Home>>அரசியல்>>தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 39 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர எவரும் தொழிலாளர்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் 4 தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக வாய் திறந்து பேசவில்லை. மக்களுக்கு எதிரான எல்லா சட்டங்களுக்கு எதிராக பேசும் திமுக தொழிலாளருக்கு எதிரான சட்டங்கள் குறித்து வாய் திறக்கவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை.

90 சதவீதத்திற்கு மேல் உள்ள அமைப்புச்சாரா தொழிலாளர்கள் குறித்து எந்த அரசியல்வாதிகளுக்கும் அக்கறை இல்லை. தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்த 44 சட்டங்களை சுருக்கி முதலாளிகளுக்கு சாதகமாக 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றி அதை நடைமுறைப்படுத்த துடிக்கிறது பாசிச பிஜேபி. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது, நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களை எதிர்த்து எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்த நேரத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றியது.

தொழிலாளர்களுக்கு எதிரான 4 தொகுப்பு சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் இந்தியா முழுவதும் ஒற்றை வாரியம் அமையும். தொழிற்சங்க உரிமை பறிபோகும். தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உருவாக்கிய 36 நலவாரியங்கள் அவுட். மாநில சட்டங்கள் போய் விடும். மாநில உரிமை இருக்காது. தொழிலாளர்கள் கம்பெனிகளில் கொத்தடிமை நிலை. முதலாளிகள் வச்சதுதான் சட்டம்.

மிக மோசமான இந்த சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வாருங்கள் என அமைப்புச்சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு கொண்டு கொள்ளவில்லை. நீட், குடியுரிமை, 3 விவசாய கருப்பு சட்டங்கள், கச்சதீவு மீட்பு, வக்பு வாரிய சட்டம் ஆகிய ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய இந்த அரசால், இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராக உள்ள 4 தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக ஏன் தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை??

கார்ப்பரேட் கம்பெனிகளையும், முதலாளிகளையும் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று, தண்ணீர், நிலம், மின்சாரம் என வாரி வழங்கும் தமிழ்நாடு அரசு, 12 மணிநேர வேலை சட்டத்தை கொண்டு வந்தது கார்ப்பரேட் கம்பெனிகளை குளிர்விக்க தான்.இந்த 12 மணி நேர வேலை சட்டம் வர அடிப்படை காரணம் 4 தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்கள் தான் காரணம். இந்த சட்டங்கள் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும்.

திமுக தொழிற்சங்கமான தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமையாக இந்த 4 தொகுப்பு சட்டங்களை எதிர்க்கின்றன. ஆனால் முதன்மையான எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 4 தொகுப்பு சட்டங்களை அதிமுக ஆதரித்து வாக்களித்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (மக்களவை உறுப்பினர்), விசிக தலைவர் தொல். திருமாவளவன் (மக்களவை உறுப்பினர்), வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் (சட்டமன்ற உறுப்பினர்) தவிர எந்த அரசியல் கட்சி தலைவர்களும் 4 தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக அறிக்கை கொடுக்கவில்லை. கண்டன ஆர்ப்பாட்டங்கள் கூட நடத்தவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைப்புச்சாரா தொழிலாளர்களை ஒழிக்கும் இந்த கொடிய சட்டங்களுக்கு எதிராகவும், கலைஞர், ஜெயலலிதா அவர்கள் உருவாக்கிய 36 நலவாரியங்கள், மாநில சட்டங்களை பாதுகாத்திடுங்கள் என தீர்மானம் நிறைவேற்ற சொல்லி சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சி.பி.எம் நாகைமாலி, சின்னதுரை, சிபிஐ தளி ராமச்சந்திரன், வேல்முருகன் ஆகியோர் தவிர எவரும் பேசவில்லை.

விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அவர்களிடம் பலமுறை பேசியும் சட்டமன்றத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற சொல்லி பேசாதது பெரும் வருத்தமே. விசிக தலைவர் 2 முறை அறிக்கை விட்டும் ஏன் சிந்தனை செல்வன் பேசவில்லை என்பது அவருக்குத்தான் வெளிச்சம். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொழிலாளர்கள் பற்றி துளி கூட அக்கறை இல்லை.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் (சட்டமன்ற உறுப்பினர்) 2 முறை அறிக்கை விட்டார். ஒருமுறை சட்டமன்றத்தில் பேசினார். தனித்தீர்மானம் கொண்டு வந்து பேச வாய்ப்பு கேட்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மக்கள் பிரச்சினைகளை துணிச்சலாக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் பேசும் வேல்முருகன் அண்ணாவுக்கு சபாநாயகர் வாய்ப்பு கொடுக்காதது ஏனோ? ஆனால் சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வரிடம் தொழிலாளர் விரோத 4 சட்டங்களின் ஆபத்து குறித்து விளக்கி கூறி, ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முதல்வரிடம் வலியுறுத்தியது மட்டுமல்ல ஊடவியலாளர்களை சந்தித்து இந்த சட்டங்களின் ஆபத்து குறித்து விலக்கியும் உள்ளார். திமுக அரசு 12 மணி நேர வேலை சட்டத்தை கொண்டு வந்தபோது துணிச்சலாக முதல்வர் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு சென்று, சபாநாயகர் இருக்கை முன்பு இந்த சட்டம் தொழிலாளர் விரோத போக்கு இதை உடனே திரும்ப பெற வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் வேல்முருகன் அவர்கள். அதன் பின் திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். கடும் எதிர்ப்பு வரவே திமுக அரசு 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெற்றது.

மக்கள் பிரச்சினைகளையும், மக்களுக்கு விரோதமான சட்டங்களையும் திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் துணிச்சலாக பேசக்கூடிய வேல்முருகன் அண்ணா அவர்களுக்கு அமைப்புச்சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகள். பல ஆண்டுகள் போராடி பெற்ற தமிழ்நாடு சட்டங்கள், 36 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், மாநில உரிமைகள், தொழிற்சங்க உரிமை இவை எல்லாம் பாசிச அரசு கொண்டு வந்த 4 தொகுப்புச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் பறிபோகும்.

இந்த தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே தமிழ்நாடு தப்பும். ஒன்றிய அரசு சட்டங்களை தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் ஈஸ்ரம் மூலம் மிக வேகமாக இணையத்தள பதிவு மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். CSC கணினி மையத்திற்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம் விட்டு அதன் மூலம் தனியார் கடைகளில் ஒரு பதிவுக்கு ரூ 900 வரை வசூலிக்கப்படுகிறது. இதில் அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு கமிசன் கிடைக்கிறது. அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாத சூழலில் எப்படி ரூ 900 கொடுத்து பதிவு செய்ய முடியும்? தொழிற்சங்கத்தை ஒழிக்க இந்த யுக்தியை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது.

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை மாநிலத்தில் உள்ள தொழிலாளர் துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது அதற்கு முட்டுக்கொடுப்பது மாநில அரசின் உரிமைகளை காலி செய்வதற்கான அர்த்தம். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த சட்டங்களில் உள்ள ஆபத்துகள் குறித்து புரிதல் இல்லாமல் இந்த சட்டங்களால் பாதிப்பு இல்லை என சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லி அதை எளிதில் கடந்து போகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும். மாநில உரிமை, சுயாட்சி பற்றி பேசும் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொழிலாளர்களை காக்க, ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் உடனே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் தொழிலாளர்களை நம்பித்தான் கட்சி நடத்துகின்றன. உடனே இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டமும், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லி சட்டமன்றத்த்தில் ஒன்றிய அரசின் 4 தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திமுக அரசை வலியுறுத்தி பேச சொல்ல வேண்டும்.


கட்டுரை:
திரு. யா. அருள் அவர்கள்,
செய்தி தொடர்பாளர்,
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு,
தேசிய அமைப்பாளர், NAPM.
13.04.2025.

Leave a Reply