Home>>அரசியல்>>கோழிக்கோடு “கலை மற்றும் இலக்கியத் திருவிழா – 2024” நிகழ்வில் பல தவறான தகவல்களை பேசிய உதயநிதி
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுதிரைத்துறை

கோழிக்கோடு “கலை மற்றும் இலக்கியத் திருவிழா – 2024” நிகழ்வில் பல தவறான தகவல்களை பேசிய உதயநிதி

உதயநிதிக்கு உரக்கச் சொல்வோம்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அண்மையில் கோழிக்கோடு நகரில் நடந்த “கலை மற்றும் இலக்கியத் திருவிழா – 2024” எனும் நிகழ்வில் பேசியப் பேச்சில் பல தவறான தகவல்களை, வாதங்களை முன்வைத்திருக்கிறார்:

[] “தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, இலக்கியம் என்று சொல்லப்பட்டவை எல்லாம், பக்தி இலக்கியங்கள், புராணக்கதைகளாகவே இருந்தன. ஆனால் எங்கள் தலைவர்கள் தமிழ் இலக்கியத்தின் மூலம் பகுத்தறிவையும், அறிவியல் சிந்தனைகளையும் சேர்த்தனர்” (தினகரன், 3.11.2024).

[எவ்வளவு அப்பட்டமானப் பொய் இது? அறியாமையின் உச்சம் இது! இவருக்கு தமிழ் இலக்கியம் பற்றித் தெரிந்தது இவ்வளவுதான். இதனை தமிழ் இலக்கியவாதிகள் கண்டித்தாக வேண்டும்!]

[] “மும்பையில் இன்று இந்திப் படங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. மராத்தி படங்கள் கூட இல்லை. அதுபோலவே போஜ்புரி, பிகாரி, கரியான்வி, குசராத்தி திரைப்பட உலகமும் குறைந்த அளவிலான கவனத்தையே பெறுகின்றன. இதனால் தான் வட இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் தங்களுக்கென சொந்தமாக திரைப்பட உலகத்தைக் கொண்டிருக்கவில்லை.

எனவே நம்முடைய மொழிகளை நாம் பாதுகாக்கவில்லை என்றால் இந்தி நமது மொழியை மட்டுமல்ல, பண்பாட்டையும் அடையாளங்களையும் அழித்து விடும்” (தினகரன், 3.11.2024).

[திராவிட தமிழ்ப் பற்றுக்கானக் காரணமே இதுதானோ? ரெட் ஜயன்ட் அதிபர் உதயநிதிக்கும், இவர் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத்துக்கும், திரைப்படங்கள் பண்பாடு, அடையாளம் எல்லாமே. இவர்களுக்கு சினிமா வேலையும், தொழிலும் கூட அல்லவா? அது மட்டுமல்ல, ஏராளமான பணம், புகழ், அதிகாரம், முக்கியத்துவம் அனைத்தையும் பெற்றுத்தரும் கற்பகத்தரு ஆயிற்றே திரைத்துறை?

அதனால்தான் நூற்றாண்டு காலமாய் நீடிக்கும் திராவிட இயக்க ஆக்கிரமிப்பில், மேடைப்பேச்சு (=வாய்ச்சவடால்!) தவிர வேறு எந்தக் கலைகளும், நுண்கலைகளும் வளர்த்தெடுக்கப்படவில்லை. ஒரு கலாச்சாரத் தேக்கநிலைக்கு உள்ளாகியிருக்கிறது தமிழ்நாடு.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,” அன்பின் வழியது உயிர்நிலை,” “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றெல்லாம் சிந்தித்து, செயல்பட்டு, வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர் பண்பாட்டின் மீது தந்தை பெரியாரும், திராவிட இயக்கத்தாரும் தங்கள் அரசியலைக் கட்டமைத்தார்களே தவிர, உதயநிதிகள் உளறுவது போலல்ல.

நீண்ட நெடிய வரலாறும், தொன்மையும், பாரம்பரியமும் கொண்ட தமிழர் வாழ்வில், அண்மைக்கால திராவிட இயக்கம் ஓர் இன்றியமையாதப் பங்களிப்பைச் செய்திருப்பது உண்மை. ஆனால் அதையே, “திராவிடம்தான் ஒரே அரசியல் நெறி, பெரியார்தான் அதன் ஒரே தூதர்” என்றெல்லாம் உருட்டி, ஒரு கொள்ளைக்கூட்டம் தமிழர் வளங்களைத் தொடர்ந்து சுரண்டிக் கொழுப்பதற்கானச் சாக்காக (excuse!) வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


சுப. உதயகுமாரன்,
பச்சைத் தமிழகம் கட்சி,
நாகர்கோவில்,
நவம்பர் 3, 2024.

Leave a Reply