Home>>இந்தியா>>மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைத் தமிழ்நாட்டுப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றது எப்படி?
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைத் தமிழ்நாட்டுப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றது எப்படி?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அவர்கள் “மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைத் தமிழ்நாட்டுப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றது எப்படி?” என்ற கேள்வியை தனது முகநூல் பக்கத்தில் எழுப்பியுள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


திட்டமிட்ட சதியாக இருந்தால், அது ஒன்றிய பாஜக அரசு மீண்டும் தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகவே இருக்கும்!

புதிராக உள்ள இப்பிரச்சனையை சரியான விசாரணைக்கு உட்படுத்தி தமிழகமாணவர் நலன் காக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதில், தெலங்கானாவைச் சேர்ந்த 34 மாணவர் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த 34 பேரும் மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் தமிழ்நாட்டு பள்ளிகளில் படித்ததற்கான சான்றிதழ் பெறாமல் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம்பெற முடியாது. ஆனால் அப்படி எந்தச் சான்றிதழும் இல்லாததால்தான் அந்த 34 பேரும் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம்பெற்றதில் திட்டமிட்ட மோசடி நடைபெற்றிருக்கிறது; அந்த மோசடிக்கு ஒன்றிய அரசுதான் முழுப் பொறுப்பு என்றும் அடித்துச் சொல்ல வேண்டியதிருக்கிறது.

இதைத் தமிழக அரசு உணர்ந்தும் புரிந்தும் கொள்ள வேண்டும் என்பதுடன், அந்த 34 பேரையும் இனி மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபடி நிரந்தர தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

நீட் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பையே கனவாக மாற்றிய பாஜக அரசு, தமிழக மாணவர் நலனுக்காக சிறு நடவடிக்கை எடுத்தாலும் அதையும் காலி செய்யும் விதமாக இப்படிப்பட்ட மோசடிகளில் ஒன்றிய அரசு தொடர்ந்து சதிச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க முடியாது என மறுத்துவரும் பாஜக அரசு, அதன் சார்பிலான ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்களித்திருக்கிறது; அதோடு அவற்றுக்கு தனியே ஒரு நுழைவுத்தேர்வை அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்குமே பாஜக அரசு செய்திருக்கும் பச்சைத் துரோகமாகும்.

இந்தப் பச்சைத் துரோகத்தின் தொடர்ச்சியாக, மேலும் ஓர் துரோகமாகத்தான் தமிழ்நாட்டின் தரவரிசைப் பட்டியலில் தெலுங்கானா ரேங்க் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 34 பேரைச் சேர்த்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்த விவகாரத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, வெளி மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய எம்பிபிஎஸ் இடங்களைப் பிற மாநில மாணவர்களுக்கு ஏன் தாரைவார்க்க வேண்டும்? ஏற்கனவே ஒன்றியத் தொகுப்புக்கென்று குறிப்பிட்ட இடங்களை வாரிக் கொடுத்துவிட்டு மீதியிருக்கும் இடங்களிலும் பிற மாநில மாணவர்களைச் சேர அனுமதிப்பது எந்த வகை நியாயம்? இது தமிழக மாணவர்களுக்குச் செய்யும் வஞ்சகம், இரண்டகம் மாத்திரமல்ல; ஒன்றிய அரசுக்குக் காட்டும் எஜமான விசுவாசமும் அடிமைத்தனமுமாகும்.

இனி எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் நடக்குமானால் தமிழ்நாடு தாங்காது மட்டுமல்ல, பொறுத்துக் கொள்ளாது என்பதையும் தமிழக அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைத் தமிழ்நாட்டுப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றது எப்படி?

திட்டமிட்ட சதியாக இருந்தால், அது ஒன்றிய பாஜக அரசு மீண்டும் தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகவே இருக்கும்!

புதிராக உள்ள இப்பிரச்சனையை சரியான விசாரணைக்கு உட்படுத்தி தமிழகமாணவர் நலன் காக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/228584773834/posts/10160465005413835/

Leave a Reply