Home>>செய்திகள்>>சீர்காழியில் நெல் திருவிழா
செய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

சீர்காழியில் நெல் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எதிர்வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று நெல் திருவிழா நடைபெறுகிறது. சீர்காழி பகுதியில் உள்ள இயற்கை உழவர்களை ஒருங்கிணைத்து நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை என்கிற பெயரில் இயற்கை விவசாயிகள் அமைப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய விதைகளை உழவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த நெல் திருவிழா ஆறாவது ஆண்டாக எதிர்வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சீர்காழி மணிக்கூண்டு அருகில் உள்ள மேலவீதியில் உள்ள ச. மு. இ. தொடக்க பள்ளியில் நடைபெறுகிறது.

நலம் அறக்கட்டளை நடத்தும் இவ்விழாவிற்கு திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விதை நெல்களை வழங்கி ஆசியுரை வழங்குகிறார்.

இவ்விழாவில் நடைபெறும் கருத்தரங்கில் இயற்கை வாழ்வியலை அடிபடையாக கொண்ட வாழ்வியல் முறை, நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுப்பொருட்கள், இயற்கை உழவு முறை பற்றியும் வல்லுனர்கள் பங்கேற்று கருத்துரையாற்றுகின்றனர்.

வழக்கமாக ஆயிரம் உழவர்களுக்கு மேல் கலந்துக்கொள்ளும் மிக பெரிய விழாவாக இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நெல் திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு சிறிய அளவில் உழவர்கள் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறுகிறது.

மொத்தம் அரை நாள் மட்டுமே விழா நடைபெறுகிறது.

விழாவிற்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளி விட்டு அமர்ந்து விழாவிற்கு ஒத்துழைக்க வேண்டும், தருமையாதீனம் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு பொன்னாடை, மாலை உள்ளிட்டவை அணிவிக்க முயற்சிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கபட்டது.


படம் மற்றும் செய்தி:
சுதாகர் (இயற்கை வழி விவசாயி)

Leave a Reply