Home>>இலக்கியம்>>மாற்றங்களை எதிர்நோக்கி
இலக்கியம்கவிதைபெண்கள் பகுதி

மாற்றங்களை எதிர்நோக்கி

பழைய நிலைக்குத் திரும்புதே
புதிய இதயம் விரும்புதே…
விடிந்ததை அறியாமல் சிற்றுண்டியை மறந்து
மதிய உணவு பசியெடுத்துக் கண் விழித்தது போக…
சுடசுட காப்பியுடன்
சூரிய உதயத்தைக் காண
காத்திருக்கிறது மக்கள் கூட்டம்!!
வெந்ததை வேண்டா வெறுப்பாய் உண்டு
வேலைக்குப் போன காலம் போக…
மொறு மொறுவென தோசையைத்
தட்டில் அடுக்கி, வழியனுப்பி வைக்கிறாள், அம்மா…

வீட்டிலிருந்தே வேலை!!
தாமாக தேநீர் வைக்க வந்த கணவன்
வியர்வையில் குளிக்க…
எண்ண அலைகளோ,
தாயையும் தாரத்தையும் நோக்கிச் சென்றது…
நாள் முழுதும் அனலில்
தவிக்கிறார்களே என்று
தன் சமையல் கலையைத் தோண்டும்
ஆண்கள் கூட்டம்!!
கேலி சித்திரங்கள் அனைத்தும்
சலித்துப் போக,
தாத்தா பாட்டியின் விரல் பிடித்து
விளையாடி மகிழ்கிறது
சிறார் கூட்டம்!!
பல்கடை அங்காடி மட்டுமே
என எண்ணியவர்கள்
பட்டம் விட்டும், பல்லாங்குழி ஆடியும்
பொழுதைப் போக்கிறது
இளைஞர் கூட்டம்!!
இப்படியே இருந்துவிட கூடாதா என
தோன்றும் இதயங்கள்…
ஆனால்
இப்படியே இறந்துவிட கூடாது என
பல கனத்த இதயங்கள்…

எதிர்ப்புகளை வெளிப்படையாய் தெரிவிக்க அறிந்தவர்கள்..,
எதிர்ப்புசக்தியை வளர்க்க அறியாமல்
கொத்து கொத்தாய் சடலங்களை
எடுத்துச் செல்கிறனர்….
தினக்கூலியின் பாடோ
பெரும் திண்டாட்டம் தான்…
ஒருவேளை சோற்றிற்கு ஒவ்வொரு வேளையும்
வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறது
ஓர் அப்பாவிக் கூட்டம்..!!
விவசாயியோ விளைச்சலும் போச்சு
விலையும் போச்சு என கதறுகின்றனர்.!!
வாடி வதங்கி நோகும்
பூக்காரியின் குடும்பம்!!
பாலாய் போகிறது
வியாபாரியின் வடிகாலில்..!!
இம்முறை தவறாமல் உன்னைப்
பார்க்க வருவேன் என்று கூறிய
பிள்ளைகளுக்காக எதிர்பார்த்துக்
காத்திருக்கும் முதியோர் இல்லம்..!!
வெளிநாட்டு மகன் மகளின்
நினைவுகளோடு தனிமையில்
தவிக்கும் பெற்றோர்கள்…!!

கிழவி இறந்ததை அறியாமல்
உணவுக் கொடுக்கும்
உன்னத கிழவன்(கணவன்)..!!
ஊரே அடங்கிருக்க, பழிவாங்கும்
எண்ணம் அடங்காமல்…
குற்ற உணர்வின்றி குழந்தையைக்
கொன்ற மூடர்கள்…!!
கொடூரங்களைக் கேட்கக் கேட்க
இறுகிறது இதயம்..!
காரணம் யாரோ என்று சிந்திக்கையில்..,
பாரம் தாங்காமல்
“சுவாசிக்க முடியாமல் திணறுகிறேன்…
என்னைத் துளைத்தும் இடித்தும்
நோகடிக்கிறார்கள்…காப்பாற்றுங்கள்…”
என பூமித்தாய் மன்றாடியிருப்பாளோ…?
இருந்திருக்கக்கூடும்…!
நாமோ இயற்கையை மறந்து
செயற்கையோடு செயற்கையான
வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தோம்…!
நிழலாக கைப்பேசி இருக்கின்றது
நிழல் தரும் மரங்கள் இல்லை…!
நெகிழி குப்பியில் தண்ணீர் இருக்கின்றது
நெஞ்சம் நெகிழ ஆறுகள் இல்லை…!

கேட்டு மகிழ மெல்லிசை மன்னன் பாடல் இருக்கின்றது
கூவி மகிழ சின்ன வர்ண குருவி இல்லை…!
நிற்காமல் செல்ல நெடுஞ்சாலை இருக்கின்றது
நடந்து செல்ல வயல்வெளிகள் இல்லை..!
உடனுக்குடன் செய்வதற்கு செயலி இருக்கின்றது,
மனிதமுடன் செயல்படும் மனிதர்கள் இல்லை…!
இந்த மாற்றங்களை மாற்ற
நம்மை மாற்றுங்கள்!!
எண்ணங்களை மாற்றுங்கள்…!
இயற்கை அன்னையைக் காக்க மீண்டும்
ஓர் அரிய வாய்ப்பு…!!!
அன்னையை மீட்டெடுக்க
மாறுவோம்..!! மாற்றுவோம்..!!


— நித்யா சம்பத், மன்னார்குடி
(2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)

Leave a Reply