவை இல்லை. நிலத்தடி நீரில் (TDS) Total Dissolved Salt 400 உள்ளது. ஆற்று நீரில் TDS 100க்கும் குறைவு. அதனால் RO water filter தேவையும் இருக்காது. பாமணி ஆற்றில் உள்ள Shutters பக்கத்தில் பெரிய கிணறு அமைத்து, மோட்டார் மூலம் நீரை “நவீன சுத்திகரிப்பு நிலையத்திற்கு” அனுப்பி, அங்கிருந்து இப்போது இருக்கும் மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி, இப்போது போல வினியோகிக்கலாம்.

பாமணி ஆற்றில் ஆண்டுக்கு 9 மாதங்கள் தண்ணீர் கிடைக்கும். 3 மாதங்களுக்கு ராஜாக்கள் (Chairman and minister) முயற்சியில் வெட்டப்போகும் ஏரித் தண்ணீரை உபயோகிக்கலாம். நிலத்தடி நீரையும் பாதுகாக்கலாம்.

710 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சிங்கப்பூர், நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பெய்யும் மழையை கால்வாய்கள் மூலம் 15க்கும் மேற்பட்ட ஆழமான நீர் நிலைகளில் சேமித்து தன் தேவையின் பகுதியை ஈடுகட்டுகிறது. 6 அடி, 7 அடி, 8 அடி ஆழம் கொண்ட RCC கான்க்கிரீட் மழைநீர் கால்வாயில், மழையின் போது வெள்ளமாக ஓடும். மேகத்தை கவர காணும் இடமெல்லாம் மரங்கள். வருடம் முழுவதும் கசிவுநீர் சிறு வாய்க்கால் போல் ஓடிக் கொண்டிருக்கும். (ஒளிப்படத்தில் பார்க்க)

சிங்கப்பூர் மழைநீர் வடிகால்

மலேசியாவிடம் இருந்து தண்ணீர் வாங்குவதை குறைத்துக் கொண்டு தன்னிறைவுக்கு தயாராக உள்ளது சிங்கப்பூர்.

சிங்கப்பூரின் “Newater”


அங்கு பாதாள சாக்கடையில் உள்ள திடக்கழிவை நீக்கியபின் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை
“Newater” என்ற பெயரில் தொழிற்சாலை, தோட்டம் போன்ற உபயோகத்துக்கு பயன்படுத்துகின்றனர். அது குடிநீர் தரத்தில் இருக்கும்.

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.R.B. ராஜா அவர்கள் கவனத்திற்கு…

பாதாள சாக்கடைத் திட்ட வேலைகள் நடந்து கொண்டுள்ளது. பாதாள சாக்கடை கழிவு நீரை Newater ஆக சுத்திகரிக்கும் திட்டத்தையும் செயல் படுத்த வேண்டும். சிங்கப்பூரை விட சிறிய நகரம்தான் மன்னார்குடி.

ராஜாவும், ராஜனும் சேர்ந்து இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்தினால் உங்கள் பெயருக்கும் பொருத்தமாக இருக்கும். நகராட்சி சேகரிக்கும் குப்பைகளை வகை பிரிப்பதாக செய்தி படித்தேன்.

சிங்கப்பூரும் இப்படி பிரித்து, எரிக்க உகந்ததை எரித்து மின்சாரம் தயாரிக்கின்றனர். மன்னர்கள் சொடுக்கினால் போதும் தமிழ்நாட்டு இளம் பொறியாளர்கள் திட்டத்தை செயல்படுத்தி விடுவர்.

சோழர்களின் நீர் மேலாண்மை வியக்கவைக்கிறது.

இன்றைய புதுக்கோட்டை பகுதியில் ராஜராஜன் வெட்டிய ஏரியின் மதகில் உள்ள கல்வெட்டுச் செய்தி…

“எனக்குப் பின் இந்த ஏரியை தூரெடுப்பவரின் பாதங்களை இன்றே என் தலையில் தாங்குகிறேன்.”
தகவல் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் உரையில் கேட்டது.


கட்டுரை:
திரு. கெளதமன்,
ஓய்வுப்பெற்ற ஆசிரியர்,
மன்னார்குடி.

Leave a Reply