Home>>அரசியல்>>தண்ணீர்

– மனோ குணசேகரன், புள்ளவராயன்குடி காடு, மன்னார்குடி
(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


நீரின்றி அமையாது உலகு

வரும் காலங்களில் மிகப் பெரிய போரட்டம், போர் என ஒன்று இருந்தால் அது தண்ணீர்காக தான் இருக்கும். இன்றளவும் அதே, ஆனால் அதை தாண்டிய மிக கோர வடிவமாக கூட இருக்கலாம் வருங்காலம். அதை தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று உள்ளோம், அது நம் தலையாய கடமையும் கூட.

வருங்கால சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது மட்டும் போதாது, அவர்களது வாழ்க்கைக்கு அதை தாண்டி ஒரு சுகாதரமான வாழ்க்கை தர வேண்டும். அதை அழித்து விட்டு எதை அவர்களுக்கு கொடுக்க போகிறோம்? அதில் முக்கிய விடயமாக தண்ணிர் உள்ளது.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அத்தியாவசியமான ஒன்றாகும். நமக்குக் குடிக்க, சமைக்க, சுத்தம் செய்ய மற்றும் குளிக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது. நம் பாட்டன் முப்பாட்டன் பெரும் ஆறு ஏரி, குளங்களில் குளித்தார்கள். நம் தந்தை கிணறுகள், ஆறு, ஓடை, குட்டை குளம் என குளித்தனர். நாம் சிறு வயதில் தொட்டியில் குளித்தோம் தர்போது ஒரு வாளியில் முடிந்து விட்டது பலரின் குளியல்.

விவசாயம் செய்ய மற்றும் தொழிற்சாலைகள் இயங்க நமக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது.

பூமியில் எழுபது சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே, ஆனால் பூமியில் இவ்வளவு தண்ணீர் இருந்தாலும் ஒரு சதவிகித அளவு தண்ணீர்தான் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மீதியுள்ள தண்ணீரெல்லாம் பனிக்கட்டிகள் மற்றும் கடலில் உள்ள உப்பு தண்ணீர் அதையும் நன்னீர் ஆக்கும் முயறசி செய்ப்பட்டது. ஆனால் அதில் சொல்லும் அளவு பயன் இல்லை.

இன்றைக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை என்கிற பிரச்சனை உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் வல்லரசு நாடுகள் அவர்களது தேவைகளுக்கு வஞ்சகம் செய்து நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்து அவர்களின் தேவைக்கு ஏற்றால் போல் ஏழைநாடுகளில் வளர்ச்சிக்கு உதவுகின்றோம் என்ற போர்வையில் அந்நாட்ன் தண்ணீரை மறைமுகமாக கொள்ளை அடிக்கின்றனர்.

எவ்வாறு என்றால், ஒரு பொருளை உருவாக்க தேவைப்பபடும் நீரை, மறை நீரை கொண்டு சொல்லலாம். (ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம். இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ என்ற விருது பெற்றவர்).

இந்த கொள்ளை இந்தியாவிலும் நடக்கின்றது என்பது எத்துனை பேருக்கு தெரியும்? நம்மிள்.

நம்ம சென்னையில் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72% வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கை பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

உள்ளாடை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நம் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர். பல கோடி செலவு செய்து செயற்கை கோள் தயாரிக்கும் வல்லரசு நாட்டுக்கு உள்ளாடை தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். (இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் இணையத்தின் மூலம் திரட்டப்பட்டது)

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. இன்றோ ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்க்கு தண்ணீர் இல்லை எனில் ஒரு கிராமத்தை அழித்திடு என்கிறது உள்ளாட்டு, பன்னாட்டு பெரு நிறுவனங்கள். அதிலுள்ள அரசியலை சிந்தித்து பாருங்கள்.

இங்கு ஒரு பன்னாட்டு நிறுவனம் தொழில்சாலை நிறுவுகின்றது என்றால் அதற்கு யார் துணை போகிறார் இங்கிருந்து என்ன வளங்களை கொள்ள அடிக்க போகிறார்கள் என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்லாம் நாங்கள் ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம் என. ஆனால் லட்சம் பேரின் வாழ்வாதாரங்களை மறைமுகமாக கொள்ளை அடிக்கப்படுகிறதே.

அதை விட கொடுமை குடிக்கும் தண்ணீர் விலை பொருளை மாற்றிவிட்டது.
தண்ணீர் தனியார்மயம் என்பது மறு குடியிருப்பு ஆதிக்கத்தின் (Colonization) கோர வடிவம் இது.

நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் இத்தனியார்மயத்தை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும். இங்கு ஏற்படும் தண்ணீர் பிரச்சனையை நேரடியாக சந்திக்க கூடியவர்கள் யார் நாம் தானே? ஆக என்ன செய்ய வேண்டும்?

இதை உணர்ந்து தண்ணீரை வீண் விரையம் செய்வது தடுக்கப் படவேண்டும் மழை காலங்களில் பெய்யும் மழைநீர் சேமிக்க பட வேண்டும். முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பதும் நீண்டகாலம் நீர் தேங்காமல் இருக்கும் ஏரி குளம் குட்டை கிணறுகளை மீட்டெடுத்து பாதுகாக்க பட வேண்டும். அதற்கு முன்பாக நீர் நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் உடனே அகற்ற வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை எடுக்கச் சரியான நேரம் இது. இல்லையெனில் எதிர்க்காலத்தில் ஏன் நாம் வாழும் காலத்திலே ஒவ்வொருவருக்கும் தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விகுறி. இன்று முதலே தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டு செல்வோம் குழந்தைகளுக்கும் இதன் மதிப்பை புரிய வைக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த பட வேண்டும் .

அதன் மூலம் வரும் காலங்களில் தண்ணீர் தனியார்மயமாதலும் தடுக்கப்படும்.
தண்ணிர் என்பது பணக்காரன், பன்னாட்டு நிறுவனம் மட்டுமே ஆடம்பரமாக பயன்படுத்தும் விடயம் என்பது உடைக்க படவேண்டும்.

நீரின்றி அமையாது உலகு.

குறிப்பு தமிழக மக்கள் கவனிக்க வேண்டியது;

தமிழக இன்றைய நிலை இயற்கை வளம் அழிக்கப்படுகிறது, ஏரிகள் கட்டுமான பகுதியாக பன்னாட்டு நிறுவனமாக ஆக்கிரமிக்கப்பட்டுகிறது, குளங்கள் காணாமல் போய்விட்டன. வளர்ச்சியின் பெயரால் மரங்கள் கணக்கில் அடங்கா அளவில் வெட்டப்படுகின்றன, கடத்தப்படுகின்றன.

மணல் கட்டுப்பாடே இல்லாமல் அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் பல அடி தூரம் கீழே சென்று கொண்டு இருக்கிறது ஒன்றை உணர வேண்டும். எவ்வளவு தூரம் தண்ணீர் கீழே போக போக அது விசம், கனிமத் தண்ணீரே வரும் பிறகு அது மனிதனுக்கும் கெடுதல் விவசாய மண்ணுக்கும் கெடுதல் இரண்டையுமே மலட்டாக்க வல்லது இது எல்லாவற்றையும் விட ஆண்டுக்கு ஆண்டு பெயும் பருவமழை குறைந்து கொண்டே வருகிறது.

எங்க மரம் இருந்தா தானே மழை வரும் இங்குதான் கட்டை அழித்து கடவுளை காட்டுகிறார்களே, பிறகென்ன செய்வது?

இந்த அக்கறை அற்ற நிலை தொடர்ந்தால் தண்ணீர் பிரச்னையை தமிழகம் எதிர் கொள்ளப்போகிறது. இன்றை நிலையை தாண்டி கோரமாக இதில் எள்ளவும் ஐயமில்லை.

ஏன் என்றால் நமக்கென சீவநதி இல்லை இருக்கும் தாமிரபரணியையும் பன்னாட்டு நிறுவனத்திற்கு பங்கிட்டு கொடுத்து விட்டனர். நாம் தண்ணீருக்காக முழுக்க முழுக்க அருகிலுள்ள மாநிலங்களையே நம்பி உள்ளோம். ஆனால் அதுவும் வரும் காலங்களில் பிரச்சனையே. இன்று வரை காவிரி பிரச்சனை தீர்வே இல்லாமல் உள்ளது. மற்ற மாநிலங்களும் தண்ணீர் தர மறுக்கிறது தடுப்பணைகள் கட்டப் போவதாக வஞ்சம் செய்ய தொடங்கி விட்டன. இந்த நிலையில் கூட நாம் தண்ணீரின் முக்கியத்துவம் உணரவில்லை.

சரி அரசாங்கமாவது உணரும் என்றால் இது வரை எந்த வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது. வெளிப்படையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களின் தேவை அறிவிப்பு அல்ல தீர்வு. தண்ணீரை சேமிப்பதற்கான எந்த முழு முயற்சியும் அரசோ, அதிகாரிகளோ மேற்கொள்ளவில்லை பொது மக்களாகிய நாம் தான் குட்டைகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் என அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.

அரசாங்கம் செய்ய வேண்டிய இந்தப் பணிகளை சமூக நலசார் அமைப்புகள் பொதுமக்களின் உதவியுடன் சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், திருச்சி, தஞ்சை மன்னை (சமீபத்தில் நம் மன்னையின் மைந்தர்கள் அமைப்பு மீட்டெடுத்த நம்மாழ்வார் ஏரி) போன்ற நகரங்களில் செய்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்களும் இவற்றை செய்யவில்லை என்றால், நிலைமை இன்னும் படு மோசமாக சென்று கொண்டு இருக்கும். தமிழக மக்களே உணருங்கள். தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ இயலாது.

புரட்சியாளர் லெனின் சொன்னது நினைவிற்கு வருகிறது. இதுவரை வாழ்ந்தது போல இனிமேல் வாழவே முடியாது என்கிற நிலை வரும்போது தான் மக்கள் புரட்சி செய்வார்கள் என்று. தமிழக மக்களும் அப்போது தான் உணர்வார்கள் போல தண்ணீரின் முக்கியத்துவத்தை.

Leave a Reply