Home>>அரசியல்>>ஈரோடு – கிழக்கு இடைத்தேர்தல்: கட்டுத்தொகை இழந்ததற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை!
ஐயா மணியரசன்
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

ஈரோடு – கிழக்கு இடைத்தேர்தல்: கட்டுத்தொகை இழந்ததற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை!

ஈரோடு – கிழக்கு இடைத்தேர்தலில் (5.2.2025) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலெட்சுமி அவர்கள் கட்டுத்தொகையை (deposit) மீட்கக் கூடிய அளவிற்கு வாக்குகள் பெறவில்லை என்று இளக்காரமாகப் பேசி சாடியுள்ளார் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்!

நாம் தமிழர் கட்சியின் பெயரைச் சொல்லக்கூட உள்மனத்தில் உதறல் எடுத்து, “உதிரி” என்று எஜமான பாவனையில் பேசி எகத்தாளம் செய்துள்ளார் மு.க. ஸ்டாலின்! இந்திய ஏகாதிபத்தியவாதக் கட்சிகளான பா.ச.க., காங்கிரசு ஆகியவற்றிடம் உள்ள அரசியல் பிரபுத்துவ மனப்பான்மை அவற்றின் தலைமையில் கூட்டணி சேரும் தி.மு.க. தலைவருக்கும் ஒட்டிக் கொண்டதால் நா.த.க.வை “உதிரி” என்கிறார். இது திராவிட மாடல் வர்ணாசிரம வகை!

ஆனால் தமிழ்நாட்டின் நிலை – பழைய காலம் போல் திராவிட வழிபாட்டில் இல்லை! தமிழ்த்தேசியச் சிந்தனைப்புரட்சி பொங்கிப் பீறிட்டு, தமிழர்களின் நெஞ்சத்தில் குமுறிக் கொண்டுள்ளது. இந்த ஈரோட்டு இடைத் தேர்தலில் கூட 24,151 வாக்குகள் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. இன்னும் ஓர் ஆயிரம் + வாக்குகள் பெற்றிருந்தால் சீதாலெட்சுமி கட்டுத்தொகை பெற்றிருப்பார்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள், ஈ.வெ.ரா.வின் தமிழ் மொழி எதிர்ப்பு – தமிழின மறைப்பு – திராவிடத் திணிப்பு போன்றவற்றை இத்தேர்தல் பரப்புரைகளில் கடுமையாக அம்பலப்படுத்தி பரப்புரை செய்தார். ஆனால், இதற்கு எதிர்வினையாக – மறுப்பாக ஈ.வெ.ரா.வை முதன்மைப்படுத்தி, தி.மு.க. தரப்பினர் ஈரோட்டில் இத்தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளவில்லை! எனவே, ஈ.வெ.ரா. வேண்டுமா, வேண்டாமா என்பது முதன்மைச் சிக்கலாகும்படி தி.மு.க. தரப்பு இதில் ஈ.வெ.ரா.வை கதாநாயகனாக்கவில்லை. எனவே, ஈ.வெ.ரா. இத்தேர்தலில் தீர்மானிக்கும் ஆற்றலாக வைக்கப்படவில்லை!

ஆளும் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அடுத்தடுத்த நிலைக் கழகத் தளபதிகளின் ஆசை வார்த்தைகளையும், கையில் திணித்த காந்தி நோட்டுகளையும் புறக்கணித்து, தமிழ் இன உணர்வுடன் 24,151 பேர் நா.த.க.வுக்கு வாக்களித்துள்ளனர். மகிழ்ச்சியடையுங்கள்! தி.மு.க. பெற்ற கள்ள ஓட்டுகளைத் துல்லியமாகக் கணக்கிடும் கருவி நம்மிடம் இல்லை!

ஆளும் தி.மு.க.வின் அதிகாரத் தில்லுமுல்லுகளை அறிந்து கொண்ட அ.இ.அ.தி.மு.க., பா.ச.க. போன்ற கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அஞ்சி ஒதுங்கிக் கொண்டன! என்னே சனநாயக மாண்பு! நெருக்கடிகளுக்கிடையே நா.த.க. துணிந்து போட்டியிட்டது!
பொதுவாக உலகளவில் நாடாளுமன்ற (சட்டமன்றத்)த் தேர்தல் முறை என்பது, அதன் உள்ளடக்கம், வடிவம் முதலியவற்றில் காலாவதி ஆகிவிட்டது. பதவி-பண-விளம்பர வேட்டையாடிகளின் களமாகிப் போக இப்போதுள்ள தேர்தல் வழி-அதிகார முறைகள் வாய்ப்புகள் வழங்குகின்றன. மக்கள் வாக்களிக்கும் தேர்தல் தேவை; அதே வேளை, பட்டறிவின்படி தேர்தல் முறைகள் மாற்றப்படவேண்டும். கீழிருந்து, அதாவது ஊராட்சியிலிருந்து மேல்வரை மக்கள் மயப்பட்ட அதிகாரப் பகிர்வுகள் தேவை. வேறொரு வாய்ப்பில் இதுபற்றி வரிவாகப் பேசலாம்!
இப்போது நடைபெறும் தேர்தல் சூதாட்டங்களில், மக்களை வசப்படுத்தி வெல்வது எப்படி என்பதற்கான சூழ்ச்சிகளை வகுத்து, செயல்படுத்தித் தரும் “வாக்கு வேட்டை வழிகாட்டி” நிறுவனங்கள் இந்தியாவிலும் பெருகிவிட்டன. இவை மேற்கத்திய நாடுகளில் பிறந்தவை! இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்த வாக்கு வேட்டை வழிகாட்டிக் குழுமம் – பீகாரின் பிரசாந்த் கிசோருக்குச் சொந்தமானது!

பதவி-பணம்-விளம்பரம் மூன்றுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் நடத்துவோர் அதற்கேற்ப மக்களின் உளவியலை மாற்றி விடுகின்றனர். தங்கள் நாட்டின், சமூக-அரசியல்-பண்பாடுகளைத் தீர்மானிக்கும் பொறுப்புள்ள “குடிமக்கள்” (Citizens) என்ற இயற்கையான உளவியலை மக்கள் பெற்றுவிடாமல் சிதைத்துவிடுகின்றனர். அரசியல் வேட்டையாடிகளிடமிருந்து “பயன்களை” எதிர்பார்க்கும் வெறும் பயனாளிகளாக (beneficiaries) மக்களை மாற்றிவிடுகிறார்கள்; அந்த அரசியல் வேட்டையாடிகளுக்கான வாக்காளர்களாக (voters) மட்டும் தங்களைக் கருதிக் கொள்ள மக்களைப் பழக்கிவிடுகிறார்கள்.

இப்படி அரசியல் வேட்டையாடிகளால் உளவியல் ஊனமுற்றுக் கிடக்கும் மக்களிடையேதான் – மாற்றத்திற்கான எழுச்சியும், புரட்சியும் உலகில் உருவாகின்றன. தமிழ்நாட்டில் அவ்வாறு எழுந்துள்ள புத்தெழுச்சிதான் இப்போது பீறிட்டுக் கிளம்பும் தமிழ்த்தேசிய எழுச்சி!
ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! தமிழ்த்தேச இறையாண்மை மீட்பே இன்றைய தமிழ்த்தேசியத்தின் உயிர்நாடி! தமிழ்த்தேச இறையாண்மை மீட்புக்கேற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியாக வேண்டும்! இப்பொழுது உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற வடிவங்களுக்குள் மட்டும் நின்று கொண்டு இறையாண்மை உள்ள தேசங்களின் கூட்டமைப்புக்கானதாக அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட முடியாது. இந்திய ஏகாதிபத்தியவாத அரசியலையும், அவர்களுக்கான தமிழ்நாட்டுக் கண்காணிக் கட்சிகளின் அரசியலையும் ஓரங்கட்டி தமிழ்த்தேச இறையாண்மை மீட்பு மக்கள் திரள் அரசியல் ஆர்த்தெழ வேண்டும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடந்த மக்கள் திரள் போராட்டங்கள் முகாமையான உரிமைகளையும், பயன்களையும் தந்துள்ளன. (1) தமிழ்நாட்டில் உழவர்களின் உரிமைகளை மீட்டு, வேளாண்மைக்குக் கட்டணமில்லா மின்சாரம் கொண்டு வந்தது நாராயணசாமி நாயுடு அவர்களின் தலைமையில் நடந்த வீரம் செறிந்த உழவர் போராட்டங்கள்! (2) ஏறுதழுவதல் (சல்லிக்கட்டு) உரிமை மீட்டெடுக்கப்பட்டது. (3) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

எனவே, தேர்தல் அரங்கத்தில் ஈடுபடும் செயல்வீரர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்டுத் தொகை இழந்ததற்காகக் கவலைப்படத்தேவை இல்லை! தமிழ்த்தேசிய மக்கள் எழுச்சிக்கு மேலும் வேகமாகச் செயல்படுங்கள்!


ஐயா. பெ. மணியரசன்,
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Leave a Reply